இன்று ஒரு குறள் !

திங்கள், டிசம்பர் 31, 2012

பெண்கள், வன்புணர்வு, பர்தா - நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்



நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம். 21 ம் நூற்றாண்டிலிருந்து 22 ம் நூற்றாண்டை நோக்கியா இல்லை மீண்டும் கி.மு.வை நோக்கியா.

அறிவு ஜீவிகளாக கருதிக் கொண்டு சிலர் உதி்ர்க்கும் கருத்து்கள் அப்படித் தான் இருக்கிறது


 
இஸ்லாமிய பெண்கள் போல பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து முத்தை உதிர்த்திருப்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நித்தியானந்தாவின் சொர்க்கத்தில் எல்லையற்ற இன்பங்களில் மூழ்கி கிடந்தவர். அதற்கு பலனாக இளைய ஆதின பதவியையே விலையாக தந்தவர்.

 
 இவரெல்லாம் சமுதாய நலனை பற்றி பேசவில்லை என யார் அழுதது.


இதைப் போன்ற இன்னொரு கருத்து முத்தை Dr. Anita Shukla என்ற விஞ்ஞானி, தான் ஒரு பெண் என்பதையும் மறந்து விட்டு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

‘Women instigate men to commit such crimes'. She accused the victim of being insensible as she was out of her house after 10 pm. Shukla claimed that if a girl wanders late at night with her boyfriend; such situations are bound to happen.


அதாவது   பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் இரவு பத்து மணிக்கு மேல் ஏன் வீட்டை விட்டு வெளியில் தன் ஆண் நண்பருடன் சுற்றி திரிய வேண்டும்.
 
அதனால் தான் இப்படி பாலியல் பலாத்காரத்திற்கு பலியாக நேரிட்டது.

அதாவது இரவில் வெளியில் செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது.
 
ஆண்கள் மட்டுமே இரவில் ஊர் சுற்றலாம், வீதியில் தண்ணி அடிக்கலாம் எதிரில் ஏதேனும் பெண்கள் தென்பட்டால் தங்கள் காம வெறியை தீர்த்து கொள்ளலாம்.
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் குடலை வெளியில் உருவி போடலாம்.
 
ஆஹா என்னே சமத்துவம் என்னே சனநாயகம்.

மேலும் அந்த விஞ்ஞானி கூறுகிறார்

‘The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'

அதாவது, அந்த பெண் தன்னை ஆறு பேர்  சூழ்ந்து பலாத்காரம் செய்ய முற்படுகையில் அவர்களுக்கு அடங்கி ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் தனது குடலை காப்பாற்றியிருக்கலாம்

ஆஹா என்னே ஒரு க(பெ)ண்ணியமான கருத்து. இதையே தான் தான் பெற்ற பெண்களுக்கும் சொல்லி வளர்ப்பாரோ என்னமோ.
 
அதாவது காஞ்சனா என்ற படத்தில ஸ்ரீமன், ஆவியை பார்க்கும் போதெல்லாம் வாய் கோணி கொண்டே படுத்து கொள்வார். அதைப் போல, எவனாவது காம பார்வை பார்த்து கொண்டே தன்னை நெருங்கினால்  பெண்களும் அவனுக்கு ஒத்துழைக்க தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கிறாரோ இந்த மனிதாபிமானம் அற்ற பெண் விஞ்ஞானி.

 
 

குற்றம் செய்தவனை விட்டு விட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கே தண்டனை தரும் கூட்டம் இந்த கூட்டம்.
 
இவர்கள் சொல்வதை எல்லாம் நடைமுறைப் படுத்த ஆரம்பித்தால் எங்கே போய் நிற்கும் என் பாருங்கள்.
 .
இரவில் வெளியே போகாதே.
 
வேலை செய்வதால் வெளியே போக வேண்டிய சூழ் நிலை உள்ளதா -வேலைக்கே போகாதே.
 
பகலிலும் பாலியல் பலாத்காரம் நடந்து விட்டால் -
பகலிலும் வெளியே போகாதே
 
பள்ளிகூடம் போக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் - 
நீ படிக்கவே வேண்டாம்
 
கண்டிப்பாக வெளியில் சென்று தீர வேண்டிய நேரங்களில் - ஆண் துணையோடு,  ஜமுக்காளத்திற்குள் உன் உடலை ஒளித்துக் கொண்டு போ
 
 
பெற்றவர்கள் பாது காப்பில் அடைந்து கிட - திருமணம் வரை.
 
பின் கணவனுக்கு சமைத்து போடு, அவனது பாலியல் தேவைகளை தீர்த்து வை.
 
பின் பிள்ளைகளை பெற்று, வளர்.
 
பெண் பிள்ளை என்றால் அவளிடம்,   நீ பிறந்ததே, உன்னை கட்டிக்கப் போற ஆணுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யவே என சொல்லி கொடுத்து வளர்.
 
இதுக்கு ஏன் உனக்கு படிப்பு, வேலை, சுய மரியாதை எல்லாம்.

                                    



 மொத்தத்தில் பெண்களை பார்த்து இப்படி சொல்லி விடலாம் :

காப்பி மெஷின், வாஷிங்மெஷின், தையல் மெஷின் இவையெல்லாம் கேட்கிறதா எனக்கு படிப்பு வேண்டும் வேலை வேண்டும் சுயமரியாதை வேண்டும்  என்று.
 
ஆனால் ஆண்களின் செக்ஸ் மெஷின் ஆன நீ மட்டும் ஏன் இதை எல்லாம் எதிர் பார்க்கிறாய்.

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஒரு ஆணாய் நான் வெட்கப் படுகிறேன்

 
 
 
கனமான இதயத்துடன் 2012 ம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது. காரணம் அடுத்தடுத்து வந்த வ்ண்புணர்வு சம்பவங்கள், செய்திகள்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் நமது நாட்டில் பெண்கள் தனியாக, சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது எவ்வளவு வெட்க கேடான விஷயம்.
 
பெண்களை ஒரு உயிருள்ள சக ஜீவனாக, தனக்கென்று ஒரு மனமுள்ள மனுஷியாக,  உணர்வுகள் உள்ள ஒரு உயிரினமாக கருத முடியாத  ஆணாதிக்க மனநிலையிலே இந்த 21ம் நூற்றாண்டிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய கேவலம்.
 
பெரும்பான்மையான ஆண்கள் அப்படி இல்லையே என்றாலும் கூட, அப்படிப் பட்ட சிறுபான்மையினருக்காக ஆண்கள் அனைவருமே தலை குனிய வேண்டியவர்கள் ஆகிறோம்.

நாட்டின் தலை நகரான டெல்லியில்  ஒரு சில நிமிட  அற்ப சுகத்திற்காக மிருக வெறி கொண்டு, எதிர் கால கனவுகளோடு துள்ளித் திரிந்த ஒரு 23 வயது மாணவியை வண்புணர்வு செய்து வெறியை தணித்து கொண்ட பின்னரும், எதிர்த்து போராடினாள் என்ற காரணத்திற்காக அவள் பிறப்புறப்பில் கையை விட்டு கையில் கிடைத்தை எல்லாம் வெளியில் இழுத்து எறிந்த அந்த மிருகங்கள் மற்றவர்களை போலவே ஒரு தாய்க்கு தான் பிறந்திருப்பார்களோ என்றே ஐயமுற வைக்கிறது.

அந்த மிருகங்களின் வேட்டைக்கு இரையான சகோதரி சில நாட்களாக மருத்துவத்தின் துணை கொண்டு உயிருக்கு போராடி வந்தவர் நேற்று முற்றிலும் தோற்றுப் போனார்.

