இன்று ஒரு குறள் !

திங்கள், செப்டம்பர் 29, 2008

பொடியனும் தடியனும்




அந்த பள்ளிக்கூடமே அல்லலோகப்பட்டு கொண்டிருந்தது . அதன் பரபரப்பு, அந்த ஊரையே பற்றிக்கொண்டது. எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

தங்கள் காதில் விழுந்த விஷயத்தோடு தன் மனதிற்கு இதம் தரும் விஷயங்களையும் கற்பனையில் சேர்த்து ஊர்மக்கள் தங்களுக்குள் சுவாரசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

பிரச்சினை இதுதான் :

அந்த பள்ளியின் பத்தாவது வகுப்பில் படிக்கும் வாட்ட சாட்டமான பதினைந்து வயது வாலிபன் அதே பள்ளியில் மூன்றாவது படிக்கும் எட்டு வயது சிறுவனை அடித்து படுகாயப்படுத்தி விட்டான். சிறுவன் மருத்துமனையில் ஐசியு வில் அட்மிட்.

இளைஞன், சிறுவனை அடித்ததை அனைவருமே கண்டித்தாலும், ஒரு சாரார் அந்த சிறுவன் எதற்காக இளைஞனை சீண்டவேண்டும்? பிறகு இப்படி அடி உதை வாங்க வேண்டு்ம் என்று கருத்து கூறி இன்னொரு சாராரின் வெறுப்பை சம்பாதித்தனர்.

பல வழிகளிலும் விசாரித்து அலுத்து போனது பள்ளி நிர்வாகம்.

அந்த இளைஞன் சொன்னதையே சொன்னான்.

அதாவது அந்த சிறுவன் தன்னை எப்போதும் சீண்டி வந்ததாகவும், இன்று ஒரு படி மேலே போய் தன் மேல் கல்லால் எறிந்து தாக்கியதாகவும், அதன் பொருட்டே தனக்கு கண் மண் தெரியாதளவு கோபம் வந்து அவனை தாறுமாறாக தாக்கியதாகவும் கூறி தன் தலையில் ஏற்பட்ட காயத்தையும் காட்டினான்.

ஒரு சிலர் அவன் சொன்னதை நம்பினாலும், வேறு சிலர் இல்லையில்லை இவன், அந்த சிறுவனை கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தான் தாக்கியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினர்.

பள்ளி நிர்வாகமும், இளைஞன் சிறுவனை கொலை செய்யும் திட்டத்தோடு வந்து தாக்கினானா? இல்லை சிறுவன் இவனை காயப்படுத்தியதால் வந்த ஆத்திரத்தில் அறிவிழந்து தாக்கினானா? என்று உண்மை அறிவதற்காக ஒரு மூத்த ஆசிரியர் கொண்டு விசாரிக்க உத்தரவிட்டது.

அந்த பள்ளி இயங்கி வந்த இடம், அந்த ஊரில் பலசரக்கு கடை வைத்திருக்கும் பலராமனுக்கு சொந்தமானது.

ஊரில் புதிதாக சில கடைகள் முளைத்திருப்பதால் சில காலமாகவே அவருக்கு வியாபாரத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருந்தது.

அந்த கவலையில் இருந்த அவரின் காதிலும் இந்த செய்தி விழுந்தது. அவருக்கு இந்த இரண்டு பேரின் குடும்பமும் பரிச்சயமானதுதான்.

இரண்டு குடும்பமும் இவரின் வாடிக்கையாளர்கள் தான். இளைஞனின் பெற்றோர் எப்படியும் மாதம் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இவரிடம் வியாபாரம் செய்வர். சிறுவனின் பெற்றோர் 3000 ரூபாய்க்கு செய்வதே பெரிய விஷயம்.

ஆனால் சிறுவனின் பெற்றோருக்கு இந்த ஊரில் உறவினர்கள் அதிகம். எப்படியும் 20 குடும்பங்களாவது தேறும்.

அதில் இரண்டு மூன்று குடும்பங்கள் இவரிடம் தான் முன்பு பலசரக்கு பொருட்கள் வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது புது கடைக்காரரிடம் சென்று விட்டனர்.

அவர்களையும் சேர்த்து ஒரு 10, 15 குடும்பங்களாவது இவரின் கடைக்கு வந்தாலே போதும். மீண்டும் இலாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.

ஆனால் அந்த சிறுவனின் சொந்தங்களை நம் கடைப்பக்கம் திருப்புவது எப்படி?

இப்படி பலவாறாக சிந்தித்துக்கொண்டிருந்த பலராமனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதிக்க, கடையை கட்டிவிட்டு பள்ளியை நோக்கி நடந்தார்.

கட்டடத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் பலராமனை வரவேற்று பேசிக்கொண்டிருந்த பள்ளி தலைமையாசிரியர், அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போனார்.

ஆனால் எப்படி மறுப்பது? அவன் தான் பள்ளிக்கூட கட்டடத்தின் உரிமையாளராயிற்றே.

இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த தலையாசிரியரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் பலராமன்.

“ஆமாம் சார், என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த இடத்துக்கு சொந்தக்காரன் நான். அதனாலே இது பற்றி விசாரித்து உண்மை அறியும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. நீங்க பாட்டுக்கு உங்க விசாரணையை நடத்துங்க நாங்க பாட்டுக்கு எங்களதை நடத்துறோம்” என்று சொல்லிவிட்டு, தன்னோடு அழைத்து வந்தவரை காட்டி “இதோ இவரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் தான் என் சார்பாக இவர்தான் விசாரணை நடத்துவார்” என்றார்.

அடுத்த நாளே பலராமன் நியமித்த ஆசிரியர், தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு ஊர் மக்களுக்கு அறிவித்தார்.

“ இதன் படி நிரூபிக்கப்பட்டது என்னவென்றால் அந்த சிறுவன் ரொம்ப சாது். அந்த இளைஞனின் காயத்திற்கும் சிறுவனுக்கும் சம்பந்தமில்லை. அந்த காயம் எங்கேயாவது மரக்கிளையில் இடித்துக்கொண்ட விபத்தின் காரணமாக இருக்கலாம். இல்லை சிறுவனை கொலை அடி அடிக்க வேண்டும் என்பதற்காக இளைஞனே எங்காவது இடித்து காயம் ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் ” என்று .

இரண்டு நாட்கள் கழித்து பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியர் தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

“ அந்த இளைஞனைப் பார்த்து எப்போதுமே காண்டு அந்த சிறுவனுக்கு. அவனை கல்லால் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என்று பல நாட்கள் திட்டம் போட்டு, எப்போது தாக்கலாம்? எப்படி தாக்கலாம்? என்று ஒத்திகை பார்த்து விட்டு வந்து தான் சம்பவத்தை நிகழ்த்தினான். அதன் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தினால்தான் இளைஞன் சிறுவனை தாக்கினான்”.




டிஸ்கி1 : முடிவை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் மக்களே !

டிஸ்கி2: இது ஒரு கற்பனை கதை. எதையும், யாரையும் குறிப்பன அல்ல. அதனால் யாரும் எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம்.

(இதெல்லாம் ஒரு கதையானு கேட்கும் கனவான்களே, ரஜினி படம் பார்த்து விட்டு வரும் ஒரு சின்னபயல், ரஜினியை போலவே ஸ்டைல் செய்கிறேன் என்று கையை காலை ஆட்டி ஏதாவது செய்வதில்லையா அது போல என்று நினைத்து பெரிய மனது பண்ணி விட்டு விடுங்கள்).

செவ்வாய், செப்டம்பர் 23, 2008

விஜயகாந்த்+வடிவேல் லடாய் - சில சந்தேகங்களும், கேள்விகளும்

கடந்த சில நாட்களாக நடந்து வரும் விஜயகாந்த்- வடிவேல் லடாய் அனைவரும் அறிந்ததே.

இது சம்மந்தமாக கருத்துக்கள் பல மீடியாக்களில் (இணைய பதிவுகள் உட்பட) வந்த வண்ணம் உள்ளனர். இதிலே நம் கருத்தையும் சொல்லாட்டி எப்படினு ஆரம்பிச்சி பிரச்சினையை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் நிறைய ஏன்? ஏன்? ஏன்? கள் தான்.

சரி கேள்விகளை நமக்குள்ளே வச்சிக்கிட்டு தலையை பிச்சிக்கிறதை விட சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுடலாமே . பதிலை அவங்க சொன்னாலும் சரி இல்லை அவங்க சார்பாக அவங்களோட அனுதாபிகள் சொன்னாலும் சரி

வடிவேல் வீட்டைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான கண்டனத்துக்குறியவர்கள் மட்டுமின்றி சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது .

ஆனால் நடந்த சம்பவத்திற்கு பின் இரு தரப்பாலும் கொடுக்கப்பட்ட பேட்டிகள், அறிக்கைகள் இவற்றில் பல விஷயங்கள் புரியவில்லை. அதனால் தான் இந்த புதசெவி பதிவு ! ( நண்பர் TBCD மன்னிப்பாராக).



முத‌லில் வ‌டிவேலிட‌ம் சில‌ கேள்விகள்


1. தங்கள் வீட்டை சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்கி சேதப்படுத்தியது என்பதை பார்த்த நீங்கள் அது எப்படி நிச்சயமாக விஜயகாந்த் தூண்டுதல் பேரிலேயே வந்தவர்கள் அவர்கள் என்பதை தீர்மானித்தீர்கள்?

2. அவர்கள், ”முதல்வராக வரப்போகும் என் தலைவனிடம் மோதாதேஎன்று கூறியபடியே தாக்கினார்கள் என்பதால், அது விஜயகாந்த் அனுப்பிய படைதான் எனத் தெள்ளத் தெளிவாக தெரிவதாக கூறிய நீங்கள்,அந்த கும்பல்கலைஞர் வாழ்கஎன்று சொல்லியிருந்தால் கலைஞரின் கூலிப்படையென்றோ, ”புரட்சித்தலைவி வாழ்கஎன்றிருந்தால் ஜெயலலிதாவின் கூலிப்படை என்றோ கூறியிருப்பீர்களா?

அது என்ன லாஜிக் ?
வந்தவர்கள் தாங்கள் யார் என்று தாங்களே வாக்குமூலம் கொடுப்பார்களா?

3.விஜயகாந்தை தவிர இந்த உலகத்தில் வேறு எதிரிகள் யாருமே உங்களுக்கு கிடையாது என்கிறீர்கள். நல்லது.
ஆனால் பிறகு ஏன் நடிகை ஸ்ரேயா உங்களோடு ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் அஜித் தன் படத்திலிருந்து அவரை நீக்கினார்?

இங்கு அஜீத்தின் பிரச்சினை ஸ்ரேயாவின் குத்தாட்டமா இல்லை உங்களோடு அவர் நடித்ததா?

தவிர ,உங்களால் பாதிக்கப்பட்ட எவ்வளவோ துணை காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் சில பேர்கூட துணிந்து உங்களைப்பற்றி குறை கூறி பேட்டி கூட கொடுத்தார்கள்.
அதற்காக அவர்கள்தான் கூலிப்படை அனுப்பினார்கள் என்று உங்களைப்போல வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ பாணியில் சொல்ல வரவில்லை.

உங்களுக்கு விஜயகாந்தை தவிர இன்னும் பல எதிரிகள் இருக்க வாய்ப்பிருக்கிறதா இல்லையா? என்பதே இங்கே கேள்வி.

4. உங்கள் கருத்துப்படியே விஜயகாந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்று வைத்துக்கொண்டாலும், அவரை ஒழிப்பதற்காக தேர்தலில் எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளீர்களே தண்டனை விஜயகாந்துக்கா? இல்லை அந்த தொகுதி மக்களுக்கா?

மற்றவர்கள் உண்மையிலே மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, அரசியலுக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று சொல்லவாவது செய்கிறார்கள்.

நீங்கள் மட்டும்தான் தனியொரு மனிதனை எதிர்ப்பதற்காக தேர்தலில் நிக்கப்போவதாக சொன்னது மட்டுமல்லாமல் இன்று விடுத்த அறிக்கையில் கட்சியே ஆரம்பிக்க போவதாக சொல்லியிருக்கிறீர்கள் இது நியாயமா?

அதற்கு பதில் ஏன் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் எதிரிலியே நீங்கள் ஒரு மண்டபம் கட்டி அவ்ரின் வருமானத்தை குறைக்க கூடாது?

இல்லை அவர் படம் ரிலீஸ் அன்று நீங்கள் கதாநாயகனாய் நடித்த படத்தை ரிலீஸ் செய்து வசூலில்அவருக்கு பாடம் புகட்ட கூடாது ?

இல்லை அரசியலில் தான் அவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், தேர்தல் சமயம் அவர் நிற்கும் தொகுதியில் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களிலே சிறந்தவர் என தாங்கள் தீர்மானிக்கும் ஒருவருக்கு இலவசமாக பணிகள் மற்றும் பிரசராம் செய்து விஜயகாந்தை மண்ணை கவ்வ வைக்க கூடாது?

5. உங்களை யாரும் தூண்டிவிடவில்லை என்று சொன்னீர்கள் சரி! அது எப்படிஇந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது”. என்று எதை வைத்து இந்த அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினீர்கள்?

கொஞ்சம் உதைக்கிறதே!




அடுத்து விஜ‌ய‌காந்திட‌ம் சில கேள்விகள்

1. வடிவேல் வீட்டைஎன் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயாஎன்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கிய அந்த கும்பல் தங்கள் கட்சியினர் அல்ல என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

இது சம்பந்தமாக தங்கள் கட்சியினரிடம் விசாரணை நடத்தினீர்களா ?


2. அந்த கும்பல் தங்களால் ஏவி விடப்படவில்லை என்று உறுதி பட மறுத்திருக்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி தொண்டர்களே ஆர்வமிகுதியால் ஏன் அப்படி செய்திருக்க கூடாது?
உங்கள் வக்கீல் உங்களை கேட்காமலே முன் ஜாமின் மனு தாக்கல் செய்துவிட்டார் என்று உங்கள் தரப்பு சொன்னது போல்.

3. சரி எப்படியோ விசாரணை செய்தவரையில் உங்கள் கட்சிக்கும் அந்த வன்முறை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று உறுதிபட கண்டு கொண்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் எதை வைத்து கலைஞர் தான் படை அனுப்பினார் என்றும் வடிவேலுவை பின்னிருந்து இயக்குகிறார் என்றும் சொன்னீர்கள்?

இதுவும் அதே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ கதைதானே!

4. அதேபோல் வடிவேல் உங்களை எதிர்த்து தேர்தலில் நிக்கப்போவதாக அறிவிக்க அதற்கு பதில் சொல்லும் விதமாக கலைஞரே எதிர்த்து நின்றாலும் பயப்பட மாட்டேன் என்று எதற்கு இதற்குள் அவரை இழுக்கிறீர்கள்?

5. வன்முறையால் பாதிக்கப்பட்டவர், தாக்கிய வன்முறை கும்பலை ஏவிவிட்டவர் நீங்கள்தான் என்று காவல் நிலையத்தில் ஆணித்தரமாக புகார் தந்ததால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ”கலைஞர் என் மீது பொய் வழக்குகள் போடுகிறார்என்று இதையும் அரசியல் ஆக்கலாமா?
இது நியாயம் தானா?



இறுதியாக சில பொதுக்கேள்வி
கள்

1.தனக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான செயல் செய்து மக்களிடம் தனது இமேஜை குறைத்துக்கொள்வாரா?

அதுவும் லோக்சபா தேர்தல் வரப்போகும் இத்தருணத்தில்?

2.கம்யூனிஸ்ட்கள் திமுகவிடமிருந்து பிரிந்து விட்டன. தமிழ்நாட்டு அரசியல் நியூட்டன் விதிப்படி நியாயமாக அதிமுக வுடன் தான் அடுத்த தேர்தலில் கூட்டு சேரவேண்டும். மாறாக தேமுதிக தலைவரை மார்க்ஸிஸ்ட் தலைவர் வரதராசன் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் எரிச்சல் அடைந்த (பாதிப்பு அடைய இருக்கும்) யாரோ ஒருவர் ஏன் இப்படி செய்திருக்க கூடாது?

இன்னும் பல ஏன்?கள் மிச்சமிருப்பினும், இப்போதுக்கு இது போதும். பதில் கண்டு பிற!

சனி, செப்டம்பர் 20, 2008

சொந்த செலவில் சூன்ய‌ம் வைத்துக்கொண்ட நாகாலந்து தீவிர‌வாதிக‌ள்!

ரயிலை மறித்து கச்சா எண்ணை திருட்டு-விஷவாயு கசிவில் 25 பேர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லோங்க் மாவட்டத்தில் சரக்கு ரயிலிலிருந்து கச்சா எண்ணையை திருட வந்தவர்களில், விஷ வாயு கசிவு மற்றும் டேங்கர் வெடித்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாய்டிங் என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பாதை வழியாக கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலை 70க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒரு டேங்கரிலிருந்து கச்சா எண்ணையை திருட ஆரம்பித்தனர்.

ஆனால்துரதிர்ஷ்டவசமாக அந்த டேங்கரிலிருந்து விஷ வாயு கசிந்துள்ளது. மேலும் அந்த டேங்கரும் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணை விமானங்களுக்கான அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும்.

இந்த சம்பவம் நாகாலாந்து-அஸ்ஸாம் எல்லையில் நடந்துள்ளது. இறந்தவர்களில் பலர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நாகா தீவிரவாதிகளும் அடக்கம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் இப்படி அடிக்கடி டேங்கர் ஏற்றிக் கொண்டு வரும் ரயில்களை மறித்து கொள்ளை அடிப்பது நடந்து வருகிறது. தீவிரவாதிகள்தான் பெரும்பாலும் இவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த முறை அது அவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது.


இப்படி கொடூரமான முறையில் இறந்து போனவர்களும், படுகாயம் அடைந்தவர்களும் என்னதான் தீவிரவாதிகளாக இருந்த போதிலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதால் நம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம்.

வியாழன், செப்டம்பர் 18, 2008

என்ன‌ கொடுமை முருகா இது!

க‌ட‌ந்த‌ சனிக்கிழமை மாலை கணிணி முன் அமர்ந்து வலைப்பதிவுகளை மேய்ந்துக் கொண்டிருந்தபோது, “week end ன் போதும் கணிணிதானா, குடும்பத்தைப் பத்தி கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரு“ என்ற என் இல்லத்தரசியின் அர்ச்சனை, அவர்கள் தாளிக்கும் கடுகு உளுந்து பொறியும் ஓசையை மீறி என் காதுகளில் கேட்டது.


நான் கணிணி முன் அமரும்போதெல்லாம், அவர்கள் விழித்து இருக்கும் பட்சத்தில் இந்த வசனம் வாடிக்கையாக கேட்பதுதான்.

”ஏன் கொஞ்சம் நேரம் மனுஷன் ரிலாக்சா இருக்க விட மாட்டியா” என்று தப்பித் தவறி நான் கேட்டுவிட்டால் அவ்வளவுதான்.

”என் ராசி நான் உங்க கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தைப்படுறேன். இல்லாட்டி எங்கேயோ எப்படியோ இருந்திருப்பேன்” (ஏதோ பில்கேட்ஸ் அவர் பையனுக்கு சம்பந்தம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கே புகுந்து லவட்டிகிட்டு வந்த மாதிரி) என்ற பில்டப்போடு, ஒரு முடிவற்ற அழுகாய்ச்சி காவியம் ஆரம்பமாகிவிடும் .

அதுக்கு பயந்து கணினியை மூடிவிட்டு, ”என்ன பிரச்சி்னை, என்ன வேணும் உனக்கு?” என்றேன்.

“வீட்டிலே கடுகு இல்ல, பருப்பு இல்ல, அது இல்ல இது இல்ல“ என்று நீட்டிக்கொண்டே போய் கடைசியாய் ”உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுப்பு இல்ல” என்று முடித்தாள் என் இல்லாள்.

”ஒகே! ஒகே! இதுதானா பிரச்சினை? வாங்கிட்டு வந்திட்டா போச்சி. லிஸ்ட் தயார் பண்ணு நான் உடை மாத்திகிட்டு வரேன்” என்று கூறிவிட்டு தப்பிச்சா போதுமென அவசரமாக நகர்ந்தேன்.

அடுத்த ஐந்தாவ‌து நிமிடத்தில் தெருவில் இறங்கினேன். நம்ம ஊர் மளிகை சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் வடபாரீஸுக்கு தான் (paris nord க்கு மொழிபெயர்ப்பு சரிதானே) செல்ல வேண்டும். அங்குதான் இந்திய இலங்கை கடைகள் நிறைந்த பகுதி உள்ளது.

காரை எடுக்கலாம் என்ற நினைப்பை உடனடியாக உதறினேன். காரணம் சாதாரணமாகவே அங்கு காரை நிறுத்த இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு. அதிலும் இன்று சனிக்கிழமை கேக்கவே வேணாம்.

சரியென்று பேருந்து, ட்ரைன் எல்லாம் எடுத்து வடபாரீஸ் வந்திறங்கி, தமிழ்க்கடைகள் நிறைந்த பகுதிக்கு நடந்து சென்றேன். வழக்கம்போல திருவிழா கூட்டம் போல நம் தமிழ் மக்கள் கூட்டம்.

இந்த பகுதி நம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியோ என வியக்க வைக்கும்படி எங்கு பார்த்தாலும் தமிழ்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் அவைகளில் மொய்க்கும் நம் தமிழ் மக்கள். குறிப்பாக சனிக்கிழமை மாலையென்றால் இந்த பகுதி முழுவதும் நம் மக்கள்களால் நிரம்பிவிடும்.

பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? வாரம் முழுதும் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டு, வார இறுதியில் கிடைக்கும் இந்த 2 நாள் ஓய்வில், செலவில்லாமல் ரிலாக்ஸா இருக்க இங்கு வருகிறார்கள். ரிலாக்ஸுக்கு ரிலாக்ஸும் ஆச்சி, அப்படியே வீட்டிற்கு தேவையான சாமான்களும் வாங்கின மாதிரியும் ஆச்சி.

விட்டுப்பிரிய மனமில்லாதவர்கள் குடும்பத்தினருடனும், ஆளை விட்டா போதும் நிலையுடையோர் தனியாகவும் வாராவாரம் இங்கு வந்து விடுகின்றனர்.

இப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கையில் தி்டீரென்று தோளில் ஒரு கை.

”என்னப்பா எதிரில் வர்ற ஆளுகூட தெரியாம எந்த கோட்டையை பிடிக்க திட்டம் போட்டுக்கிட்டு போற?”

அடடே! நம்ப சிவராமன். என் பால்ய நண்பன், தன் இரண்டு் பிள்ளைகளோடு சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா, சும்மா வேடிக்கைப்பார்த்திட்டே வந்ததிலே உன்னை கவனிக்கத் தவறிட்டேன். கோவிச்சிக்காதே. சரி, சொல்லு எப்படியிருக்கே?”

சிவராமன், சிறு வயதிலிருந்து என் கூட படித்தவன். படிப்பில் கெட்டிக்காரன். நானெல்லாம் கல்லூரி வாசலை தொட்டதுமே, போதுமென்ற மனதோடு மற்றவருக்கு வழி கொடுத்து ஒதுங்கிகொண்டேன். ஆனால் இவன் பேராசை பிடித்தவன். அப்படியெல்லாம் செய்யாமல், மேலும் மேலும் படிப்பைத் தொடர்ந்து கொண்டே போனான்.

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வரையில் ஊரில் படித்துக்கொண்டிருந்தவன், அதுவும் வகுப்பில் முதல் மூன்று பேரில் ஒருவன். எப்போதும் முதல் வகுப்பில்தான் பாஸ் செய்தான்.

பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து கொஞ்சம் வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் மனைவி தங்களின் ஒன்ற‌ரை வ‌ய‌து பையனோடு மீன்கடையிலிருந்து என்னைப்பார்த்து சிரித்தபடியே வெளியே வந்தார்.

”எப்படிம்மா இருக்கே? என்ன சொல்றான் உன் கடைக்குட்டி செல்லம்?” என்றேன்.

”ம்ம் இப்ப நல்லா இருக்கான் என்றார்”. என்று சொன்னார்.

சிவராமனின் மூன்றாவது பிள்ளை சுகப்பிரசவத்தில் பிறக்கவில்லை. மருத்துவர் குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்காமல் நாட்கள் தள்ளிப்போக, இதற்கு மேல் விட்டால் தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கருதிய மருத்துவர் குழு அறுவை சிகிழ்ச்சை செய்து வெளியே எடுத்தார்கள்.

சிவராமனும் தன் பங்கிற்கு சீர்காழீ் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி வரை குழந்தை நல்லபடியாக பிறந்தால் அங்கங்கே வந்து நேர்த்திக்கடன் செய்வதாய் வேண்டிக்கொண்டான்.

அப்படி சிரமப்பட்டு பெற்றதாலேயோ அல்லது கடைக்குட்டி என்பதாலேயோ அவன் மேல் இருவருக்கும் அளவு கடந்த பாசம்.

பாசத்தோட அளவு சொல்லனும்னா, யாரோ ஒரு மரத்தடி ஜோசியர் பிள்ளைக்கு தண்ணீரில் கண்டம் என்று சொல்லி விட்டாரென்று இந்த பிள்ளைக்கு layer baby (தமிழாக்கம் தெரியவில்லை) கட்டாமல் வளர்த்தவன். ஏண்டா என்று கேட்டதற்கு, ”அவன் கழிக்கும் சிறுநீரும் தண்ணிதானே அதனால் அவனுக்கு ஆபத்து வந்ததென்றால்?” என்று பதிலளித்தவன்.

”என்னப்பா பலத்த யோசனை?”.

“ ஒண்ணுமில்லே சிவா, உன் பிள்ளையைப்பத்திதான் யோசனை. அது சரி, உன் மனைவி என்ன சொல்றாங்க? இப்ப‌ ந‌ல்லாருக்கான்னா என்ன‌ அர்த்த‌ம்? குழந்தைக்கு என்ன ஆச்சு?” என் விசாரித்தேன்.

”போன வாரம் ரொம்ப சீரியஸா போய்ட்டான்பா”

”என்னாச்சி? எதனால??”

“தெரியல. திடீரென்று பேச்சி மூச்சியில்லாம போய்ட்டான்”

”ஐயையோ! அப்புறம்?”

”எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. புள்ளையை உலுக்கி குலுக்கி பார்த்தேன் சின்ன அசைவுகூட இல்லை”

”சொல்லு அப்புறம் என்ன செஞ்சே?”

“உடம்பெல்லாம் ஜில்லின்னு வேற ஆய்டுச்சி“

“சொல்லுடா அப்புறம் என்ன செஞ்ச? உடனே SAMU க்கு போன் அடிச்சியா இல்லியா? இல்லே நீயே hopital தூக்கிட்டு போனியா? டாக்டர் என்னா சொன்னாங்க? ஒண்ணும் பயப்படுற மாதிரி இல்லையே? சொல்லு.”

”இல்லே அதெல்லாம் செய்யல. வீட்டிலுள்ள முருகன் படத்திற்கு முன்னாடி நின்னு வணங்கிட்டு பிள்ளைக்கு விபூதி பூசி விட்டேன். சரியா ரெண்டே, நிமிஷம் புள்ளை கண்ணைத்தொறந்து பார்த்து சிரிக்கிறான்.”

”என்னது ????????????,
சரி போகட்டும் அப்புறமாவது மருத்துவரிடம் அழைத்து போனியா?”

”எதுக்கு அநாவசியமா? இதோ பாரு, அன்னையிலிருந்து இன்னைக்கி பத்து நாளாவது. எந்த டாக்டர்கிட்டேயும் போகல. எப்படி இருக்கான் பாரு கலகலனு.........”

நான் வாய‌டைத்து போய் நிற்ப‌தைப்ப‌ற்றி க‌வ‌லைப் ப‌டாம‌ல் பேசிக்கொண்டே போனான் சிவ‌ராம‌ன்.

சிவராமனின் கல்வித்தகுதி : MA, M.PHIL (PHYSICS)