இன்று ஒரு குறள் !

ஞாயிறு, அக்டோபர் 04, 2009

சிக்கனம் என்றால் என்ன விலை? - கேட்கிறார் பாரத நாட்டின் முதல் குடி மகள்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலுடன் அவரது உறவினர்கள் சுமார் 100 பேரும் சென்றுள்ளனர். தற்போது இவர்களின் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.


எந்த அரசு கொடுத்தா என்ன ?  மொத்தத்தில் அது வரி மூலம் வசூலிக்கப்பட்ட மக்கள் பணம் தானே



உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவராக மாறிய அப்துல் கலாம் எளிமைக்கு பெயர் போனார். ஆடம்பர மாளிகை போல் இருந்த ஜனாதிபதி மாளிகை ஒரு சாதாரண இடமாக மாற்றியவர். மிக மிக சிக்கனமாக செயல்பட்டவர் கலாம்.

அது யார் தப்பு?  அவர் ஒரு இளிச்சவாயராக இருந்தால் மத்தவங்களா பொறுப்பு.



அவரை அடுத்து தற்போது குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் இருந்து வருகிறார். அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அவரது மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

அதனாலென்ன ஜனாதிபதி பதவிக்கு வரவங்க  புனிதமாதான் இருக்கனும்னு நினைக்கிறது பழைய பஞ்சாங்க காலம் .



இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதீபா, தன்னுடன் 100 உறவினர்களையும் அழைத்து சென்று இருக்கிறார்.

100 பேர் மட்டும்தானே ....
எவ்வளவு பெருந்தன்மை பாருங்க

இவர்களுக்கு அங்குள்ள அரசு விருந்தினர் விடுதிகளில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சோம்நாத் கோவில், காந்தி பிறந்த போர்பந்தர், கிர் காடு மற்றும் துவாரகா கோவில் ஆகியவற்றுக்கு செல்ல இருக்கிறார் பிரதீபா.
மகாராஷ்டிராவை சேர்ந்த இவர்களுக்காக குஜராத்தில் உள்ளூர் பகுதிகளை சுற்றி பார்க்க ஏசி பஸ் மற்றும் கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குடியரசுத் தலைவருடன் வரும் இந்த மெகா உறவினர் கூட்டத்தின் செலவுகளை யார் ஏற்பார்கள் என்பதை இதுவரை குடியரசுத் தலைவர் மாளிகை சொல்லவில்லையாம்.
குடியரசுத் தலைவரின் அலுவலர்கள் கூட, வந்திருப்பவர்களின் தனி செலவுகளுக்கு பணம் கொடுப்பது பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை என்றார்.


டிஸ்கி : அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபொழுது, ஒரு முறை அவருடைய உடன்பிறந்த அண்ணன், தன் தம்பியை பார்க்க வந்து சில நாட்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்கினார். அவருக்கான செலவுகளுக்கு ஆன பணத்தினை தன் சொந்த காசில் இருந்து அப்துல்கலாம் அவர்கள் அரசுக்கு கட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாழ்க ஜனநாயகம்!

சனி, அக்டோபர் 03, 2009

அனல் பறக்கும் பதிவுலகம் !

பொதுவாகவே பதிவுலகம் அவ்வப்போது சூடாகுவதும் பின் சுருங்குவதுமாகவே இருக்கும். ஆனால் இந்த முறை குறுகிய  நாட்களிலேயே   இரண்டு முறை வெப்பம் 150°F யை தாண்டியது.

சூட்டுக்கு காரணம்
1.'போலி' டோண்டு
2. 'நிஜ' கமல்.

நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும் போலி டோண்டு விவகாரம், ஒரு பிரபல பத்திரிக்கையில் எழுதிய ஒரு பிரபல பதிவரின் கட்டுரையை தொடர்ந்து, பெரு நெருப்பாய் பற்றிக் கொண்டது. தட்டிக்கேட்ட பதிவு, கண்டன பதிவு, எதிர் பதிவு, ஆதரவு பதிவு, அற சீற்றம், புற சீற்றம் ஆராய்ச்சி கட்டுரை, 'இத்தோடு நிறுத்திக்கோ' என்று வேண்டுகோள் பதிவு இப்படி பதிவுலகமே அல்லலோகப்பட்டு ஒரு வழியாக தணிவடைந்த வேளையிலே அடுத்த ரவுண்டின் புண்ணியத்தை கமல் கட்டி கொண்டார்.

உன்னை போல் ஒருவன் படத்தை பதிவர்கள் அடித்து, துவைத்து, கிழித்து, தோரணமாக்கி தொங்க விட்டார்கள். சாதரணமான விமர்சனங்களிருந்து நுண்ணரசியல் விமர்சனங்கள் வரை ஏராளமான பதிவுகள் சூடு பரத்தின. இந்த அத்தனை பதிவுகளின் சுட்டிகளையும் பதிவர் உண்மை தமிழன் தனது பதிவில் ஒரு இடுகையாக இட்டு, 'உன்னை போல் ஒருவன் பதிவுகளின்  விக்கிபிடியா' வாக மாறி வாசகர்களுக்கு உதவினார். நான் கூட படம் பார்த்த பின், அந்த பதிவுகளை இவரின் இடுகை மூலமே படித்தேன். [சற்றேயொப்ப 100 பதிவுகளையும் அதன் பின்னூட்ட விவாதங்களையும் படித்து முடிக்க எனக்கு மூன்று நாட்கள் ஆனது :(   ]

 சில பதிவர்கள், இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று கமலே மண்டையை பிய்த்துக்கொள்ளூம் வண்ணம், கமலின் நுண்ணரசியலை கண்டுபிடித்து கண்டித்தனர்.

கமலே அறியாத கமலை துப்பறிந்து கமலுக்கே அறிமுகப்படுத்தினர்.

அடுத்த படம் எடுப்பதற்கு முன் கமல், ஒரு பதிவர் சந்திப்பு நடத்துதல் அவருக்கு நல்லது.  ;-)


சரி, நாம இப்போ பதிவுலகின் அடுத்த பரபரப்பிற்காக காத்திருப்போம்!

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

பெங்களூரிலும் சென்னையிலும் புதியதாய் திறக்கப்பட்ட காக்காய் கக்கூசுகள்




ஒரு வழியாக பண்ட மாற்று முறையிலும், பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறையிலும் பெங்களூருவில் அய்யன் திருவள்ளூவர் சிலையையும்  சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்து விட்டு மேடைகளில் கலைஞரும் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சொறிந்து விட்டு கொண்டுள்ளனர்.

ஏதோ இதன் மூலம் காவேரி பிரச்சினை தீர்ந்தது போலவும், ஒக்கனேக்கல் பிரச்சினைக்கு ஒப்பந்தம் போட்டது போலவும்  இரு மாநில மக்களின் மனங்களை இணைத்து விட்டதாய் பரஸ்பர பாராட்டுக்கள்.

சரி,  நெடுங்கால பிரச்சினையான தண்ணீர் பிரச்சினை இப்படி நினைத்தவுடன் தீர்த்து விட முடியுமா? அதற்கு சின்ன, சின்னதாய் இது போன்ற  நிகழ்ச்சிகள் முன்னோட்டமாக இருக்காதா? இதனால் இரு மாநில மக்களின் மனங்களில் விஸ்வருபமெடுத்து இருக்கும் பகைமை கொஞ்சங்கொஞ்சமாக குறையாதா? என்று கேள்வி எழுவது உண்மைதான்.



நடந்தது என்ன

ஒரு தரப்பு பெருந்தன்மையோ அல்லது பரஸ்பர விட்டு கொடுத்தலோ இல்லை.
ஒரு வியாபாரம். நான் இதை தந்தால் எனக்கு நீ அதை தரவேண்டும் என்ற பச்சை வியாபாரம்.
வழக்கம் போல இந்த வியாபாரத்திலும் வெற்றியடைந்தது கர்நாடகம் தான்.



எப்படி

பெங்களூருவில் உள்ள தமிழ்சங்கம் வடிவமைத்து திறப்பிற்கு 18 ஆண்டு காலமாய் காத்துக் கொண்டிருந்த அய்யன் திருவள்ளூவர் சிலையை அங்கு திறக்க தமிழக அரசாங்கமே கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை வடிவமைத்து திறக்க வேண்டும்.

எவ்வளவு அழகான அரசியல் இது.

இது புரிந்ததா இல்லையா என தெரிய வில்லை நம் அரசியல் சாணக்கியர் கலைஞருக்கு. இதில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் பற்றி கூறுகிறார்,  "கங்கையிலே குளித்தால் சொர்க்கம் செல்வோமென்றால், அதில் உள்ள தவளைகளும், மீன்களும் பாம்புகளும் சொர்க்கம் தானே செல்லும்" எனப் பொருள் வரும்படி பாட்டு எழுதியிருக்கிறாராம்.

ஆஹா என்ன ஒரு இலக்கிய ரசனை.

இது நம் வீடுகளில் உள்ள வாண்டுகள் கேட்கும் கேள்விதானே. இதை சொன்னவருக்கு சிலை என்றால் நம் ஊரில் சிலை வைக்க இடமே இருக்காதே.



அப்படியானால் கன்னட கவிஞர் சர்வக்ஞர், சிலை வைக்கும் அளவுக்கு பெரிய கவிஞர் இல்லையா?

அப்படி கருத இடமில்லை காரணம் ஒரு இனமே (கன்னடம்) அவரை தூக்கி வைத்து ஆடும்போது நிச்சயம்,அவரும் ஒரு பெரிய கவிஞராகத்தான் இருக்கணும். ஆனால் நமக்கு அவர் அறிமுகம் ஆகவில்லை.

அவரின் கருத்துகளும் கவிதைகளும் அறிமுகம் ஆவதற்கு முன்னமே சிலையை அறிமுகம் செய்து விட்டார்கள்.




சரி. இரு மாநில மக்களின் நல்லுறவுக்கு என்ன செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கர்னாடக அரசு, '18 ஆண்டு காலமாய் திறப்புக்காக காத்துக் கொண்டிருந்த' அய்யன் திருவள்ளூவர் சிலையை,  எந்த வித நிபந்தனையும் இல்லாமல் திறந்து வைத்திருக்க வேண்டும். அந்த மேடையிலே இரு மானில முதல்வர்களும் பங்கு பெற்றூ கலைஞர் எடியூரப்பாவை பாராட்டியிருந்தால் நிஜமான பாராட்டாய் இருந்திருக்கும்.

பின் சில மாதங்களிலோ அல்லது ஒன்றிரண்டு வருடங்களிலோ கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை தமிழக அரசு, கர்னாடக அரசின் எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் திறந்திருக்க வேண்டும். இதற்கிடையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவரின் கருத்துகளை பரப்பி யிருக்க வேண்டும்.

இப்படி செய்திருந்தால் இதுதான் இரு மாநில மக்களின் பரஸ்பர உறவுக்கு அர்த்தமாக இருந்திருக்கும்.



சரி, இனி என்னதான் நடக்கும்

பெங்களூரிலும் சென்னையிலும் உள்ள காக்கைகளுக்கு உச்சா போக கூடுதலாக இன்னொரு சிலை கிடைக்கும்



எப்போதும்போல.
 நீர் வரத்து கம்மியானால் தமிழகத்தை காய விடுவதும் , நீர் வரத்து அதிகமாகி வெள்ள அபாயம் ஏற்பட்டால் தமிழத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு நாசம் பண்ணுவதும் வழக்கம் போல நடக்கும்.


அதோடு இன்னொன்றும் வழக்கத்தை விட கூட நடக்கும்.

தமிழத்துடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வழக்கம் போல தமிழக பஸ் கார் தாக்கப்படும் , அங்கு வசிக்கும் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் அத்துடன் கூட புதிதாக அய்யன் திருவள்ளூவர் சிலை கை கால்கள் தனித்தனியாக ஆபரேஷன் செய்யப்படும் அதற்கு வாட்டாள் நாகராஜ் போன்ற பிரபல 'வசூல் ராஜா' மருத்துவர்கள் தலைமையேற்பர்.


அப்படியென்றால், நடந்த சிலை திறப்பு விழாக்களினால் நன்மையே இல்லையா

இருக்கிறது கலைஞர் தனது பொது வாழ்க்கை சாதனை பட்டியலில் 18 மாத காலம் சிறைப்பட்டிருந்த திருவள்ளுவரை விடுவித்த சாதனை இடம்பெறும்



கலைஞர் மனதில் அடுத்து என்ன யோசனை ஓடும்.

கலைஞரின் மனம், பட்டியலின் அடுத்த சாதனைக்கு இப்படி யோசிக்குமோ என்னமோ !

தமிழர் தலைவரிடம் சொல்லி பெங்களூருவில் ஒரு பெரியார் சிலையை நிறுவ வேண்டும் பிறகு எடியூரப்பாவிடம் பேசி அதை திறந்து வைத்து விடலாம். இன்னொரு சாதனை படைத்ததாய் இருக்கும்.

ம் ..ம் .. என்ன எழவு, அதுக்கு ஒரு வாரம் கழித்து ராஜ்குமார் சிலையையோ அல்லது வாட்டாள் நாகராஜ் சிலையையோ தமிழக அரசு சார்பில் இங்கு திறக்கப்பட வேண்டியிருக்கும்.

வெள்ளி, மே 01, 2009

சிங்களவர்கள் எங்களது நண்பர்கள் - பிரணாப் முகர்ஜி


சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது.

கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான ஏ.கே.அந்தோனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலோசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.

இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-


சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு. இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.

இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கும் (இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிட வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.

நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?”


இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

----நன்றி TAMIL SKY NEWS


கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்தே விட்டது.



இப்போது என்ன சொல்ல போகிறார்கள் அல்லது என்ன செய்ய போகிறார்கள் ???


தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆள, தமிழர்களிடம் வாக்கு சேகரிக்க செல்லும் ’ஆறு மணி நேரம் சாகும் வரை’ உண்ணா விரத வீரரும்,



காங்கிரஸை, தமிழ் நாட்டில் புல் பூண்டு இல்லாமல் செய்வேன் என சூளுரைத்து விட்டு, தேர்தல் வந்தவுடன் தங்க பாலுவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் காங்கிரஸ் ஆள வாக்கு கேட்டு புறப்பட்ட ’நாலு நாள் சாகும் வரை’ உண்ணா விரத வீரரும்.


காத்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் !


பின்குறிப்பு:-

சுயமாக தொழில் தொடங்க சிந்தித்து கொண்டிருப்போர்க்கு , தற்சமயம் உடனடி அதிக லாபம் ஈட்டித் தரக்கூடியது செருப்பு கடை.

செருப்பு கடை திறப்பீர் !
சிறப்பு சேவை புரிவீர் !!

திங்கள், ஏப்ரல் 20, 2009

கி.பி.2059லேயும் கலைஞர் ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுப்பார்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் வளவனூரில் நடைபெற்றது.

இதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,


ஆரம்ப காலத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி.



85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.

---------------------------------------


18/04/09 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:



இலங்கை தமிழர்களுக்கு துரோகி நானா? டாக்டர் ராமதாசா? என்பதை உலகத் தமிழர்கள் நன்கறிவார்கள். 1956ம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவன் நான். ராஜபக்சே தொடுத்துள்ள போரை ஆதரித்து, போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றெல்லாம் கூறியவர் ஜெயலலிதா. அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதிலிருந்தே உலகத் தமிழர்கள்-இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வார்கள்.
-----------------------------



மேலே ஒரு அமைச்சர் சொன்னது அடுத்து முதல்வரே சொன்னது. ஆக இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 1956 லிருந்து இலங்கை பிரச்சினைக்கு கலைஞர் குரல் கொடுத்திருக்காரு. இதில் யாருக்கும் ஐயமே வேண்டாம்.

இன்னுமொரு 50 வருடம் அவர் உயிரோடு இருந்தாலும், அப்பவும் அதாவது 2059 ம் வருடத்திலேயும் அவர் குரல் கொடுப்பார். அதிலேயும் சந்தேகம் வேண்டாம்.

அப்ப பிரச்சினை என்னடானு கேட்கிறீங்களா?

கேள்வி ரொம்ப சிம்பிள்?

எப்ப அவர் செயல்படுவார்?

வெறும் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டு எப்போது அவர் ஈழப்பிரச்சினைக்கு செயல் படுவார்.


ஒரு ஏரியா இன்ஸ்பெக்டரிடம் ஒருவன் கேட்டானாம், ”இங்கே ஒரே திருடர்கள் பிரச்சினை அதி்கமா இருக்கே அதைப் பத்தி உங்களுக்கு அக்கறை இல்லையா”னு.

அதற்கு அவர் சொன்னாராம், ”நான் சிறுவனயிருக்கும் போதே இந்த திருட்டுத்தனங்கள் பிடிக்காமல் என் நண்பர்கள் மத்தியிலே பேசியிருக்கிறேன். இப்போதும் மாலை நேரங்களில் நண்பர்கள் மத்தியில் இதைப்பத்தி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு அக்கறை இல்லையானு எப்படி நீ கேக்கலாம்னு” சொன்னராம்.

இதுக்கும் அதுக்கும் என்ன வேற்றுமை இருக்கிறது.

வாழ்க பேச்சுரிமை !
அதாவது பேச மட்டுமே உள்ள உரிமை !

சனி, ஏப்ரல் 18, 2009

இந்த தேர்தலில் யாரை ஆதரிக்கலாம் ! சிந்திப்பீர் !!


இப்போது வந்திருக்கும் இந்த பாராளுமன்ற தேர்தல், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு விசித்திரமான் தேர்தல் என் சொல்லலாம்.

பொதுவாக தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே, பெரும்பாலான மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு எடுத்து தேர்தலுக்காக காத்திருப்பர். ஆனால் இம்முறை வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் எந்த முடிவும் எடுக்க இயலாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏன், என்ன காரணம்?

மிக நீண்ட காலமாகவே, மக்களுக்கு ’நல்ல கட்சிகளில் இது மிக நல்லது’ என்று தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாமலே போனது. அதனால் ’(தரங்) கெட்ட கட்சிகளில் இது கொஞ்சம் தேவலைப் போல் இருக்கிறது’ என்று தான் தேர்ந்தெடுத்து வந்தனர். அதற்கு அளவுகோலாய் சட்டம்- ஒழுங்கு, ஊழல், வாரிசு அரசியல் என்பன போன்ற உள்நாட்டு பிரச்சினைகளே இருந்தது.

ஆனால் இம்முறை அதிலும் சிக்கல்.

இந்த பிரச்சினைகளோடு இன்னொரு பிரச்சினையாய், எல்லாவற்றையும் விட தலையாய பிரச்சினையாய், நம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர் பிரச்சினையாய், நம் இனப்பிரச்சினையாய் ஈழத்தமிழர் பிரச்சினை முதலில் வந்து நிற்கிறது.

சில நாட்கள் முன்பு வரை, ஈழத்தமிழர் பிரச்சினையில் மீசை துடித்து, நரம்புகள் புடைத்த தலைவர்கள் எல்லாம் தேர்தல் என்றவுடன் பணம் பதவி செல்வாக்கு போன்ற சுயநலன்களை மனதில் கொண்டு பம்மி, பதுங்கி, பின்வாங்கி, வாலை மடித்து தன் பின்னங்கால்களின் இடையே வைத்துக்கொண்டு, சீட்டு எலும்புகள் போடும் எஜமானர் வீட்டைச் சுற்ற ஆரம்பித்த விட்டனர். அதற்கு முதலாளிக்கு விசுவாசமாக ஒரு சால்ஜாப்பு அறிக்கை வேறு .

அதே போல் சில பதிவர்களும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சிங்கம் போல் கர்ஜித்து, இனப்படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களையும் அதற்கு கை கட்டி வாய் பொத்தி ’ஆமாஞ்சாமி’ போட்டவர்களையும், வார்த்தைகளால் வறுத்து எடுத்தவர்கள், இப்போது தங்களின் கட்சிப்பாசம் தலை தூக்க , அவர்களின் கடந்த கால துரோக செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டிகொண்டும் மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் எழுதி அதற்காக கஷ்டப்பட்டு காரணங்களை தேடித்தேடி கண்டுபிடித்து கூறீ தன்னைத்தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.


இந்த தேர்தலில் நம் முன் தொக்கி நிற்கும் தலையாய கேள்வி, யார் வர வேண்டும்? என்பதல்ல யார் வரக்கூடாது? என்பதே.


கூப்பிடு தூரத்தில் நம் இனம், பெண்கள் குழந்தைகள், முதியோர்கள் என்று பேதம் இல்லாது கொத்து கொத்தாக வேட்டையாடப் பட்டபோது,

அதை தடுத்து நிறுத்த வேண்டி தமிழ் உணர்வாளர்கள், உணர்வை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பற்பல அறப்போராட்டங்களை நடத்தியபோது,

அறப்போராட்டம் ஆட்சியின் மமதையை கலைக்காது . தமிழ் இனமே பொங்கி எழுந்தால்தான் விடிவு ஏற்படுமென்று வேள்வித்தீ மூட்டி, அதில் நெய்யாய் முத்துக்குமரன், தன்னையே பலியிட்டுக் கொண்டபோது,

அதன் பொருட்டு தமிழ்நாடே கொந்தளித்த போது, இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அரசினரை பார்த்து மன்றாடியபோது


இரக்க குணமற்ற, ஆணவம் மிகுந்த காங்கிரஸ் அரசு இனப்படுகொலையை தடுத்து நிறுத்த எந்த முயற்சியையும் செய்ய வில்லை என்பது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் தந்து உதவுவதையும் நிறுத்தவில்லை.

தமிழ் நாட்டு திமுக அரசோ மத்திய காங்கிரஸ் அரசை உரிய முறையில் அழுத்தம் கொடுத்து வற்புறுத்தவில்லை அவ்வப்போது கோபம் கொண்ட மக்களை சாந்தப் படுத்த கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புக்கு சப்பாணி ஆட்டம் ஆடினார்.

அப்போது பொங்கினோமே,

இந்த இரண்டு அரசும் ஒழிய வேண்டும் என்று வயிறெரிந்து சாபமிட்டோமே,

சோனியா விரோதி, கருணாநிதி துரோகி என இனங்கண்டு முழங்கினோமே,

அதே போன்ற கையறு நிலை மீண்டும் வர வேண்டுமா?

வேண்டாம், இந்த காங்கிரஸ் கூட்டணி.
இவர்கள் ஆட்சிக்கு இனி எப்போதும் வரக்கூடாது.
தமிழன் கிள்ளுக்கீரை அல்ல என்று எல்லோருக்கும் உணர்த்துவோம்.

சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆபத்தாம் அதனால் மீண்டும் காங்கிரஸ் திமுக வரணும் என்கிறார்கள், சிலர்.

சேதுத் திட்டம் நின்றாலும் பரவாயில்லை அதற்கடுத்த முறை ஆளும் கட்சி மாறினால் மீண்டும் திரும்ப தொடங்கலாம்.

ஆனால் தமிழ் இனபிரச்சினைக்கு காத்திருக்க முடியாது ஏனெனில் அதற்குள் அங்கு நம் இனம் அழிந்து போய் புல்லு முளைத்திருக்கும்.

சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!

திங்கள், ஏப்ரல் 13, 2009

கலைஞரின் கேள்வி பதிலும், அப்பாவி தொண்டனின் பதில் கேள்வியும்






கேள்வி: போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும்- தவிர்க்கப்படாத நிலையில் முடிவொன்று ஏற்பட்டால், அப்போது பிரபாகரனை மரியாதையோடு நடத்த வேண்டுமென்று நீங்கள் சொன்னதை திசை மாற்றி- பிரபாகரனை நீங்கள் ஏதோ இழிவுபடுத்தி விட்டதைப் போல பழ.நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்களே?.


பதில்: கடந்த 16.4.2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் இவர்களுடைய இன்றைய அன்பு தலைவி ஜெயலலிதா, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது" என்று தீர்மானம் முன்மொழிந்து கொண்டு வந்தபோது- இந்த வீராதிவீரர்கள், சூராதி சூரர்கள் எல்லாம் எந்த நாட்டிலே இருந்தார்கள்?

நீங்க இருந்த நாட்டிலேதான், அதே போல நீங்க பொத்திகிட்டு இருந்த மாதிரிதான் அவங்களும் இருந்தாங்க.

இப்போது பிரபாகரனின் கெளரவம் போய்விட்டது என்று அலறித் துடிப்பவர்கள்- அப்போது வாய் நீளம் காட்டாததற்கு என்ன காரணம்?

காட்டியிருந்தா பிளாஸ்திரி ஒட்டப்படும்னு உங்களுக்கு இருந்த அதே பயம்தான் அவங்களுக்கும் போலிருக்கிறது.
இன்றைக்கு ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக- கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு- நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?.

அவங்களும் உங்களைப்போல அடிமைதானே! என்ன எஜமானியம்மா தான் வித்தியாசம்.


கேள்வி: இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: பாண்டியனுக்கு "அவரை'' பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை என்ற கோபம் போலும்!. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!

இல்லையே உதாரணம் உதைக்குதே!

அலெக்ஸாண்டர் ஒரு நாட்டின் மன்னர் நம்ம ராஜபக்ஷே போல.

போரஸ் மன்னனும் நம் ஈழத்தின் தேசிய தலைவர் பிரபாகரனைப்போலவே ஒரு மன்னன்.
அலக்ஸாண்டருக்கு உதவிய அம்பி யும் மன்னனாயிற்றே ?!?!?!


கணக்கு வேற மாதிரி போவுதே தலைவா!


கேள்வி:- இலங்கை தமிழர்களைக் காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: அவருடைய முக்கியமான குறிக்கோளே நாம் ஆட்சியிலே இருக்கக் கூடாது என்பது தான். கடைசி வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே அமைச்சராகப் பொறுப்பேற்று, பதவிச் சுகம் அனுபவித்து விட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் அல்லவா?
அதிலேயும் நீங்க தானே தல முன்னோடி!

கடந்த பாஜக அமைச்சரவையில் இருந்து (இதிலே படுத்த படுக்கையாய் இருந்த மாறன் வேற ‘இலாகா இல்லாத மந்திரி’)
எல்லா சுகத்தையும் அனுபவிச்சிட்டு ஆட்சிக் காலம் முடியும் போது எஸ்கேப் ஆயி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியிலே சேரல.

அது போலத்தான் இதுவும்!

பதவி விலகுவதிலே எவ்வளவு அக்கறையாக உள்ள டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மத்தியிலே மந்திரியாக இருந்த காலத்தில், "இலங்கை தமிழர் பிரச்சினையிலே மத்திய அரசு நடந்துகொள்வது சரியல்ல'' என்று இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்!

இப்போ சொன்னீங்களே, இது மட்டும் நூத்திலே ஒரு வார்த்தை! உண்மையான வார்த்தை!!

ஆனா அதையும் கூட சப்தம் போட்டு சொல்லாதிங்க.

இந்த அறிக்கையிலே வைகோவை நீங்க கேட்டதையே சில வார்த்தை மாத்திப் போட்டு,ராமதாஸ் உங்களை திருப்பி இப்படி கேக்க போறாரு

"இன்றைக்கு ஒரு சில மந்திரி பதவிகளுக்காக கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது'


புதன், பிப்ரவரி 04, 2009

ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் என்றைக்கு ஆட்சியை இழந்தார் இன்றைக்கு இழப்பதற்கு!!!




இதுவரை கலைஞர் ஈழத் தமிழர் பிரச்சினை பெரிதாகும் ஒவ்வொரு முறையும் உப்புக்கு சப்பாணி கணக்காக மனித சங்கிலி, அனைத்துக் கட்சி கூட்டம், இறுதி தீர்மானம்... இப்படி ஏதாவது பேருக்கு அறிவிப்பார்.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறதுஅய்யகோகவிதை.

இப்படி ஏனோ தானோ போராட்ட அறிவிப்பின் கூடவே ஒர அறிக்கையும் வரும். அதில் கல் தோன்றி மண் தோன்றா காலந்தொட்டே, தான் ஈழத் தமிழர்களுக்காக செய்த சாதனைகள்என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்.

அதில் தவறாமல் தான் ஆட்சியை இரண்டு முறை ஈழத்தமிழர்களுக்காக இழந்ததாகவும் கூறி இருப்பார்.

இந்த சத்தற்ற போராட்ட அறிவிப்பு நமக்கு எரிச்சல் மூட்டினாலும் கூட,
அவரின் அறிக்கையில் இருக்கும், ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சிக் கலைப்பு ஒரு கழிவிரக்கம் தரும்.

அதைப்படிக்கின்ற நாமும், ’பாவம் முன்பெல்லாம் பதவியை தூக்கிப்போட்டுட்டு போயிருக்கிறார் இப்போதுதான் முடியவில்லை போலிருக்கிறதுஎன்று எண்ணி சமாதானம் அடைவோம்.

ஆனால் இப்போது ஒரு புது பூதம் கிளம்பியிருக்கிறது. இதுவரை ஒரு முறை கூட ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் பதவியை இழக்கவில்லையாம். இதை கீற்று.காம் இணையத்தில் திரு சே. பாக்கியராசன் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

இப்படி அந்தந்த காலங்களில் நடந்தவற்றை அந்தந்த காலங்களில் இருந்து கவனித்தவர்கள் பகிங்கிரப்படுத்தினால்தான், நம் அரசியல்வாதிகளின் புளுகுகளை அறிந்துக் கொள்ளலாமோ என்னமோ.



இதோ அவரின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:



1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975
ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-
இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவர மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983
ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்றுமேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.



நன்றி :

சே.பாக்கியராசன், மிச்சிகன்

மற்றும்

கீற்று.காம்


பி.கு :

இதற்காக நான் கலைஞர் ஒழிக! என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் கலைஞரை மட்டுமல்ல வேறெந்த தற்போதைய அரசியல்வாதியையும்'வாழ்க !’ போட்டு பின் சென்றதில்லை. அதனால் எனக்கு அந்த உரிமை இல்லை ;-)