இந்த மிருகங்களின் வேட்டை நடந்து கொண்டிருந்த நேரங்களில், யாருடைய கண்களிலும் இந்த வெறி சம்பவம் சிக்காமல் போனது தான் மிக பெரும் வேதனை.

ஒரு நாட்டின் தலை நகரிலே, வீதிகளில்  போலீஸார் ரோந்து சுற்றுவதில்லையா ?  வீடியோ கேமராக்கள் மூலம் நகரை போலிஸார் கண்காணிப்பதில்லையா? 
 
தலை நகரினிலே இந்த வசதிகள் இல்லையென்றால்,  நாட்டின் மற்ற பிற நகரங்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் ?  இதில் இந்தியா வல்லரசாகிறது என்று விளம்பரம் வேறு.

இது தலைநகர லட்சணமென்றால், தாய்மையை மதிக்கும் நம் தமிழ் திரு நாட்டில் புனிதா என்ற 13 வயது இளங்குருத்து நாசப்படுத்தப் பட்டு கொல்லப் பட்டுவிட்டது.

இதை நாசப் படுத்தி விட்டு கொன்றவன், ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டதால் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்து, மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப் பட்டுக் கொண்டு வந்தவன்.

அப்படி தேடப்பட்டு வந்தவன் நிம்மதியாக சரக்கு வாங்கி மூச்சு முட்ட குடித்து விட்டு, போதை அதிகமாகி போக வேண்டிய ரயிலை தவற விட்டு ரயில் நிலையத்திலேயே மட்டையாகி கிடந்திருக்கிறான்.
 
அடுத்த நாள் தெளிந்து, மிக சாவகாசமாக நடை பயணமாக ஊர் போக, வழியில் வந்த அந்த சிறுமியை பார்த்ததும் வேட்டை ஆடி இருக்கிறான் (அந்த நேரம் அந்த சிறுமிக்கு பதில் ஆடு மாடு வந்திருந்தாலும் விட்டுருக்க மாட்டான் போல).
 
அது வரையிலும் போலிஸார் அவனை தேடிக் கொண்டே..டே..டே..டே..  இருந்திருக்கிறார்கள். ஒரு வேளை அவன் லோக்கலில் இருப்பது தெரியாமல் லண்டனிலும் பாரிஸிலும் போய் தேடிக் கொண்டிருந்தார்களோ என்னமோ.

இந்த இரண்டு சம்பவங்கள் தான் என்றில்லை இது போல் இன்னும் எண்ணற்ற வண்புணர்வுகள் அங்கங்கே தினமும் அ்ரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
 
சில சின்ன செய்தியாக பத்திரிக்கையில் இடம் பெறுவதும், பல போலீஸ் மற்றும் ஊடகங்களின் கண்களுக்கு படாமலே போய் விடுவதாகவும் இருக்கிறது.
 
ஒரு 3 வயது குழந்தையை கூட குழந்தை என்று பார்க்காமல், தன் இச்சையை தீர்க்க கிடைத்த எதிர் பாலினம் என்று பார்க்க தூண்டும் காம வெறி பிடித்தவர்களின் மத்தியில் தான் நாமும் வாழ்கிறோம் என் நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
 
சகோதரிகளே, நான் வெட்கப் படுகிறேன் !
ஆம் !!  ஓரு ஆ்ணாய் நான் வெட்கப் படுகிறேன் !!!

செவ்வாய், நவம்பர் 06, 2012

கருத்துரிமை காப்போம்

I-T ACT SECTION 66 A - தேவை மறு பரிசீலனை





I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
 
 
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 நன்றி தருமி அய்யா

ஞாயிறு, மே 27, 2012

இது தான் சவுதி அரேபியா - நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!

இன்று தட்ஸ் தமிழில் மேய்ந்த போது இந்த செய்தி கண்ணில் பட்டது. உடனே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று பதிவேற்றி உள்ளேன்.

இங்குள்ள சிலரால் சவுதி ஒரு புனித பூமி ரேஞ்சுக்கு பேசப் படுகிறது. அந்த விசுவாசத்தின் உச்ச கட்டமாய் இந்தியாவையும் மட்டப் படுத்த தோன்றுகிறது.

 இதற்காக இணையத்தில் தேடியலைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் செய்திகளையும், ஒளி, ஒலிப் பதிவுகளையும் பதிவேற்றுகிறார்கள்.

 அவர்களுக்கு, அவர்களின் புனித பூமியின் லட்சணத்தை புரிய வைக்க, தானாக வந்து கண்ணில் பட்ட இந்த ஒளிப்பதிவை காண தருகிறேன்.

கீழே தட்ஸ்தமில் செய்திக்கு பிறகு  சுட்டியை சொடுக்கி பார்க்கவும்



நெயில் பாலி்ஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மோதிய செளதி போலீஸ்!


லண்டன்: செளதியில், நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளைக் காக்க நியமிக்கப்பட்ட போலீஸார் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செளதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ் பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் போலீஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியை அநத்ப் பெண் யூடியூபில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து போலீஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், என் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. என்னைப் பின் தொடர்ந்து வர நீங்கள் யார் என்று ஆவேசமாக கூறுகிறார்.

ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று போலீஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.

மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் செளதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.

  - நன்றி  tamil.oneindia.in



சொடுக்கி பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=OpUUOYRLW3k




சனி, மே 26, 2012

அம்மாவின் கலைஞர்தனம்

ஜெவுக்கம் கலைஞருக்கும் எனக்கு தெரிஞ்சி ஒரே ஒரு விஷயத்திம் மட்டுமே ஒற்றுமையுண்டு அது என்னான்னு அப்புறம் சொல்றேன்.
மற்றபடி இருவரும் செயல்பாடுகளும் வெவ்வேறு வகையானது.

ஜெவின் செயல்களில் 'நான்' என்ற ஆணவம் இருந்தாலும், வழ வழா கொழ கொழா என்று  இருக்காது. எப்போதும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான். 

அது விடுதலைபுலிகள் இயக்க எதிர்ப்பு ஆகட்டும் வீரப்பன் என்கவுண்டர் ஆகட்டும் 

இன்னும் சங்கராச்சாரியார் கைது, வாஜ்பாயி ஆட்சி கவிழ்ப்பு, பிரபாகரன் கைது தீர்மானம், பொடா அரசு ஊழியர் சாலைப்பணியாளர் பிரச்னைகள் என்று தொடர்ந்து 

இப்போது தலைமைசெயலகம் மாற்றம், சமச்சீர் கல்வி கைவிடும் முயற்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

மக்கள் என்ன நினைப்பார்கள், மீடியா என்ன சொல்வார்கள் என்ற எண்ணம்  கிஞ்சித்தும் இல்லாமல், தான் நினைத்தபடி ஒரு முடிவு எடுத்து  அதில் உறுதியாய் நிற்பது அவரது தனி ஸ்டைல்.

ஆனால் கலைஞரோ  எவ்வளவு முக்கியமான பிரச்னையிலும் தன்னுடைய  முடிவை தெளிவாக அறிவித்து அதை முன்னெடுக்க  இயலாமை

சட்ட எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு பின் நீதிமன்றத்தில் ஒரு காகிதத்தைதான் எரித்தோம் என்று கூறுதல்

சங்கராச்சாரியார் வழக்கு மொக்கையாகும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒரு பக்கம் மத்திய அரசில் பங்கெடுத்துக்கொண்டே இன்னொருபக்கம் ஈழப்போருக்கான போராட்டங்கள் நடத்துதல்

  நான்கு மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டு இறுதியில் போர் நின்றுவிட்டது என்ற பொய்யாக அறிவித்தல்

இப்படி பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க மல்டி ரோல்களில் மிளிர்வது கலைஞர் ஸ்டைல்.

