இன்று ஒரு குறள் !

வியாழன், ஏப்ரல் 03, 2008

ஜெயமோகன் செய்தது சரியில்லைதான்.2

ஜெயமோகன் தனது பதிவொன்றில் முதுபெரும் நடிகர்களான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியை கிண்டலடித்திருந்தார். அது ஆனந்த விகடனில் பிரசுரமாக, அதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக ஜெயமொகனும், ஆனந்த விகடனும் பகிங்கர மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை ஜெயமோகனுக்கும், ஆனந்த விகடனுக்கும் திரையுலகை சார்ந்த யாரும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இதில் ஆனந்த விகடன் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது பட வேலைகளில் மூழ்கியது. ஆனால் ஜெயமோகன் இன்று வரை மன்னிப்பு கேட்காதது மட்டுமின்றி, தான் ஈடுபட்டு வந்த இரு பட வேலைகளில் ஒன்றிலிருந்து விலகியும் விட்டார். இது அனைவரும் அறிந்த செய்திதான்.

இதற்கு பதிவர்கள் ஜெயமோகன் செய்தது சரியா? இல்லை தவறா? என்ற ரீதியில், அக்கு வேறு ஆணி வேறு என நன்கு அலசி ஆராய்ந்து விட்டாலும், இராமயணத்து அணில் போல, என்னுடைய கருத்தையும் பதிய எண்ணியே இப்பதிவு.

என்னைப்பொருத்தவரை ஜெயமோகன் செய்தது சரியில்லைதான்.
ஆனால் அதற்காக நடிகர் சங்கம் போட்ட தீர்மானம் சரி என்பதல்ல என் கருத்து.

சரி, அப்படியானால் எது சரியில்லை?

நடிகர்களை விமர்சிக்கக் கூடாதா? அவர்கள் என்ன புனித பிம்பங்களா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். பொது வாழ்க்கைக்கு வந்த எவரையும் நாம் விமர்சிக்க உரிமையுண்டு. அது நடிகரானாலும், அரசியல்வாதியானாலும் சரி. ஆனால் ஒருவரின் ஊனத்தை கேலிசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல மனிதாபிமான செயலும் அல்ல. எம்.ஜி.ஆர். நடிப்பை கேலி செய்யலாம், கரெக்டாக கதாநாயகியை வில்லன் தொடும் நேரத்தில் எங்கிருந்தோ வந்து மேலேயிருந்து குதித்து காப்பாற்றுவதை கேலி செய்யலாம். 10, 20 பேரை ஒரே ஆளாக நின்று அடித்து முடித்து விட்டு கொஞ்சங்கூட களைப்பாகாமல் நாயகியோடு டூயட் பாடுவதை செய்யலாம் (இது எல்லா நாயகர்களுக்கும் பொருந்தும்).

ஆனால் ஒரு விபத்தில் சிக்கி குரல் வளம் இழந்த ஒரு மனிதனை, அவன் பேச்சை, கிண்டல் கேலி செய்யலாமா? அது முறையான செயல்தானா? மனிதாபிமான செயல்தானா?

ஒரு பதிவர் கூட எழுதியிருந்தார், ' திரைப்படத்தில் எல்லோரையும் கிண்டல் கேலி செய்கிறார்கள். ஆனால் இவர்களை மட்டும் யாரும் செய்யக்கூடாதா?' என்று.
அவருக்கு ஒரு சின்ன பதில். ஒரு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு காரெக்டர் கிண்டல் செய்யப்பட்டால், உடனே அந்த காரெக்டர் செய்யும் தொழிலைச் சேர்ந்தவர்கள், பிரச்சினையை கையில் எடுத்து போராடத் தொடங்குவது இப்ப ரொம்ப சர்வ சாதாரணமா போச்சி.

உதாரண்ம் சிவகாசி படத்தில் வக்கீல் காரெக்டர்.

அந்த காரெக்டர், வக்கீலுக்கு படித்து முடித்துவிட்டு கேஸ் பிடிக்க திறமையில்லாமல் ப்ளாட்பாரத்தில் தங்கிக்கொண்டு டீ, சிகரெட் செலவுக்கு நாயகனை அண்டியிருக்கும்படியும், அதனால் நாயகன் அந்த காரெக்டரை கிண்டல் கேலி செய்து சீண்டும்படியும் படைக்கப்பட்டிருக்கும்.

அந்த படத்தில் வக்கீல்களை பொதுவாக கிண்டல் பண்ணாவிட்டாலும், அந்த காரெக்டர், வக்கீல் என்பதால், வக்கீல்களை அவமதிப்பதாக கூறினால், அதற்காக போராடினால், அது எந்த விதத்தில் நியாயம் என்றே புரியவில்லை.

அப்படி பார்த்தால் ஒரு படத்தில் எந்தவொரு காரெக்டரும் எந்தத்தொழிலும் செய்ய முடியாதே! அப்படியே தொழில் செய்வதாக காட்டினாலும் அனைவரையும் நல்லவர்களாகவே, புத்திசாலிகளாகவே, திறமைசாலிகளாகவே காட்ட வேண்டியிருக்குமே. அப்படி படம் எடுக்க முடியுமா? எடுத்தாலும் நாமெல்லாம் பார்ப்போமா.

படம் எடுப்பவர்கள், தங்கள் படம் நன்றாக ஓடி நிறைய காசு பார்க்க வேண்டும் என்றே படம் எடுக்கின்றனர். அதனால் அதை மசாலா ரேஞ்சில் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை என்று எடுக்கின்றனர்.

அப்படி எடுக்கும் படத்தில் நகைச்சுவைப்பகுதிக்கு வரும் காரெக்டரில் ஒன்றை கொஞ்சம் அப்பாவியாகவும், கொஞ்சம் திறமை குறைந்தவனாகவும், கொஞ்சம் முட்டாளுமாகவும் காட்டி சிரிக்க வைக்கின்றனர்.
அந்த காரெக்டர் சில படத்தில் வக்கீலாகவும், சில படங்களில் டாக்டராகவும், இன்னும் சில படங்களில் ஆட்டோ ஓட்டுனராகவும், பல படங்களில் போலீஸாகவும் வரும்.
அதைப்பார்த்து ரசித்தோமா, சிரித்தோமா என்றுபோகாமல், அந்த காரெக்டர் எனது தொழிலை செய்வதால், என்னை கேலி செய்கிறான் என்று பிரச்சினை கிளப்புவர்களைப்பார்த்து சிரிப்பதா, அழுவதா ? என்றே புரிவதில்லை.

சரி அப்படியில்லாமல், 'சென்னை, திருவல்லிக்கேணி, சந்து தெரு 10ம் நம்பர் வீட்டு பயலாடா நீ' ன்னு ஒரு அசாதாரணமான காரெக்டரை பார்த்து இன்னொரு காரெக்டர் கிண்டலாக அழைப்பதாக இருந்தால், நிஜத்தில் அந்த முகவரியில் வசிக்கும் மனிதர் அந்த படத்தை எடுத்தவர்களின் மேல் மான நஷ்ட வழக்கே போடலாம். அதனால் ஒரு படத்தில் காட்டும் ஒரு காரெக்டரை வைத்து அனைவரையும் கிண்டல் பண்ணுகிறார்களே என்று சொல்லத்தேவையில்லை என்பதே என் கருத்து.

இன்னொரு பதிவர் எழுதினார், 'எம்.ஜி.ஆர் லதாவுடன் ரூம் போட்டார், விஜயகாந்த் விஸ்கி பாட்டிலோடு ரோட்டில் நடந்தார்' என்று. இதற்கும் ஜெயமோகன் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை.

தவிர, ஒவ்வொரு நடிகனும் என்ன செய்கிறான் என்று எல்லோர் வீட்டு சன்னலிலும் போய் எட்டியா பார்க்க முடியும்? மேலும் அவன் எப்படி போனால் நமக்கு என்ன? ஏதோ படத்தில் அவன் நடித்தது ரசிக்கும்படியா இருந்ததென்றால் ரசித்து விட்டு போக வேண்டியதுதானே. அதை விட்டு அவன் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கெதற்கு?

இல்லையில்லை பொது வாழ்வில் இருக்கும் அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்துக்கு உட்பட்டதே என்றால், அரசியல்வாதியிலிருந்து அனைவருக்கும் இது பொருந்துமே.
அவ்வளவு ஏன் வலையுலக பதிவர்களான உங்களுக்கும் (நான் கன்னி பதிவர் என்பதால் உங்கள் லிஸ்டில் சேரவில்லை) இது பொருந்துமே.
அப்படியானால் இனி பதிவர் எழுதும் பதிவை படிப்பதைவிட அவர் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயவே நேரம் சரியாக இருக்குமே.
அதனால் இது நிராகரிக்கப்படவேண்டிய கருத்து என்பதே என் கருத்து.


ஆக மொத்தம், ஜெயமொகன் எம்.ஜி.ஆரின் பேச்சை கிண்டல் செய்து எழுதியது சரியில்லைதான் என்பதே எனது கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக