இன்று ஒரு குறள் !

திங்கள், அக்டோபர் 13, 2008

இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !

இரண்டு நாள் week end விடுமுறையில் இந்த முறையாவது முடித்திருத்தம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

இது ஒரு உலகமகா விஷயமின்னு இதற்கொரு தீர்மானம் என்று பல்லை நற நறப்பவர்களுக்கு, ‘ஐயா நாங்கள் இங்கு உள்ளூரில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் முடித்திருத்தம் செய்துக்கொள்ள மாட்டோம். சில பல கிலோ மீட்டர் தூரத்தில் கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் தான் செய்து கொள்வோம் (இனப்பற்று?).

அதற்கு போய் வர காத்திருக்க என அரை நாள் விடுமுறை அம்பேல் ஆகிவிடும். இதனால் கடந்த மூன்று வாரங்களாக போக வேண்டும் என் நினைத்து நினைத்து முடியாமல் போய்விட்டது அதற்காகதான் இந்த தீர்மானம். இப்ப ஓகே வா ! ஹி.. ஹி..’

தீர்மானித்த மாதிரியே காலையில் கிளம்பி விட்டேன். அப்புறமென்று தள்ளிப்போட்டால் வேற வேலை வந்து இந்த வாரமும் போக முடியாமல் போய்விடும்.
ஏற்கனவே பணியிடத்தில் முடியை விலக்கிட்டு மூஞ்சை தேடுறானுங்க.

கடையில் கொஞ்சம்தான் கூட்டம். அங்கு பணிபுரியும் ஐந்து பேரில் ஒருவர் மட்டும் ஃப்ரீ. நான் வழக்கமாக மண்டையை கொடுப்பவரிடம் மூன்று பேர் வெயிட்டிங். நான் நான்காவது.

கடை உரிமையாளர், வேலை செய்யும் நான்கு பேர், மற்றும் வந்து போகும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அனைவரும் இலங்கையை சார்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் (ஈழத்தமிழர்கள்?).

சில மணித்துளிகளுக்கு பிறகு, என்னுடைய முறை வந்ததும், வாடிக்கையாக வெட்டுபவரின் முன் அமர்ந்து என் தலையை ஒப்படைத்தேன். வழக்கம்போல் என் தலையில் கை வண்ணம் காட்டியபடியே என்னுடன் உரையாட ஆரம்பித்தார்.

உரையாடல், வேலை, வெயில், சீஸன், சினிமா என்று எங்கெங்கோ தொடர்ந்து பின் நின்றது .

சிறிது நேர நிசப்தத்திற்கு பிறகு, “இந்தியாவில் ஏதுனும் விசேடமோ?” என்று வினவினார்.

எனக்கொன்றும் புரியவில்லை.

“என்ன கேட்டிங்க?” இது நான்.

பக்கத்தில் முடி வெட்டிக்கொள்ள வந்த இன்னொரு இளைஞன், “இல்லே அண்ணை, இந்தியாவில் எலெக்க்ஷன் ஏதும் வருதோ எண்டு கேட்டவர்” என்று விளக்கினார்.

அதற்கு நானும், “ ஆமாம்! இன்னும் சில மாதங்களில் பார்லிமெண்டுக்கு எலெக்‌ஷன் வருகிறது” என்றேன்.

உடனே அனைவரும் அர்த்தப்புஷ்டியோடு ஒருவ‌ருக்கொருவ‌ர் பார்த்து சிரித்துக் கொண்ட‌ன‌ர். எனக்கொன்றும் புரியவில்லை ‘எதற்கு அனைவரும் இப்படி நக்கலாக சிரிக்க வேண்டும்? ’

என் முழிப்பை பார்த்து விட்டு கடை உரிமையாளர் சொன்னார், “ஒண்றுமில்லை, தமிழ் நாட்டில் திடீரென்று எல்லா அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழரைப் பத்தி பேசுதே, அதற்கு என்ன காரணமென்று இதுவ‌ரைக்கும் புரியாம‌ல் இருந்தது, அதுதான் ” என்றார்.

நானும் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு வெளியேறினேன்.

ஆக நம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு கண்டு ஏமாறும் தமிழ் நாட்டு மக்கள் போல் இல்லை.

இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !

புதன், அக்டோபர் 01, 2008

லொள்ளு பாண்டி



புதிய கட்சி தலைவர் சிரஞ்சீவி :
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது.


லொள்ளு பாண்டி :
நியாயந்தானே ! அவருக்கு பொழுது போகலேனா சரோஜா படத்துக்கு விமர்சனம் எழுத சொல்லுங்கோ.
அதை வீட்டுபுட்டு அரசியல் பேசிக்கிட்டு...?

அதையெல்லாம் பேசத்தானே சினிமாகாரங்க, நீங்க இருக்கீங்க!!!



தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது :
இதுவரை தி.மு.க. சார்பில் முஸ்லீம்களுக்கு கருணாநிதி இப்தார் விருந்து கொடுத்ததுண்டா ?


லொள்ளு பாண்டி :
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?
அவர் இப்தார் விருந்து வேணா கொடுக்காம இருந்திருக்கலாம்.
ஆனா முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் எல்லோருக்குமே அப்பப்ப அல்வா கொடுத்திருக்காரே !




இப்தார் விருந்தில் விஜயகாந்த் :
என் மகனுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டலாம் என்று ஆசைப்பட்டேன். பிரச்சினை வரும் என்பதற்காக அதைத் தவிர்த்தேன்.

லொள்ளு பாண்டி :
பிரச்சினை யாரு கிட்டேயிருந்து ?  பொண்டாட்டி, மச்சினன் கிட்டேயிருந்தா ???

அதை விடுங்க, உங்க இன்னொரு மகனுக்கு கிறிஸ்துவப் பெயர் சூட்ட ஆசைப்பட்டீங்களே அதை மறந்திடாதீங்க . இன்னும் ரெண்டு மாசத்திலே கிறிஸ்துமஸ் விருந்திலே சொல்ல வேண்டியிருக்கும்.

இந்திய கம்யூ. தா. பாண்டியன் :
கடுமையான ‘பொடா’ வேண்டாம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் சட்டங்களைத் துணிச்சலுடன் செயல்படுத்தினாலே போதும்.

லொள்ளு பாண்டி : 
கடுமையான ,சட்டம் தேவையில்லை சட்டங்களைத் துணிச்சலா செயல் படுத்த கடுமையான அரசு வேணும்னு சொல்றீங்க, சரியா?

அப்ப இவ்வளவு நாளு ஒரு ’சோப்லாங்கி’ அரசுக்கா ஆதரவு கொடுத்தீங்க!!!!!!


முதல்வர் கருணாநிதி :
ஒரு ரூபாய்க்கு அரிசி, ரு 50க்கு மளிகைப் பொருட்கள் தருவதை விமர்சிக்கும் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை நிறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லத் தயாரா?

லொள்ளு பாண்டி :
அதானே! சரியான கேள்வி கேட்டீங்க !
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தப்ப ‘வருங்கால பிச்சைக்காரர்களை உருவாக்கம் செய்யும் திட்டம்’ னு விமர்சனம் செஞ்சீங்க. ஆனால் நீங்க, ’திட்டத்தை நிறுத்திடுறேனு’ சொல்லியா தேர்தலிலே நின்னீங்க, கூட ஒரு முட்டை போடுரேன்னு சொல்லித்தானே  மக்களை சந்திச்சீங்க.

அது கூட தெரியலயே இவங்களுக்கு!!


நடிகர் வடிவேலு :
‘வடிவேலு‘ங்கிற நெருப்பு மேலே காலை வச்சிட்டாரு விஜயகாந்த் அது எம்புட்டுக் கொதிக்குதுன்னு அனுபவிச்சுத்தான் ஆகணும்.
லொள்ளூ பாண்டி :
வடிவேலு சார்,  
நீங்களே உங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணிக்கிலயே.

திங்கள், செப்டம்பர் 29, 2008

பொடியனும் தடியனும்




அந்த பள்ளிக்கூடமே அல்லலோகப்பட்டு கொண்டிருந்தது . அதன் பரபரப்பு, அந்த ஊரையே பற்றிக்கொண்டது. எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

தங்கள் காதில் விழுந்த விஷயத்தோடு தன் மனதிற்கு இதம் தரும் விஷயங்களையும் கற்பனையில் சேர்த்து ஊர்மக்கள் தங்களுக்குள் சுவாரசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

பிரச்சினை இதுதான் :

அந்த பள்ளியின் பத்தாவது வகுப்பில் படிக்கும் வாட்ட சாட்டமான பதினைந்து வயது வாலிபன் அதே பள்ளியில் மூன்றாவது படிக்கும் எட்டு வயது சிறுவனை அடித்து படுகாயப்படுத்தி விட்டான். சிறுவன் மருத்துமனையில் ஐசியு வில் அட்மிட்.

இளைஞன், சிறுவனை அடித்ததை அனைவருமே கண்டித்தாலும், ஒரு சாரார் அந்த சிறுவன் எதற்காக இளைஞனை சீண்டவேண்டும்? பிறகு இப்படி அடி உதை வாங்க வேண்டு்ம் என்று கருத்து கூறி இன்னொரு சாராரின் வெறுப்பை சம்பாதித்தனர்.

பல வழிகளிலும் விசாரித்து அலுத்து போனது பள்ளி நிர்வாகம்.

அந்த இளைஞன் சொன்னதையே சொன்னான்.

அதாவது அந்த சிறுவன் தன்னை எப்போதும் சீண்டி வந்ததாகவும், இன்று ஒரு படி மேலே போய் தன் மேல் கல்லால் எறிந்து தாக்கியதாகவும், அதன் பொருட்டே தனக்கு கண் மண் தெரியாதளவு கோபம் வந்து அவனை தாறுமாறாக தாக்கியதாகவும் கூறி தன் தலையில் ஏற்பட்ட காயத்தையும் காட்டினான்.

ஒரு சிலர் அவன் சொன்னதை நம்பினாலும், வேறு சிலர் இல்லையில்லை இவன், அந்த சிறுவனை கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தான் தாக்கியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினர்.

பள்ளி நிர்வாகமும், இளைஞன் சிறுவனை கொலை செய்யும் திட்டத்தோடு வந்து தாக்கினானா? இல்லை சிறுவன் இவனை காயப்படுத்தியதால் வந்த ஆத்திரத்தில் அறிவிழந்து தாக்கினானா? என்று உண்மை அறிவதற்காக ஒரு மூத்த ஆசிரியர் கொண்டு விசாரிக்க உத்தரவிட்டது.

அந்த பள்ளி இயங்கி வந்த இடம், அந்த ஊரில் பலசரக்கு கடை வைத்திருக்கும் பலராமனுக்கு சொந்தமானது.

ஊரில் புதிதாக சில கடைகள் முளைத்திருப்பதால் சில காலமாகவே அவருக்கு வியாபாரத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருந்தது.

அந்த கவலையில் இருந்த அவரின் காதிலும் இந்த செய்தி விழுந்தது. அவருக்கு இந்த இரண்டு பேரின் குடும்பமும் பரிச்சயமானதுதான்.

இரண்டு குடும்பமும் இவரின் வாடிக்கையாளர்கள் தான். இளைஞனின் பெற்றோர் எப்படியும் மாதம் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இவரிடம் வியாபாரம் செய்வர். சிறுவனின் பெற்றோர் 3000 ரூபாய்க்கு செய்வதே பெரிய விஷயம்.

ஆனால் சிறுவனின் பெற்றோருக்கு இந்த ஊரில் உறவினர்கள் அதிகம். எப்படியும் 20 குடும்பங்களாவது தேறும்.

அதில் இரண்டு மூன்று குடும்பங்கள் இவரிடம் தான் முன்பு பலசரக்கு பொருட்கள் வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது புது கடைக்காரரிடம் சென்று விட்டனர்.

அவர்களையும் சேர்த்து ஒரு 10, 15 குடும்பங்களாவது இவரின் கடைக்கு வந்தாலே போதும். மீண்டும் இலாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.

ஆனால் அந்த சிறுவனின் சொந்தங்களை நம் கடைப்பக்கம் திருப்புவது எப்படி?

இப்படி பலவாறாக சிந்தித்துக்கொண்டிருந்த பலராமனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதிக்க, கடையை கட்டிவிட்டு பள்ளியை நோக்கி நடந்தார்.

கட்டடத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் பலராமனை வரவேற்று பேசிக்கொண்டிருந்த பள்ளி தலைமையாசிரியர், அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போனார்.

ஆனால் எப்படி மறுப்பது? அவன் தான் பள்ளிக்கூட கட்டடத்தின் உரிமையாளராயிற்றே.

இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த தலையாசிரியரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் பலராமன்.

“ஆமாம் சார், என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த இடத்துக்கு சொந்தக்காரன் நான். அதனாலே இது பற்றி விசாரித்து உண்மை அறியும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. நீங்க பாட்டுக்கு உங்க விசாரணையை நடத்துங்க நாங்க பாட்டுக்கு எங்களதை நடத்துறோம்” என்று சொல்லிவிட்டு, தன்னோடு அழைத்து வந்தவரை காட்டி “இதோ இவரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் தான் என் சார்பாக இவர்தான் விசாரணை நடத்துவார்” என்றார்.

அடுத்த நாளே பலராமன் நியமித்த ஆசிரியர், தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு ஊர் மக்களுக்கு அறிவித்தார்.

“ இதன் படி நிரூபிக்கப்பட்டது என்னவென்றால் அந்த சிறுவன் ரொம்ப சாது். அந்த இளைஞனின் காயத்திற்கும் சிறுவனுக்கும் சம்பந்தமில்லை. அந்த காயம் எங்கேயாவது மரக்கிளையில் இடித்துக்கொண்ட விபத்தின் காரணமாக இருக்கலாம். இல்லை சிறுவனை கொலை அடி அடிக்க வேண்டும் என்பதற்காக இளைஞனே எங்காவது இடித்து காயம் ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் ” என்று .

இரண்டு நாட்கள் கழித்து பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியர் தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

“ அந்த இளைஞனைப் பார்த்து எப்போதுமே காண்டு அந்த சிறுவனுக்கு. அவனை கல்லால் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என்று பல நாட்கள் திட்டம் போட்டு, எப்போது தாக்கலாம்? எப்படி தாக்கலாம்? என்று ஒத்திகை பார்த்து விட்டு வந்து தான் சம்பவத்தை நிகழ்த்தினான். அதன் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தினால்தான் இளைஞன் சிறுவனை தாக்கினான்”.




டிஸ்கி1 : முடிவை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் மக்களே !

டிஸ்கி2: இது ஒரு கற்பனை கதை. எதையும், யாரையும் குறிப்பன அல்ல. அதனால் யாரும் எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம்.

(இதெல்லாம் ஒரு கதையானு கேட்கும் கனவான்களே, ரஜினி படம் பார்த்து விட்டு வரும் ஒரு சின்னபயல், ரஜினியை போலவே ஸ்டைல் செய்கிறேன் என்று கையை காலை ஆட்டி ஏதாவது செய்வதில்லையா அது போல என்று நினைத்து பெரிய மனது பண்ணி விட்டு விடுங்கள்).

செவ்வாய், செப்டம்பர் 23, 2008

விஜயகாந்த்+வடிவேல் லடாய் - சில சந்தேகங்களும், கேள்விகளும்

கடந்த சில நாட்களாக நடந்து வரும் விஜயகாந்த்- வடிவேல் லடாய் அனைவரும் அறிந்ததே.

இது சம்மந்தமாக கருத்துக்கள் பல மீடியாக்களில் (இணைய பதிவுகள் உட்பட) வந்த வண்ணம் உள்ளனர். இதிலே நம் கருத்தையும் சொல்லாட்டி எப்படினு ஆரம்பிச்சி பிரச்சினையை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் நிறைய ஏன்? ஏன்? ஏன்? கள் தான்.

சரி கேள்விகளை நமக்குள்ளே வச்சிக்கிட்டு தலையை பிச்சிக்கிறதை விட சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுடலாமே . பதிலை அவங்க சொன்னாலும் சரி இல்லை அவங்க சார்பாக அவங்களோட அனுதாபிகள் சொன்னாலும் சரி

வடிவேல் வீட்டைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான கண்டனத்துக்குறியவர்கள் மட்டுமின்றி சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது .

ஆனால் நடந்த சம்பவத்திற்கு பின் இரு தரப்பாலும் கொடுக்கப்பட்ட பேட்டிகள், அறிக்கைகள் இவற்றில் பல விஷயங்கள் புரியவில்லை. அதனால் தான் இந்த புதசெவி பதிவு ! ( நண்பர் TBCD மன்னிப்பாராக).



முத‌லில் வ‌டிவேலிட‌ம் சில‌ கேள்விகள்


1. தங்கள் வீட்டை சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்கி சேதப்படுத்தியது என்பதை பார்த்த நீங்கள் அது எப்படி நிச்சயமாக விஜயகாந்த் தூண்டுதல் பேரிலேயே வந்தவர்கள் அவர்கள் என்பதை தீர்மானித்தீர்கள்?

2. அவர்கள், ”முதல்வராக வரப்போகும் என் தலைவனிடம் மோதாதேஎன்று கூறியபடியே தாக்கினார்கள் என்பதால், அது விஜயகாந்த் அனுப்பிய படைதான் எனத் தெள்ளத் தெளிவாக தெரிவதாக கூறிய நீங்கள்,அந்த கும்பல்கலைஞர் வாழ்கஎன்று சொல்லியிருந்தால் கலைஞரின் கூலிப்படையென்றோ, ”புரட்சித்தலைவி வாழ்கஎன்றிருந்தால் ஜெயலலிதாவின் கூலிப்படை என்றோ கூறியிருப்பீர்களா?

அது என்ன லாஜிக் ?
வந்தவர்கள் தாங்கள் யார் என்று தாங்களே வாக்குமூலம் கொடுப்பார்களா?

3.விஜயகாந்தை தவிர இந்த உலகத்தில் வேறு எதிரிகள் யாருமே உங்களுக்கு கிடையாது என்கிறீர்கள். நல்லது.
ஆனால் பிறகு ஏன் நடிகை ஸ்ரேயா உங்களோடு ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் அஜித் தன் படத்திலிருந்து அவரை நீக்கினார்?

இங்கு அஜீத்தின் பிரச்சினை ஸ்ரேயாவின் குத்தாட்டமா இல்லை உங்களோடு அவர் நடித்ததா?

தவிர ,உங்களால் பாதிக்கப்பட்ட எவ்வளவோ துணை காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் சில பேர்கூட துணிந்து உங்களைப்பற்றி குறை கூறி பேட்டி கூட கொடுத்தார்கள்.
அதற்காக அவர்கள்தான் கூலிப்படை அனுப்பினார்கள் என்று உங்களைப்போல வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ பாணியில் சொல்ல வரவில்லை.

உங்களுக்கு விஜயகாந்தை தவிர இன்னும் பல எதிரிகள் இருக்க வாய்ப்பிருக்கிறதா இல்லையா? என்பதே இங்கே கேள்வி.

4. உங்கள் கருத்துப்படியே விஜயகாந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்று வைத்துக்கொண்டாலும், அவரை ஒழிப்பதற்காக தேர்தலில் எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளீர்களே தண்டனை விஜயகாந்துக்கா? இல்லை அந்த தொகுதி மக்களுக்கா?

மற்றவர்கள் உண்மையிலே மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, அரசியலுக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று சொல்லவாவது செய்கிறார்கள்.

நீங்கள் மட்டும்தான் தனியொரு மனிதனை எதிர்ப்பதற்காக தேர்தலில் நிக்கப்போவதாக சொன்னது மட்டுமல்லாமல் இன்று விடுத்த அறிக்கையில் கட்சியே ஆரம்பிக்க போவதாக சொல்லியிருக்கிறீர்கள் இது நியாயமா?

அதற்கு பதில் ஏன் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் எதிரிலியே நீங்கள் ஒரு மண்டபம் கட்டி அவ்ரின் வருமானத்தை குறைக்க கூடாது?

இல்லை அவர் படம் ரிலீஸ் அன்று நீங்கள் கதாநாயகனாய் நடித்த படத்தை ரிலீஸ் செய்து வசூலில்அவருக்கு பாடம் புகட்ட கூடாது ?

இல்லை அரசியலில் தான் அவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், தேர்தல் சமயம் அவர் நிற்கும் தொகுதியில் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களிலே சிறந்தவர் என தாங்கள் தீர்மானிக்கும் ஒருவருக்கு இலவசமாக பணிகள் மற்றும் பிரசராம் செய்து விஜயகாந்தை மண்ணை கவ்வ வைக்க கூடாது?

5. உங்களை யாரும் தூண்டிவிடவில்லை என்று சொன்னீர்கள் சரி! அது எப்படிஇந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது”. என்று எதை வைத்து இந்த அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினீர்கள்?

கொஞ்சம் உதைக்கிறதே!




அடுத்து விஜ‌ய‌காந்திட‌ம் சில கேள்விகள்

1. வடிவேல் வீட்டைஎன் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயாஎன்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கிய அந்த கும்பல் தங்கள் கட்சியினர் அல்ல என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

இது சம்பந்தமாக தங்கள் கட்சியினரிடம் விசாரணை நடத்தினீர்களா ?


2. அந்த கும்பல் தங்களால் ஏவி விடப்படவில்லை என்று உறுதி பட மறுத்திருக்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி தொண்டர்களே ஆர்வமிகுதியால் ஏன் அப்படி செய்திருக்க கூடாது?
உங்கள் வக்கீல் உங்களை கேட்காமலே முன் ஜாமின் மனு தாக்கல் செய்துவிட்டார் என்று உங்கள் தரப்பு சொன்னது போல்.

3. சரி எப்படியோ விசாரணை செய்தவரையில் உங்கள் கட்சிக்கும் அந்த வன்முறை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று உறுதிபட கண்டு கொண்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் எதை வைத்து கலைஞர் தான் படை அனுப்பினார் என்றும் வடிவேலுவை பின்னிருந்து இயக்குகிறார் என்றும் சொன்னீர்கள்?

இதுவும் அதே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ கதைதானே!

4. அதேபோல் வடிவேல் உங்களை எதிர்த்து தேர்தலில் நிக்கப்போவதாக அறிவிக்க அதற்கு பதில் சொல்லும் விதமாக கலைஞரே எதிர்த்து நின்றாலும் பயப்பட மாட்டேன் என்று எதற்கு இதற்குள் அவரை இழுக்கிறீர்கள்?

5. வன்முறையால் பாதிக்கப்பட்டவர், தாக்கிய வன்முறை கும்பலை ஏவிவிட்டவர் நீங்கள்தான் என்று காவல் நிலையத்தில் ஆணித்தரமாக புகார் தந்ததால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ”கலைஞர் என் மீது பொய் வழக்குகள் போடுகிறார்என்று இதையும் அரசியல் ஆக்கலாமா?
இது நியாயம் தானா?



இறுதியாக சில பொதுக்கேள்வி
கள்

1.தனக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான செயல் செய்து மக்களிடம் தனது இமேஜை குறைத்துக்கொள்வாரா?

அதுவும் லோக்சபா தேர்தல் வரப்போகும் இத்தருணத்தில்?

2.கம்யூனிஸ்ட்கள் திமுகவிடமிருந்து பிரிந்து விட்டன. தமிழ்நாட்டு அரசியல் நியூட்டன் விதிப்படி நியாயமாக அதிமுக வுடன் தான் அடுத்த தேர்தலில் கூட்டு சேரவேண்டும். மாறாக தேமுதிக தலைவரை மார்க்ஸிஸ்ட் தலைவர் வரதராசன் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் எரிச்சல் அடைந்த (பாதிப்பு அடைய இருக்கும்) யாரோ ஒருவர் ஏன் இப்படி செய்திருக்க கூடாது?

இன்னும் பல ஏன்?கள் மிச்சமிருப்பினும், இப்போதுக்கு இது போதும். பதில் கண்டு பிற!

சனி, செப்டம்பர் 20, 2008

சொந்த செலவில் சூன்ய‌ம் வைத்துக்கொண்ட நாகாலந்து தீவிர‌வாதிக‌ள்!

ரயிலை மறித்து கச்சா எண்ணை திருட்டு-விஷவாயு கசிவில் 25 பேர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லோங்க் மாவட்டத்தில் சரக்கு ரயிலிலிருந்து கச்சா எண்ணையை திருட வந்தவர்களில், விஷ வாயு கசிவு மற்றும் டேங்கர் வெடித்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாய்டிங் என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பாதை வழியாக கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலை 70க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒரு டேங்கரிலிருந்து கச்சா எண்ணையை திருட ஆரம்பித்தனர்.

ஆனால்துரதிர்ஷ்டவசமாக அந்த டேங்கரிலிருந்து விஷ வாயு கசிந்துள்ளது. மேலும் அந்த டேங்கரும் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணை விமானங்களுக்கான அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும்.

இந்த சம்பவம் நாகாலாந்து-அஸ்ஸாம் எல்லையில் நடந்துள்ளது. இறந்தவர்களில் பலர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நாகா தீவிரவாதிகளும் அடக்கம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் இப்படி அடிக்கடி டேங்கர் ஏற்றிக் கொண்டு வரும் ரயில்களை மறித்து கொள்ளை அடிப்பது நடந்து வருகிறது. தீவிரவாதிகள்தான் பெரும்பாலும் இவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த முறை அது அவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது.


இப்படி கொடூரமான முறையில் இறந்து போனவர்களும், படுகாயம் அடைந்தவர்களும் என்னதான் தீவிரவாதிகளாக இருந்த போதிலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதால் நம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம்.

வியாழன், செப்டம்பர் 18, 2008

என்ன‌ கொடுமை முருகா இது!

க‌ட‌ந்த‌ சனிக்கிழமை மாலை கணிணி முன் அமர்ந்து வலைப்பதிவுகளை மேய்ந்துக் கொண்டிருந்தபோது, “week end ன் போதும் கணிணிதானா, குடும்பத்தைப் பத்தி கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரு“ என்ற என் இல்லத்தரசியின் அர்ச்சனை, அவர்கள் தாளிக்கும் கடுகு உளுந்து பொறியும் ஓசையை மீறி என் காதுகளில் கேட்டது.


நான் கணிணி முன் அமரும்போதெல்லாம், அவர்கள் விழித்து இருக்கும் பட்சத்தில் இந்த வசனம் வாடிக்கையாக கேட்பதுதான்.

”ஏன் கொஞ்சம் நேரம் மனுஷன் ரிலாக்சா இருக்க விட மாட்டியா” என்று தப்பித் தவறி நான் கேட்டுவிட்டால் அவ்வளவுதான்.

”என் ராசி நான் உங்க கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தைப்படுறேன். இல்லாட்டி எங்கேயோ எப்படியோ இருந்திருப்பேன்” (ஏதோ பில்கேட்ஸ் அவர் பையனுக்கு சம்பந்தம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கே புகுந்து லவட்டிகிட்டு வந்த மாதிரி) என்ற பில்டப்போடு, ஒரு முடிவற்ற அழுகாய்ச்சி காவியம் ஆரம்பமாகிவிடும் .

அதுக்கு பயந்து கணினியை மூடிவிட்டு, ”என்ன பிரச்சி்னை, என்ன வேணும் உனக்கு?” என்றேன்.

“வீட்டிலே கடுகு இல்ல, பருப்பு இல்ல, அது இல்ல இது இல்ல“ என்று நீட்டிக்கொண்டே போய் கடைசியாய் ”உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுப்பு இல்ல” என்று முடித்தாள் என் இல்லாள்.

”ஒகே! ஒகே! இதுதானா பிரச்சினை? வாங்கிட்டு வந்திட்டா போச்சி. லிஸ்ட் தயார் பண்ணு நான் உடை மாத்திகிட்டு வரேன்” என்று கூறிவிட்டு தப்பிச்சா போதுமென அவசரமாக நகர்ந்தேன்.

அடுத்த ஐந்தாவ‌து நிமிடத்தில் தெருவில் இறங்கினேன். நம்ம ஊர் மளிகை சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் வடபாரீஸுக்கு தான் (paris nord க்கு மொழிபெயர்ப்பு சரிதானே) செல்ல வேண்டும். அங்குதான் இந்திய இலங்கை கடைகள் நிறைந்த பகுதி உள்ளது.

காரை எடுக்கலாம் என்ற நினைப்பை உடனடியாக உதறினேன். காரணம் சாதாரணமாகவே அங்கு காரை நிறுத்த இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு. அதிலும் இன்று சனிக்கிழமை கேக்கவே வேணாம்.

சரியென்று பேருந்து, ட்ரைன் எல்லாம் எடுத்து வடபாரீஸ் வந்திறங்கி, தமிழ்க்கடைகள் நிறைந்த பகுதிக்கு நடந்து சென்றேன். வழக்கம்போல திருவிழா கூட்டம் போல நம் தமிழ் மக்கள் கூட்டம்.

இந்த பகுதி நம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியோ என வியக்க வைக்கும்படி எங்கு பார்த்தாலும் தமிழ்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் அவைகளில் மொய்க்கும் நம் தமிழ் மக்கள். குறிப்பாக சனிக்கிழமை மாலையென்றால் இந்த பகுதி முழுவதும் நம் மக்கள்களால் நிரம்பிவிடும்.

பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? வாரம் முழுதும் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டு, வார இறுதியில் கிடைக்கும் இந்த 2 நாள் ஓய்வில், செலவில்லாமல் ரிலாக்ஸா இருக்க இங்கு வருகிறார்கள். ரிலாக்ஸுக்கு ரிலாக்ஸும் ஆச்சி, அப்படியே வீட்டிற்கு தேவையான சாமான்களும் வாங்கின மாதிரியும் ஆச்சி.

விட்டுப்பிரிய மனமில்லாதவர்கள் குடும்பத்தினருடனும், ஆளை விட்டா போதும் நிலையுடையோர் தனியாகவும் வாராவாரம் இங்கு வந்து விடுகின்றனர்.

இப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கையில் தி்டீரென்று தோளில் ஒரு கை.

”என்னப்பா எதிரில் வர்ற ஆளுகூட தெரியாம எந்த கோட்டையை பிடிக்க திட்டம் போட்டுக்கிட்டு போற?”

அடடே! நம்ப சிவராமன். என் பால்ய நண்பன், தன் இரண்டு் பிள்ளைகளோடு சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா, சும்மா வேடிக்கைப்பார்த்திட்டே வந்ததிலே உன்னை கவனிக்கத் தவறிட்டேன். கோவிச்சிக்காதே. சரி, சொல்லு எப்படியிருக்கே?”

சிவராமன், சிறு வயதிலிருந்து என் கூட படித்தவன். படிப்பில் கெட்டிக்காரன். நானெல்லாம் கல்லூரி வாசலை தொட்டதுமே, போதுமென்ற மனதோடு மற்றவருக்கு வழி கொடுத்து ஒதுங்கிகொண்டேன். ஆனால் இவன் பேராசை பிடித்தவன். அப்படியெல்லாம் செய்யாமல், மேலும் மேலும் படிப்பைத் தொடர்ந்து கொண்டே போனான்.

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வரையில் ஊரில் படித்துக்கொண்டிருந்தவன், அதுவும் வகுப்பில் முதல் மூன்று பேரில் ஒருவன். எப்போதும் முதல் வகுப்பில்தான் பாஸ் செய்தான்.

பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து கொஞ்சம் வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் மனைவி தங்களின் ஒன்ற‌ரை வ‌ய‌து பையனோடு மீன்கடையிலிருந்து என்னைப்பார்த்து சிரித்தபடியே வெளியே வந்தார்.

”எப்படிம்மா இருக்கே? என்ன சொல்றான் உன் கடைக்குட்டி செல்லம்?” என்றேன்.

”ம்ம் இப்ப நல்லா இருக்கான் என்றார்”. என்று சொன்னார்.

சிவராமனின் மூன்றாவது பிள்ளை சுகப்பிரசவத்தில் பிறக்கவில்லை. மருத்துவர் குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்காமல் நாட்கள் தள்ளிப்போக, இதற்கு மேல் விட்டால் தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கருதிய மருத்துவர் குழு அறுவை சிகிழ்ச்சை செய்து வெளியே எடுத்தார்கள்.

சிவராமனும் தன் பங்கிற்கு சீர்காழீ் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி வரை குழந்தை நல்லபடியாக பிறந்தால் அங்கங்கே வந்து நேர்த்திக்கடன் செய்வதாய் வேண்டிக்கொண்டான்.

அப்படி சிரமப்பட்டு பெற்றதாலேயோ அல்லது கடைக்குட்டி என்பதாலேயோ அவன் மேல் இருவருக்கும் அளவு கடந்த பாசம்.

பாசத்தோட அளவு சொல்லனும்னா, யாரோ ஒரு மரத்தடி ஜோசியர் பிள்ளைக்கு தண்ணீரில் கண்டம் என்று சொல்லி விட்டாரென்று இந்த பிள்ளைக்கு layer baby (தமிழாக்கம் தெரியவில்லை) கட்டாமல் வளர்த்தவன். ஏண்டா என்று கேட்டதற்கு, ”அவன் கழிக்கும் சிறுநீரும் தண்ணிதானே அதனால் அவனுக்கு ஆபத்து வந்ததென்றால்?” என்று பதிலளித்தவன்.

”என்னப்பா பலத்த யோசனை?”.

“ ஒண்ணுமில்லே சிவா, உன் பிள்ளையைப்பத்திதான் யோசனை. அது சரி, உன் மனைவி என்ன சொல்றாங்க? இப்ப‌ ந‌ல்லாருக்கான்னா என்ன‌ அர்த்த‌ம்? குழந்தைக்கு என்ன ஆச்சு?” என் விசாரித்தேன்.

”போன வாரம் ரொம்ப சீரியஸா போய்ட்டான்பா”

”என்னாச்சி? எதனால??”

“தெரியல. திடீரென்று பேச்சி மூச்சியில்லாம போய்ட்டான்”

”ஐயையோ! அப்புறம்?”

”எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. புள்ளையை உலுக்கி குலுக்கி பார்த்தேன் சின்ன அசைவுகூட இல்லை”

”சொல்லு அப்புறம் என்ன செஞ்சே?”

“உடம்பெல்லாம் ஜில்லின்னு வேற ஆய்டுச்சி“

“சொல்லுடா அப்புறம் என்ன செஞ்ச? உடனே SAMU க்கு போன் அடிச்சியா இல்லியா? இல்லே நீயே hopital தூக்கிட்டு போனியா? டாக்டர் என்னா சொன்னாங்க? ஒண்ணும் பயப்படுற மாதிரி இல்லையே? சொல்லு.”

”இல்லே அதெல்லாம் செய்யல. வீட்டிலுள்ள முருகன் படத்திற்கு முன்னாடி நின்னு வணங்கிட்டு பிள்ளைக்கு விபூதி பூசி விட்டேன். சரியா ரெண்டே, நிமிஷம் புள்ளை கண்ணைத்தொறந்து பார்த்து சிரிக்கிறான்.”

”என்னது ????????????,
சரி போகட்டும் அப்புறமாவது மருத்துவரிடம் அழைத்து போனியா?”

”எதுக்கு அநாவசியமா? இதோ பாரு, அன்னையிலிருந்து இன்னைக்கி பத்து நாளாவது. எந்த டாக்டர்கிட்டேயும் போகல. எப்படி இருக்கான் பாரு கலகலனு.........”

நான் வாய‌டைத்து போய் நிற்ப‌தைப்ப‌ற்றி க‌வ‌லைப் ப‌டாம‌ல் பேசிக்கொண்டே போனான் சிவ‌ராம‌ன்.

சிவராமனின் கல்வித்தகுதி : MA, M.PHIL (PHYSICS)

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2008

சோதிடத்தை நம்பி ஏமாந்த முன்னாள் முதல்வர்!

என்னதான் ஒரு மனிதன் ஆடம்பரங்களின் மீது ஆசையற்று மிக எளிமையாக வாழ்ந்தாலும் பதவி மோகம் மட்டும் லேசில் விடாது என்பதற்கு முன்னால் புதுவை முதல்வர் ரங்கசாமியே ஒரு உதாரணம்.


தன்னிடமிருந்து பதவி பிடுங்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை, தன்னை தளராதவராய் வெளியில் காட்டிக்கொண்டு இயல்பாக இருந்தாலும்,

மற்றொரு பக்கம் தெருமுனை பிள்ளையார் கோவிலிலிருந்து புகழ் பெற்ற மணக்குள வினாயகர் கோயில் வரை நடத்திய பூசை புணஸ்காரங்கள் தான் எத்தனை?  செய்த யாகங்கள் தான் எத்தனை?

இது மட்டும் பத்தாது என்று வாஸ்து சாஸ்திரம் வேறு.



வாஸ்துக்காரன் சொன்ன ராசிப்படி, பதவியைக் காப்பாற்றுமென்று வீட்டு வாசலில் படிகளின் எண்ணிக்கையையும் மாறுதல் செய்தார்.

ஆனால் இவ்வளவு செய்தும் இதில் எதுவும் அவரின் பதவியை காப்பாற்றவில்லை.

சோதிடத்தின் பவர் நாரயணசாமியின் பவரிடம் தோற்றுப்போனது.



ஆம், நடந்தது கோஷ்டிப்பூசலின் உச்சக்கட்ட விளைவுதான்.

இரு தலைவர்களுக்காண ஈகோ பிரச்சினை, கோஷ்டிப்பிரச்சினையாக மாறி இறுதியில் ரங்கசாமியிடமிருந்து முதல்வர் பதவியை பறித்துக்கொண்டுதான் ஓய்ந்தது.

புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் அனுதாபிகள் என்பதால் பொதுவாக இங்கு காங்கிரஸ்தான் ஜெயித்து ஆட்சி அமைக்கும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போலேதான், பிரிக்கமுடியாத “காங்கிரஸும் கோஷ்டி அரசியலும்” இங்கும் உள்ளது.

அதனால் தமிழத்தில் எப்படி ஒருவர் காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் நிம்மதியாக பணியாற்ற மற்ற கோஷ்டிகள் விட மாட்டார்களோ அப்படிதான் இங்கு முதல்வர் பதவியும்.

ரங்கசாமி இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்.

அதுவும் பவர்புல் கோஷ்டி தலைவரும், டெல்லியில் பெரும் செல்வாக்குடையவரும், புதுவை மாநிலத்தின் நிரந்தர ராஷ்ய சபா உறுப்பினருமான நாரயணசாமியை எதிர்த்துக்கொண்டு இவ்வளவு காலம் பதவியில் நீடித்ததே பெரிய்ய்ய விஷயம்.

சரி ரங்கசாமிக்கு இப்போதைக்கு  ஒரு மந்திரி பதவியாவது கிடைக்குமா?  அதுக்கு ’அந்த சாமி’ அதான் நாராயணசாமி குறுக்கே வராம இருக்கானு பார்ப்போம்.

புதுவை மக்களுக்கு இது பழகிப்போன விஷயம்தான் என்றாலும் தங்கள் முதல்வரை தங்களால் தேர்வு செய்ய இயலவில்லையே, டெல்லிதானே தேர்வு செய்கிறது என்ற வருத்தம் நிச்சயம் இருக்கத்தானே செய்யும்.

புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் திரு வைத்தியலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

பதவியை பத்திரமாக பார்த்து காப்பாத்தி வச்சிக்க ராசா!


டிஸ்கி:
எந்த ஆசாபாசமும் இல்லாதவராக அடையாளம் காணப்பட்ட ரங்கசாமி, பதவியை கடைசி வரைக்கும் விடாமல் அப்படி உடும்புபிடி பிடிக்க வைத்தது எது?

ஈகோவா?
பந்தாவா?
வசதிகளா?

ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2008

இந்தியா 'ஒரு மத' ச்சார்பற்ற நாடு!


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுக்க. அதுவும் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. மாநிலம் தழுவிய அளவில் கலவரம் வெடித்துக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள். போராட்டங்கள். உண்ணாவிரதங்கள். இத்யாதி இத்யாதிகள். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒருமாத காலமாக விடாமல் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குக் காரணம் இரண்டு வார்த்தைகள். அவை, நிலம் மற்றும் மதம்.
அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில் இருந்து சிறுபகுதியை எடுத்து அங்குள்ள கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் பயணிகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக `ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட்' என்ற அமைப்புக்கு தாற்காலிகமாகக் குத்தகைக்கு வழங்கியது மாநில அரசு. கொடுத்தது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதற்கு அங்கு பெரும்பான்மையாக வசித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க, இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
அரசுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போக, நிலைமையைச் சமாளிக்க நிலத்தைத் திரும்பப் பெற்றது ஆசாத் அரசு. ஆனாலும் அரசுக்கு மீண்டும் ஆதரவளிக்க முடியாது என்று கூட்டணி கட்சித்தலைவர் மெஹ்பூபா அறிவித்ததால், பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் குலாம் நபி ஆசாத்.
இந்நிலையில், ஹூரியத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமர்நாத்துக்கு வந்த பக்தர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பா.ஜ.க. மற்றும் வி.ஹெச்.பி தொண்டர்கள் இஸ்லாமியர்களைத் தாக்கத் தொடங்கினர். சாதாரண மோதல் மெல்ல மெல்லக் கலவரமாக உருமாறியது. அடக்கப் பாய்ந்த காவல்துறை துப்பாக்கியைத் தூக்க, ஆறு பேர் பலியாகினர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

இஸ்லாமியர்களுக்கு மெக்கா எத்தனை புனிதமான தலமோ, அதைப்போலவே இந்துக்களுக்கு அமர்நாத். அங்கிருக்கும் பனி லிங்கத்தை ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்வது இந்துக்களின் நடைமுறை. அதுவும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரமே இந்தப் பனி லிங்கம் காணக் கிடைக்கும். முன்பெல்லாம் ஆகஸ்ட் மாதம் மட்டுமே லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் ஏறுமுகத்திலேயே இருந்ததால், சமீபகாலமாக பார்வைக்கான கால அளவு ஒரு மாதம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது.
வெறும் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்ற அளவில் இருந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது லட்சங்களைத் தொட்டுவிட்டது. ஆனால், அவர்களுக்கான வசதிகள் எதுவும் அத்தனை போதுமானதாக இல்லை. குறிப்பாக, தங்கும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவை. போதாக்குறைக்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் வேறு. எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்ற நிலை. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதும் அமர்நாத்துக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை துளியும் குறையவில்லை.

குடியிருப்புப் பகுதிகளை அமைப்பதற்காகவோ அல்லது புதிய நகரை நிர்மாணிப்பதற்காகவோ நிலம் தரப்பட்டிருந்தால் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் ஆலய நிர்வாகக் குழுவுக்குத் தரப்பட்ட அரசு நிலத்தில் செய்யப்படும் வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த இடத்திலேயே இருக்கப்போவதில்லை. தாற்காலிகப் பயன்பாடு என்பதால் எளிதில் அகற்றப்படும் வகையிலேயே அமைக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பிரித்தெடுக்கப் பட்டுவிடும். ஆகவே, இதில் அச்சம் கொள்வது அவசியமற்றது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் என்ற தனி அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கென்று தனி சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அவர்களுடைய புனிதத் தலமான மெக்காவுக்குச் செல்வதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தியா முழுக்க சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இத்தனை உரிமைகளை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கு வருகின்ற இந்துக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளுக்குக்கூட முட்டுக்கட்டை போடுவது ஏன்?
நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் நோக்கம் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.
1. இந்துக்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் நுழையக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
2. இந்துக்களின் மதவழிபாடு எதுவும் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஜம்மு_காஷ்மீர் வாழ் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதேபோல, துப்பாக்கிப் பிரயோகமும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகம் இருக்கும் பிராந்தியத்துக்கு வந்து ஆலய தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிலைமையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது எப்படி என்றுதான் அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, மிரட்டல்களுக்கு அடிபணிந்து, கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.
தற்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர். விரைவில் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் விதமாக இஸ்லாமிய மாணவர்கள் களத்தில் இறங்கக்கூடும். ஏற்கெனவே ஜிலீர் பிரதேசம் வேறு. போராட்ட நெருப்பை அணைப்பது அத்தனை சுலபமில்லை.
இறுதியாக ஒரு விஷயம். ஜம்மு_காஷ்மீரில் தற்போது வீறுகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மத யானைகளை அடக்க அரசுக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல, அங்குசங்கள்!

- நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

சுதந்திரதினம், இந்தியாவுக்கு 62வது! பிரதமருக்கு எப்போது?

சிறுவயதில் நான் மிருககாட்சி சாலைக்கு சென்று பார்த்திருக்கிறேன்.

வன விலங்குகளை கூண்டில் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். பார்வையாளர்கள் வெளியிலிருந்து அவைகளை பார்த்துக்கொண்டே செல்வர்.

ஆனால் இப்போதெல்லாம் பெரிய வன விலங்கு பூங்காக்களில் அப்படி செய்வதில்லை.விலங்குகள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்.

மாறாக, பார்வையாளர்கள் கம்பி வலை போட்ட தடுப்புக்குள் இருந்தபடியே பார்வையிடுவர்.

இன்னும் சில வெளிநாடுகளில் உள்ள பூங்காக்களில் பார்வையாளர்கள் தங்களின் காரின் உள்ளே இருந்தபடியே மெதுவே பயணம் செய்து கொண்டு விலங்குகளை பார்வையிட்டபடியே செல்ல வேண்டியிருக்கும்.



சுதந்திர தினத்தன்று நம் பிரதமரை பார்த்தபோது எனக்கு இது தான் தோன்றியது.

தீவிரவாதிகள் மக்களோடு கலந்து சுதந்திரமாக நாட்டில் நடமாடிக்கொண்டிருக்க, பிரதமர் குண்டு துளைக்காத கூண்டில் நின்று சுதந்திர தின உரையாற்ற வேண்டிய நிலைமை.


தீவிரவாதிகளைப்பொறுத்தவரை நம் நாடு ஒரு சொர்க்கபூமி.

எங்கும் சுதந்திரம் எப்போதும் சுதந்திரம்.

அவர்களின் சாதி,மதக்கவசங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களை காப்பாற்றும்.

தப்பித்தவறி பிடிபட நேர்ந்தாலும்,உயிருக்கு உத்தரவாதம் உண்டு.

சுப்ரீம் கோர்ட்டே தூக்குத் தண்டனையை உறுதி செய்தாலும், அரசியல்வாதிகள் அதை கிடப்பில் போட்டு விடுவார்கள்.

சிறைச்சாலைகளிலும் பீடி, சிகரெட், கஞ்சா, குவார்ட்டர், குட்டி மட்டுமல்லாது உள்ளேயே சதித்திட்டம் போட செல்போன், சிம் கார்டுகள் எல்லாம் கிடைக்கும்.

பிறகென்ன ஜமாய்தான்.



ஆனால் பாவம் நமது பாரத பிரதமர், பெரும்பான்மை இந்திய மக்கள்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கப்பட்டாலும், வருடா வருடம் கூண்டிற்குள் ஒளிந்துக்கொண்டு உரையாற்ற வேண்டியதாயுள்ளது.

வாழ்க இந்திய சனநாயகம்!


சுதந்திர தினம்,
இந்தியாவிற்கு 62வது!
நம் பிரதமருக்கு எப்போது?

சனி, ஆகஸ்ட் 16, 2008

இந்தியாவின் 62வது சுதந்திரதினம்













இந்தியாவின் 62வது சுதந்திரதினம், நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செங்கோட்டையில் பிரதமராலும் மாநில தலைநகரங்களில் முதல்வர்களாலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின செய்தி உரையாற்றப்பட்டது.

மாணவ மாணவியர்கள் சட்டையில் கொடியும் வாயில் இனிப்புமாக கொண்டாட்டங்களை கண்டு ரசித்தார்கள்.

பெரும்பாலரோ ஏதோ விடுமுறை கிடைத்தது என நாள் முழுதும் ஓய்வெடுத்தபடி தொலைக்காட்சி முன் அமர்ந்து தங்கள் அபிமான நடிகர் நடிகையினரின் பேட்டி கண்டு புளகாங்கிதம் அடைந்து மகிழ்ந்தனர்.

உளவுத்துறையினரும், காவல் துறையினரும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அனைத்தும் நல்ல முறையில் நடந்த நிம்மதியுடனும்,
அடுத்து வரப்போகும் ஜனவரி 26 குடியரசு தின விழா நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று மனதில் ஒரு ஓரத்தில் அரும்புவிட ஆரம்பித்த சிறு கவலையுடனும் உறங்கப்போயினர்.

இப்படியாக உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தின் முக்கிய தேசியத்திருநாள் இனிதே கழிந்து போனது.

திங்கள், ஆகஸ்ட் 04, 2008

மாட்டினார்டா ர‌ஜினி, விடாதே பிடி!

ர‌ஜினி ம‌ன்னிப்பு கேட்டார் க‌ர்நாட‌க‌ ம‌க்க‌ளிட‌ம்.

இன்றைய‌ ஹாட் டாபிக்ஸ் இதுதான்.இது ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எல்லா மீடியாக்க‌ளிலும் இருந்தாலும் ந‌ம் வ‌லையுல‌கில் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

அப்புற‌ம் ந‌ம்ப‌ க‌ருத்தை ப‌திவு ப‌ண்ண‌லேனா எப்ப‌டி, அதுக்குதான் இந்த‌ இடுகை கொஞ்ச‌ம் ம‌ன‌சாட்சியோடு.


நான் ஒரு ப‌ட‌த்தில் பார்த்திருக்கிறேன். ப‌ட‌ம் பெய‌ர் ஞாப‌க‌மில்லை.

ஒருவ‌னை விசார‌ணைக்கு காவ‌ல் நிலைய‌ம் கொண்டு வ‌ந்திருப்பார்க‌ள். திடீரென்று இரண்டு பேர்க‌ள் போகிற‌ போக்கில், ஏன்? என்ன‌? என்று கேள்வி கேட்காம‌லேயே இவ‌னை அடித்து விட்டு செல்வார்க‌ள்.
அத‌ற்கு அங்குள்ள‌ போலீஸ்கார‌ர் சொல்வார் இவ‌ர்க‌ள் டுட்டி முடிந்து வீட்டுக்கு போகும் போலீஸார் என்று.
சிறிது நேர‌த்தில் இன்னும் சில‌ பேர் வ‌ந்து அடித்துவிட்டு போவார்க‌ள் அத‌ற்கு இவ‌ர் சொல்வார் இவ‌ர்க‌ள் இப்ப‌த்தான் டூட்டி ஆர‌ம்பிக்க‌ வ‌ந்திருப்ப‌வ‌ர்க‌ள்.

அத‌ற்கு இவ‌னோ, "ஏண்டா, டூட்டி முடிச்ச‌வ‌னும் அடிக்கிறான், ஆர‌ம்பிக்கிற‌வ‌னும் அடிக்கிறான். அடிக்கிற‌து தான் அடிக்கிறீங்க‌ என்ன‌ ஏதுனு விசாரிச்சுட்டு எதுக்குனு சொல்லிட்டு அடிக்க‌ மாட்டீங்க‌லாடா" என்று.

இப்ப‌ என‌க்கு அந்த‌ ச‌ம்ப‌வ‌ம்தான் ஞாப‌க‌ம் வ‌ருது.


அன்று ந‌ட‌ந்த‌து என்ன‌? கொஞ்ச‌ம் திரும்பி பார்ப்போம்.


க‌ர்நாட‌க‌த்தில் தேர்த‌ல் வ‌ந்த‌ நேர‌ம் அத‌னால் அங்குள்ள‌ அர‌சிய‌ல்க‌ட்சிக‌ள் ம‌க்க‌ளை க‌வ‌ர‌ போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்த‌ன‌.
அதில் ஒரு அர‌சிய‌ல்வாதி ம‌க்க‌ளின் சென்சிடிவ் மேட்ட‌ரான‌ ந‌தி நீர் பிர‌ச்சினையை கையில் எடுத்த‌தும‌ல்லாம‌ல், ஒக்க‌ன‌க்க‌லுக்கு நேரில் வ‌ந்து ஒரு சொட்டு நீர் கூட‌ த‌மிழ‌த்திற்கு த‌ர‌ மாட்டோம் என‌ முழ‌ங்கி இந்த‌ ச‌ர்ச்சையை ஆர‌ம்பித்து வைத்தார்.

எதிர்பார்த்த‌து போல‌வே அத‌ற்கு எதிர்வினை ஆத‌ர‌வுவினையென்று விவாத‌ங்க‌ளும், கூட‌வே வ‌ன்முறையாள‌ர்க‌ளின் கைங்க‌ர்ய‌த்தினால் வாக‌ன‌ங்க‌ளும் கொடும்பாவிக‌ளும் கொழுந்துவிட்டு எரிந்த‌ன‌.

மூத்த‌ அர‌சிய‌ல்வாதியும், ஒரு மாநில‌த்தின் முத‌ல்வ‌ருமான‌ க‌லைஞ‌ர் கூட‌,"என் எலும்பை உடைத்தாலும் ஒக்க‌னேக்க‌ல் திட்ட‌த்தை நிறைவேற்றியே தீருவேன்" என் போர்ப்ப‌ர‌ணி பாடினார்.

த‌மிழ்நாடும் க‌ர்நாட‌க‌மும் இறுதிப்போருக்கு த‌யாராகி விட்ட‌து போன்றே ஒரு தோற்ற‌ம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.


ராம‌நாராய‌ணின் ஏற்பாட்டினால் க‌லைய‌ல‌க‌த்தின‌ரைம் இந்த‌ போராட்ட‌த்தில் க‌ல‌ந்துக்கொள்ளுமாறு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

ஒக்க‌னேக்க‌ல் திட்ட‌த்தை எதிர்க்கும் க‌ர்நாட‌க‌த்தைக் க‌ண்டித்து திரையுல‌க‌த்தின‌ரின் உண்ணாவிர‌த‌ப்போராட்டம் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

அதுவும் எப்ப‌டி?

இந்த‌ போராட்ட‌த்தில் அனைவ‌ரும் க‌ல‌ந்துக்கொள்ள‌ வேண்டும்.
குறிப்பாக‌ கர்நாட‌த்தைப் பிற‌ப்பிட‌மாக‌க் கொண்டு த‌மிழ்த்திரையுல‌கில் இருக்கும் ந‌டிக‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ண்டிப்பாக‌ க‌ல‌ந்துக்கொள்ள‌ வேண்டும்.
த‌வ‌றினால், இனி த‌மிழ்த்திரைப்ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ முடியாத‌ப‌டி யாரும் ஒத்துழைப்பு த‌ர‌மாட்டார்க‌ள் என்று அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

அப்போதே இது ர‌ஜினிக்கு வைத்த‌ வ‌லை என்று எல்லோருக்குமே தெரிந்தது.


{(ஒரு சின்ன‌ Flash Back

இதே போல‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்பு இதே திரையுல‌க‌த்தின‌ர் இதே க‌ர்நாட‌க‌த்தைக் க‌ண்டித்து பார‌திராஜா த‌லைமையில் நெய்வேலியில் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்திய‌போது,
ர‌ஜினி க‌ல‌ந்துக்கொள்ளாது த‌விர்த்து ப‌ல‌ விம‌ர்ச‌ங்க‌ளுக்கு ஆளாகி,
அடுத்த‌ நாள் சென்னையில் த‌னியாக‌ உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம் ந‌ட‌த்தினார்.
அப்போது இதில் ந‌ம் உள்மாநில‌ அர‌சிய‌லும் சேர்ந்து விளையாடிய‌து.)]



உண்ணாவிர‌த‌ம் தொட‌ங்கிய‌து.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளை தூக்கிய‌டிக்கும் வ‌கையில் ர‌ஜினி அந்த‌ உண்ணாவிர‌த‌த்தில் ப‌ங்கு கொண்டார்(அப்ப‌டி அவ‌ர் க‌ல‌ந்துக்கொள்ளாம‌ல் இருந்திருந்தால் இப்ப‌ அடித்த‌ கும்மிக‌ள் அப்போதே அடிக்க‌ப்ப‌ட்டிருக்கும்)

அந்த‌க்கூட்ட‌த்தில் கூட‌ சில‌ ந‌டிக‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பேச்சாலும் செய‌லாலும் அவ‌ரை சீண்டின‌ர்.

பின்ன‌ர் அவ‌ர் உரை நிகழ்த்தும் போது மிக‌வும் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டார்.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளைவிட‌ த‌ன் த‌மிழ்நாட்டுப்ப‌ற்று ச‌ற்றும் குறைந்த‌த‌ல்ல‌ என
காட்ட‌வோ, என்ன‌மோ மிக‌ காட்ட‌மாக‌, "ஒக்க‌னேக்க‌ல் திட்ட‌த்திற்கு பிர‌ச்சினை செய்ப‌வ‌ர்க‌ளை உதைக்க‌ வேண்டாமா" என‌ கேட்டார்.

அத‌ன் பிற‌கு க‌ர்நாட‌க‌த்தில் ஆங்காங்கே ர‌ஜினி கொடும்பாவி எரிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.

ந‌ம‌து த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரும் தேர்த‌ல் நேர‌த்தில், த‌ன‌து கூட்ட‌ணிக்க‌ட்சியான‌ காங்கிர‌ஸிற்கு த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ம் த‌ர‌வேண்டாமென‌ த‌ற்காலிக‌மாக‌ இந்த‌த்திட்ட‌த்தையே நிறுத்தி வைப்ப‌தாக‌ அறிவித்தார்.

ஆக‌ மொத்த‌த்தில் ஒக்க‌னேக்க‌லுக்காக‌ க‌ர்நாட‌க‌த்துடன் ஒரு போர்பிர‌க‌ட‌ன‌ம் செய்வ‌து போன்ற‌ ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌ச்னை, க‌டைசியில் ர‌ஜினியின் மாநில‌ப்ப‌ற்றை சோதித்தத‌ற்கு பின் ஒரு ச‌ப்பை மேட்ட‌ராகி செத்துப் போன‌து.

ஆனாலும் க‌ர்நாட‌க‌த்தில் ர‌ஜினியின் கொடும்பாவி எரிப்பு ம‌ட்டும் தொடர் க‌தையான‌து.


அர‌சிய‌ல்வாதிக‌ளின் வீண் அல‌ங்கார‌ ஆர்ப்ப‌ரிப்பு வார்த்தைக‌ளை ந‌ம்பி, தானும் உண்ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்டு, ப‌லிக‌டா ஆன‌தை மிக‌ லேட்டாக‌வே ர‌ஜினி உண‌ர்ந்திருக்க‌ வேண்டும்.

அதிலிருந்து மவுன‌ம் சாதித்து வ‌ந்த‌வர், இன்று அவ‌ருடைய‌ குசேல‌ன் ப‌ட‌ வெளியீட்டிற்கு க‌ர்நாட‌க‌த்தில் வ‌ந்த‌ எதிர்ப்பினால், த‌ன் ர‌சிக‌ர்க‌ளுக்கும் அடாவ‌டிக்கார‌ர்க‌ளுக்கும் பிர‌ச்னை ஏற்ப‌ட்டு வீண் க‌ல‌வ‌ர‌ம் வ‌ருவ‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், திரைப்ப‌ட‌த்தொழிலை ம‌ட்டுமே ந‌ம்பி பிழைக்கும் ப‌ல‌ பேர் பாதிக்க‌ப்ப‌டுவார்க‌ளே என்ற‌ ந‌ல்லெண்ண‌த்தில் தான், தான் ஒரு க‌ட்ட‌த்தில் உணர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு பேசி, பின் அப்ப‌டி பேசி இருக்க‌வே கூடாது என்று த‌ன‌க்குத்தானே முடிவு செய்துகொண்ட‌ அந்த‌ வார்த்தையை கூறி அத‌ற்காக‌ வ‌ருத்த‌ம் தெரிவித்துக்கொண்டிருக்க‌ வேண்டும்.

இதில் எங்கே இருக்கிற‌து முர‌ண்பாடு.


இப்ப‌டி பேசிய‌த‌ற்காக‌ அவ‌ர் கொடும்பாவியை க‌ர்நாட‌க‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ எரித்த‌போது எத்த‌னை பேர் அவ‌ருக்கு உறுதுணையாக‌ நின்றார்க‌ள். அது ஏதோ ர‌ஜினியின் சொந்த‌ப்பிர‌ச்சினை போல‌ அல்ல‌வா க‌ண்டும் காணாம‌ல் இருந்த்தார்க‌ள்.

இப்போது அவ‌ர் வ‌ருத்த‌ம் தெரிவித்த‌வுட‌ன், க‌ர்நாட‌க‌த்திட‌ம் ம‌ன்னிப்பு கேட்டு விட்டார் ர‌ஜினி!விடாதே, பிடி!! என்று எல்லோரும் ஓடி வ‌ருகிறார்க‌ள்.

க‌ர்நாட‌க‌மா த‌மிழ‌க‌மா என்றால் ர‌ஜினி ந‌ம் ப‌க்க‌ம் தான் என்ப‌தை விட‌
அவ‌ர் எப்ப‌ ச‌றுக்குவார் ஏறி மிதிக்க‌லாம் என்று அலைவ‌து நியாய‌ந்தானா?

சிந்திப்போம்!

ர‌ஜினி ஒரு திரைப்ப‌ட‌க்க‌லைஞ‌ன்!
அர‌சிய‌ல்வாதிய‌ல்ல‌!!


டிஸ்கி1: இதை எழுத‌ ஆர‌ம்பித்து 5 நாட்க‌ள் ஆகிற‌து. நேர‌மின்மையால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இன்றுதான் முடிக்க‌ முடிந்த‌து. முடிஞ்சி போன‌ மேட்டர்னு நினைக்காதிங்க‌ .

ஆறின‌ க‌ஞ்சி ப‌ழ‌ங்க‌ஞ்சி உண்மைதான். ஆனால் இது சாதா க‌ஞ்சி அல்ல‌, சுண்ட‌க்க‌ஞ்சி
நாள் ஆக‌ ஆக‌த்தான் போதை ;-o

டிஸ்கி2: நான் ர‌ஜினி ர‌சிக‌ன் அல்ல‌. இன்னும் குசேல‌ன் பார்க்க‌வில்லை.

ஞாயிறு, ஜூலை 27, 2008

எப்படா திருந்துவீங்க ?

வருடத்திற்கு ஒரு முறை கோடை காலம், வசந்த காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் வருவதைப்போலவே, நம் நாட்டில் குண்டு வெடிப்பும் தவறாது வரும்.

வந்ததும், வழக்கமான சடங்குகள் ஆரம்பமாகிவிடும். பிரதமர், ஜனாதிபதி கண்டனம் தெரிவிப்பார்கள். மாநில முதல்வர் கண்டனம் தெரிவிப்பதோடு நிவாரண நிதியும் அறிவிப்பார்.

மத்திய எதிர்க்கட்சி தலைவர் பிரதமரையும் ஆளுங்கட்சியையும் குறை சொல்வார். மாநில எதிர்கட்சி முதல்வரைச்சாடும். போலீஸ் விசாரணை, குற்றவாளியின் உருவம் வரைவு, துப்பு துலக்கல் இத்யாதி இத்யாதி என இறுதியில் குற்றவாளிகள் என சிலர் கைது செய்யப்படுவார்கள்.

வழக்கு, விசாரணை என்று நீண்ட்ட்ட்ட பின் தீர்ப்பு சொல்லப்படும். அதில் மரண தண்டனை இல்லையென்றால் ஒரு நாள் பரபரப்போடு அடங்கிவிடும்.

மாறாக, மரண தண்டனை யாருக்கேனும் விதிக்கப்பட்டால் அவ்வளவுதான், நாடு முழுவதும் வாதப்பிரதி வாதங்கள் ஆரம்பித்துவிடும்.

இதில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சிறுபான்மை இனத்தவர் என்றால், நிச்சயம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றபடாது.
(வேற, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை நாட்டுப்பற்றா வாங்கிதரும்? புத்தி சொல்ல வந்திட்ட பெர்றிய புண்ணாக்கு மாதிரி).

இப்படி இந்த சீரியல் நடந்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த குண்டு வெடிப்பு எங்கேயாவது நடந்திருக்கும். மீண்டும் பிரதமர், ஜனாதிபதி கண்டனம், மாநில முதல்வர் கண்டனம் தெரிவிப்பதோடு...............................................இன்ன பிற சடங்குகள் இனிதே நடந்தேறும்.

நமக்கும் நல்லா பொழுது போகும்.
சிவாஜி, தசாவதாரம் படங்களின் காரசார விமர்சனங்களுக்கு மத்தியில் நமக்கும் வித்தியாசமாக,விறுவிறுப்பான செய்திகள் கிடைக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்டோர் நிலமை, பலியானோர் குடும்பதினர் கதி என்ன ஆனது என்பது அந்த சம்பவத்தோடு நமக்கு மறந்துவிடும்.

நமக்கோ இது ஒரு பரபரப்பான செய்தி ஆனால் அவர்களுக்கோ வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்ட ஒரு சதி.

அந்த நாளின் வடு அவர்களுக்கு மறக்க முடியாதது மட்டுமல்ல மறந்து தொலைக்க முடியாததுமாகும்.

இதை ஏன் நாம் தொடர விடுகிறோம் என சிந்திப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை.

முதலில் அரசை கேட்கிறேன்

உங்களை நாங்கள் பிரதமர், முதல்வர் என பதவியில் அமர்த்தியதே, கண்டனம் தெரிவிக்கவும் நிவாரண நிதி வழங்கவும் தானா?

இதை செய்தவர்கள் யார்?

என்ன வேண்டும் அவர்களுக்கு?

அவர்கள் கோரிக்கை அல்லது கோபம் நியாயந்தானா?

அப்படி நியாயமான கோரிக்கை என்றால் அதை நிறைவேற்றி வைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
இதன் மூலம் தீவிரவாதத்தை வளர்க்கும் சர்வதேசக்கும்பலின் இந்திய ஊடுறுவலை தடுக்கலாமே!

மாறாக நியாயமற்ற கோரிக்கையை மறுத்ததிற்காக தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள் என்றால், அவர்களை தூக்கில் போடுவதில் என்ன தவறு?
ஏன் தூக்கு?
என்கவுண்டரிலே காரியத்தை முடிக்கலாமே.

ஏன் இதை செய்ய தயங்குகிறீர்கள்?

அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடாதீர்கள்.

தீவிரவாதிகளே,

உங்களது கோரிக்கைதான் என்ன?

அதற்கு இது தான் வழியா?

வேறுவகையில் உங்கள் கோரிக்கையை கேட்க முடியாதா?

பலியான அப்பாவி மக்களின் மீதுதான் உங்களது கோபமா?

அவர்களின் ரத்தத்தினால் உங்கள் எதிபார்ப்பு தீர்ந்து விட்டதா?
அல்லது அவர்களின் உயிர்பலிதான் உங்கள் எதிர்பார்ப்பா?

உங்களைக் கேட்டால் குஜராத் பிரசினை காரணம் என்பீர்கள்.
அவர்களைக் கேட்டால் ரயில் எரிப்பு காரணம் என்கிறார்கள்.
ரயிலை எரித்தவர்களைக் கேட்டால் பாப்ரி மசூதி இடிப்பு காரணம் என்பார்கள்.

இப்படி ரயில் பெட்டி போல காரணங்களை கோர்த்துக்கொண்டே போனால்
எப்போது யார் நிறுத்துவது?

அப்பாவிகள் அனைவரும் அழிந்த பிறகா?

மதப்பற்று, மத வெறியாகி, மனித உயிர் குடிக்கும் இரத்தக்காட்டேரியானது ஏன்?


மதத்திற்காகத்தான் தீவிரவாதமென்றால் தயவு செய்து தீவிரவாதத்தை விட்டு விடுங்கள்.
ஏனெனில் அந்த மதங்களே உங்களை மன்னிக்காது.

மாறாக, தீவிரவாதத்திற்காகத்தான் மதமே என்றால்
அந்த மதங்களையே தூக்கி எறியுங்கள்.


நம் தேசத்தை அமைதிப்பூங்காவாக மாற்றுங்கள்.


இறுதியாக அரசுக்கு ஒரு கோரிக்கை

உங்களால் தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உறுதியான நிலை எடுக்க இயலவில்லை என்றால்,தயவுசெய்து 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வடிவேலு பாணியில் ஒரு திறந்த மைதானத்தை நிறுவுங்கள். அதில் சாதி, மத வெறியர்கள் அடித்து கொண்டு சாகட்டும்.

எங்கள் அப்பாவி சகோதரர்கள் நாட்டில் நிம்மதியாக வாழட்டும்.