ஆனால் இப்போது அது ஈழத்தமிழர் விஷயத்தில் இளித்துக்கொண்டு போய்விட்டது என்பது வேறு விஷயம்


இப்படியிருக்க

சமீபத்தில் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற 3 பேரின் உயிர் போகும் பிரச்சினையில் ஜெ கலைஞர் போல மங்காத்தா ஆடியிருக்கிறார்.  

கடந்த மாதத்தில்  தமிழக சட்டமன்றத்தில், மூன்று பேரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய சொல்லி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியவர்,

 இந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மூவரின் மரண தண்டனை ரத்து செய்ய கோரும் வழக்கில்,  மனுவையே தள்ளுபடி செய்யும்படி ஜெவின் தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.

என்ன ஒரு தெளிவு அம்மையாருக்கு!

தமிழர்களை ஏமாற்றும் விஷயத்தில் ஜெவும் கலைஞரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைகோவும் அறிக்கை விட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை  ஜெவிடமிருந்து  எந்த பதிலும் இல்லை.

பொதுவாக ஜெவின் அல்லக்கைகள் அவர் பெயர் போட்டு அடிக்கும் சுவரொட்டிகளில் "புரட்சிதலைவி அம்மா" அவர்கள் என்றே குறிப்பிடுவர்.
இனி அதை மாற்றி "கலைஞர் அம்மா" அவர்கள் என்று குறிப்பிட்டாலும் 
பொருத்தமாகவே இருக்கும்



டிஸ்கி : ஜெவுக்கம் கலைஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, 'மக்களை ஏமாற்றி சுரண்டுவது' என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னா, உங்களுக்கு இவங்க நிச்சயமா தேவைதான்.

வேற என்னத்த சொல்ல :-(

துளிகள் : தமிழ் புத்தாண்டு, கலெக்டர் சகாயம், ராமஜெயம்



 நான் போன இடுகையில் எழுதிய மாதிரியே முன்னாள் மந்திரி கே என் நேருவின் தம்பி கொலை வழக்கில், போலீஸ் ஒரு இஞ்ச் கூட முன்னேறியது மாதிரி தெரியவில்லை. இன்னமும் துப்பு துலக்குகிறார்களாம். இதில் அம்மா ஆட்சிக்கு வந்ததால் சட்டம் ஒழுங்கு ரொம்ப சீர்பட்டு விட்டதாக பெருமைமிகு பிரசாரம் வேறு.



மதுரை கலெக்டர் சகாயம் கோ ஆப் டெக்ஸ் க்கு மாற்றம் செய்ய பட்டிருக்கிறார்.
திறமை மிகுந்த, ஊழலற்ற, மக்கள் நலனை முதன்மையானதாக கருதிய கலெக்டர் என் சாதாரண உழைக்கும் மக்களால் அனுமானிக்கப்பட்ட திரு சகாயம், ஒரு உப்பு சப்பில்லாத துறைக்கு திடீரென மாற்றப்பட்டதன் மர்மம் என்னமோ ???!!!

பொதுவாக சில வருடங்களாக, ஜனவரி மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் தமிழ் வருட பிறப்பு எதுவென்று நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனால் மே மாதமான இந்த மாதத்தில், ஓரிரு நாட்களுக்கு முன் இதைப் பற்றி இடுகை ஒன்றை படிக்க நேர்ந்தது.



அதில் தமிழ் புத்தாண்டை தை மாதம் முதல் தேதியாக அறிவித்த கருணா்நிதி செய்தது சரி என்றும் அதை திரும்ப சித்திரை ஒண்ணுக்கு மாற்றிய ஜெயலலிதா செய்தது ஆர்ய சூழ்ச்சி என்றும் சொல்லப்பட்டிருந்தது.

மேலும் அப்படி தமிழ் புத்தாண்டை மாற்றிய ஜெவை கண்டிக்காத தமிழறிஞர்களையும் அது சாடி இருந்தது.

இதை பார்த்ததும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்

இதற்கு மட்டுமா தமிழறிஞர்கள் மவுனியாக இருக்கின்றனர் அண்ணா நூலக மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைக்கும் தானே. அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்!

எதிர்கட்சியின் ஹீரோவாக கொண்டாடப்பட்ட நம்ம அஞசாநெஞ்சன் அண்ணாச்சியே மம்மியை  பார்த்து பம்மி கிட்டு இருக்கும்போது எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாத தமிழ் அறிஞர்கள் என்ன செய்ய இயலும்?

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே

திங்கள், ஏப்ரல் 09, 2012

ராமஜெயம் கொலை - திணரும் போலீஸ்

முன்னால் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலைக்காண நோக்கம் மற்றும் கொலைகாரன்(ரி) பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் தலையை பிய்த்து கொண்டிருப்பது போல் தெரிகிறது .

தினம் ஒரு செய்தியை மீடியாக்கள் வெளியிடுகின்றன.

காலை 5 மணிக்கு வாக்கிங் போன போது கடத்தி கொல்லப்பட்டார் அரசியல் தகராறில் நடந்த கொலை என்றனர் முதலில்.பிறகு ரியல் எஸ்டேட் விவகாரம் என்று ஆகி, தற்போது பொம்பளை விவகாரமாக  என் வந்திருக்கிறது.

மேலும் இப்போது அவர் வாக்கிங் போனபோது கொல்லப் படவில்லை முதல்னாள் இரவில்  தொடுப்பு வைத்திருந்த பெண் வீட்டில் தங்கியிருந்த போது கடத்தப்பட்டு விடிகாலை 2.50க்கு கொல்லப்பட்டார் என்கின்றனர்

இன்னும் என்னென்ன காரணங்கள், விவகாரங்கள் வெளிவருமோ...

நம் போல் ஒரு சாமான்யன் கொலையுண்டால் ஒரு வாய்க்கா வரப்பு தகராறோ, பங்காளி சண்டையோ, கடன் தகராறோ உடனே கொலைக்கான நோக்கம் மற்றும் கொலையாளி எளிதில் ஊருக்கே தெரிந்து விடும்.

இவர்களை போல் ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் ரவுடிகள், எல்லா அயோக்கிய தனங்களையும் செய்து ஊர் முழுதும் எதிரிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள்.

வெளியில் யாருக்கும் தெரிய வராது என்ற நிலையில் சந்தர்ப்பம் கிடைத்தால், ஒரு சாமான்யனே தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று விடுவான்.

அதனால் இவர்களுக்கு இருக்கும் எதிரிகளில் எவனுக்கு கொலை செய்ய சந்தர்ப்பம் வாய்த்தது என்பதே போலீஸாரின் புலனாய்வாக இருக்கும் என்பதே என் கருத்து.

ஆக மொத்தம் இதற்கு எது காரணமாக இருந்தாலும், யார் காரணமாக இருந்தாலும், இப்படிப்பட்ட கட்ட பஞ்சாயத்து பேர்வழிகள், அடுத்தவன் குடியை கெடுப்பவர்கள், அடுத்தவன் நிலம், வீட்டு பெண்கள் என ஆட்டையை போடும் அரசியல் ரவுடிகள், அவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும்  அழிந்து போவது தான் சமுதாயத்திற்கு நல்லது.




வெள்ளி, பிப்ரவரி 17, 2012

இப்போதாவது" விழித்திடு தமிழா !!! .... முல்லை பெரியாறு நமது "உரிமை பிரச்சனை'

 நண்பர் பதிவர் Raju Online  முல்லை பெரியாறு பிரச்சினையில்  மற்ற பிற மாநிலத்தவர் தமிழ் நாட்டை மோசமாக நினைக்கின்ற வகையில் கேரளம் திரிபுவாதம் செய்வதை விவரிக்கிறார். இதை தமிழ் நாடு சரிவர எதிர் கொள்ளவில்லை என வருந்துகிறார். இதில் நம் பங்குக்கு அவர் எண்ணங்களை் இன்னும் பலரை அடைய வேண்டும் என்ற நோக்கில் என் வலைப்பதிவில் அவர் அனுமதியுடன் பதிகிறேன்.

இனி அவரின் வார்த்தைகளில் :

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116
வருட சுண்ணாம்பு அணை இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?இது என்ன வீண் பிடிவாதம் ?இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -
இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே சென்னையிலேயே கூட,படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !
புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999
ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !
இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4
மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.
பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.
பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66
டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104
அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)
ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.
அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !
புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.
சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.
அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709
முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.
புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.
புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.
ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35
லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10
டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.
இரண்டாவதாக -

1976
ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979
ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000
ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.
கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40
டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000
ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.
கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.








இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156
அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.
மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.
பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ் நாடு ஏமாந்தது போதும்.


http://rajuinfotech.blogspot.com/2011/12/kolaveri-song-promote-please.html


திங்கள், பிப்ரவரி 06, 2012

அம்மாவிற்கு வந்த கோபம் - அரசியல் விமர்சகர் சோமாஸ் பேட்டி

சட்டசபையில் நடந்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்  மோதலை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் 10  நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே.

இதைப்பற்றி பிரபல அரசியல் விமர்சகர் சோமாஸ் என்கின்ற சோமசுந்தரத்தை சந்தித்து அவரின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள நேரம் வாங்கி அவரி்ன் இல்லம் சென்றோம்.

அவரின் அலுவலக அறையில் சிறிது நேர காத்திரு்ப்புக்கு பி்ன்,
 
"அத்வானி அத்வானி... தலைக்கு கீழே வச்சிக்கோ தலவானி தலவானி.. அப்படியும் பொழுது உனக்கு போகலைன்னா யூடூயூபில பார்த்துக்க மொத்வானி ஹன்ஸிகா மொத்வானி ஆஹா ஹன்ஸிகா மொத்வானி...."  என்று ஒரு பாடலை முணு முணுத்தபடியே வந்து சேர்ந்தார் .

வந்ததும் நேராக எங்களிடம், "முக்கியமான கேள்விகள் மட்டும் கேளுங்க   தனி தனியாய் பல  கேக்காதீங்க 'ஐ அம் வெரி பிஸி.'

இப்பக்கூட குஜராத்திலிருந்து ஒரு முக்கியமான காலுக்கு 'ஐ அம் வெய்ட்டிங்' இருந்தாலும் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திட்டதால   தான் இங்கே வந்தேன. கேளுங்கள் 'குவீக் குவீக்'"   என்று   அவசரப்படுத்தினார்.



உடனே நாமும்,

சட்டசபையில் முதல்வர் "அதிமுக வினால்தான் கூட்டணி கட்சிகள் வென்றன  என்று கூறுகிறார்  ஆனால் எதிர்கட்சி தலைவர் ஊர் கூடி தானே தேர் இழுத்தோம். அதனால் இந்த வெற்றியில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று பதிலுக்கு சொல்கிறார். அப்படி சொல்றதும்  நியாயமாக தானே இருக்கிறது. இதில உங்க கருத்து?

ஆமா உண்மைதான்! ஊர் கூடித்தான்யா தேரை இழுத்தோம். தேர்தான் நிலைக்கு வந்திடிச்சில்ல  அதோடு போக வேண்டியது தானே. அத உட்டுபுட்டு  தானும் அந்த தேரில் ஏறனும்னா என்ன அர்த்தம்.

இப்ப ராமாயணத்திலே எடுத்திக்கிட்டீங்கன்னா, ராமபிரான் தனியாவா போய் ராவணன் கிட்ட சண்டை போட்டாரு? அனுமான் தலைமையில் குரங்கு படையோடதானே போனாரு.

இன்னும் கூட சீதை் இருந்த இடத்தை கண்டுபிடிச்சது, சீதைக்கு தைரியம் சொன்னது, இலங்கையில் முதல் கலவரத்தை ஆரம்பிச்சது எல்லாமே அனுமான் தான். அதுக்காக தானே ராமர் தன்னை அனுமான் நெஞ்சில் சுமக்கிற பாக்கியம் தந்தார். அனுமானை தூக்கி ராமன் தன் நெஞ்சில் சுமக்கலியே.

அதே போல இவர் எதிர்கட்சி தலைவராய் முதல்வருக்கு மிக அருகாய் எதிரில் அமர்ந்திருக்கிறார். முதல்வருக்கு நிறைய முறை வந்தனம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதை , நினைத்து பெருமை படுவதை விட்டு விட்டு தனக்கு மரியாதை தரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியான அபத்தம் இல்லையா.. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமோ?



கேள்வி : தகுதி வேணும்னு நீங்களும் சொல்கிறீர்கள். தகுதி இல்லாதவர் என்றும் பார்க்க அருவருப்பா இருக்குதுன்னும் முதல்வரும் கோபமா சொல்றார். அந்த தகுதி என்னன்னு ........

முதல்வருக்கு கோபம் வராம வேற என்ன செய்யும்

பெரிய பதவிக்கு வர கீழ்கண்ட தகுதிகளில் ஒன்றாவது இருக்கணும்லே

ஒண்ணு அவாளாக இருக்க வேணும்

இல்லை

அட்லீஸ்ட் செவப்பு தோலாவாது இருக்கணும்

அதுவும் இல்லன்னா

அரைகுறை ஆடையில வந்து ஒடம்பையாவது காட்டி  நடிச்சி இருக்கணும்

அட அது கூட இல்லன்னா

அடுத்தவன் குடும்பத்திலயாவது உள்ள புகுந்து கொழப்பி, அவுங்க தாம்பத்யத்தையே ஆட்டையை போட்டு இருக்கணும்

இப்படி எதுவுமே இல்லாம எதிர்கட்சி தலைவரா வந்து எதிரில் உக்காந்தா முதல்வருக்கு கோபம் வருமா வராதா

அதுவுமில்லாம முதல்வர் இதுவரை தனக்கு முன்னாடி கை கட்டி நிக்கிற ஆம்பிளையைதான் பார்த்திருக்காங்க இந்த ஆளு என்னானா கை நீட்டியில்ல பேசுறாரு

நீட்டின விரலை ஒடைச்சி போடுறது தான் அவருக்கு கொடுக்கிற சரியான தண்டனைன்னு சொல்லாம போனதே அவரோட பெருந்தன்மையை தான் காட்டுது

அவுங்க மட்டும் அப்படி சொல்லியிருந்தா சட்டமன்ற உரிமை மீறல் குழு அதை அப்படியே தன்னுடைய தீர்ப்பால சொல்லியிருக்கும்

அப்புறம் வெரலு இல்லாம அவர பார்க்க அம்மாவுக்கு இன்னமுமில்ல அருவெருப்பா இருக்கும்

இல்ல என்ன இருந்தாலும் ....

சரி உங்களுக்கு கொடுத்த நேரம் முடிஞ்சுடுத்து, நீங்க போகலாம் என்று சர்ரென்று கிளம்பி போனார்.

நாமும், அவரை  பேட்டி கண்ட மகிழ்ச்சியிலும். அவரை நேரில் பார்த்த பாக்கியம் கிடைத்ததால்  எங்கள் தகுதி எந்த அளவில் உள்ளது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபடியும்  அலுவலகம் திரும்பினோம்.









பின் குறிப்பு : இது முழுக்க முழுக்க கற்பனையே. கடந்த 01/02/2012 அன்று சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறேன்