இன்று ஒரு குறள் !

சனி, ஏப்ரல் 26, 2008

இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு குடியானவனுக்கு இரு மனைவியர் இருந்தனராம். அந்த இருவருக்கும் எப்போதுமே ஆகாதாம்.

தான் எதையும் கணவருக்கு சரியாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தைவிட, மற்றவள் மட்டமாக செய்யவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்।

தன்னைவிட அடுத்தவளைப்பற்றியே எப்போதும் சிந்தனை செய்துக்கொண்டிருப்பர்।

"அடியேய் ஏன்டி, இப்படி சாதத்தை கொழைச்சி வடிச்சிருக்கே? அவருக்கு ஒடம்புக்கு ஆகாதடி, விடியாமூஞ்சி" அப்படினு ஒருத்தி கேட்டா,

அடுத்தவள், "என் சாதம் நல்லா தாண்டியிருக்கு கூறுகெட்டவளே, நீதான் 2 வாரம் முன்னாடி சாதம் கொழைச்சி வடிச்சியிருந்தவ" என்று பதிலலிப்பாள்

இப்படி புருஷனுக்கு நல்ல மாதிரி செய்யனும் என்பதைவிட மற்றவள் செய்தது மட்டமானதாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாக வாழ்ந்து வந்தார்களாம்।

அது சரி எதுக்கு இந்த கதையினு கேக்கிறிங்களா?

காலையிலே News படிக்கும்போது ஏதோ ஞாபகம் வந்திச்சி, காரணம் தெரியல।




செவ்வாய், ஏப்ரல் 22, 2008

மாற்றப்பட வேண்டியது வார்த்தையை அல்ல, வாழ்க்கையை.

விழுப்புரத்தில் 'தாய் விழுதுகள்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற அரவாணிகளின் கலைப்பேரணி மற்றும் சங்கமம் கலை நிகழ்ச்சியில் பேசிய கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அரவாணிகளைப்பார்த்து, 'உங்களை நான் அரவாணிகள் என்று சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்

அப்படியானால் அரவாணிகளை அரவாணிகள் என்று கூறுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலா? அது என்ன அவ்வளவு மட்டமான சொல்லா? அப்படியானால் அந்த சொல்லை மட்டும் மாற்றி விட்டால் மட்டும் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடுமா?

பிரச்சினை பெயரில் இல்லைஅவர்கள் வாழ்க்கை நிலையில் இருக்கிறதுஅந்த நிலைமையை சரிசெய்ய, அவர்களை சமூகத்தின் மற்ற இரு பாலர்களுக்கும் (ஆண்,பெண்) சமமான தரத்துடன் சமுதாயத்தில் வாழ வழி செய்ய சிந்திக்க வேண்டுமேயன்றி, அவர்களைச்சுட்டும் வார்த்தைகளை மாற்றி பயனில்லை

இல்லாவிட்டால் பல்லாண்டுகாலமாய் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைவேலை செய்ய வைக்கப்பட்டு வந்ததொரு வர்க்கத்தின் கொச்சையான பெயர், கடவுளின் குழந்தைகள் என்ற அர்த்தத்தில் 'ஹரிஜன்' என்று மகாத்மாவினால் மாற்றப்பட்டும், பின் 'தாழ்த்தப்பட்டோர்', 'அட்டவணை இனத்தவர்' என்று பல்வேறு கட்டங்களில் மாறியும் வந்து இன்று 'தலித்' என்று பெயர் தாங்கி நிற்கிறது என்றாலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் என்னமோ அப்படியேதான் இருக்கிறதுஇன்றும் இரட்டைக்குவளை டீ கடை கிராமங்கள் இருக்கின்றன்

ஆதலால் பிரச்சினை பெயரில் இல்லை, அவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு தரும் நம் செயலில் இருக்கிறது.

சனி, ஏப்ரல் 19, 2008

நான் அவன் இல்லை - கலைஞர்.



'முப்புரி நூல்' இல்லாததால் எனக்கு எதிராக பிரசாரம்: கருணாநிதி

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில பத்திரிக்கைகள், எழுதி வருகின்றன. நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதைப் பொறுக்க முடியாமல்தான் இப்படி என் மீது அவதூறை வாரி வீசுகின்றனர்.
இந்த முதல்வரிடம் முப்புரி நூல் இல்லை, நான் பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய சமூகத்தைச் சேர்ந்தவனும் இல்லை. பிரம்மனின் காலிலிருந்து உதித்த சமூகத்தைச் சேர்ந்தவனாகி விட்டேன். அதனால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.
நான் பிற்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தினால்தான், சில குறிப்பிட்ட பத்திரிக்கைகள், அரசின் சாதனைகளை மூடி மறைத்து விட்டு, வேண்டும் என்றே எனக்கு எதிராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.
நிக்சனும், ஹெக்டேயும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டுக் காரணமாகத் தான் பதவியை ராஜினாமா செய்தார்கள். அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் தமிழகத்தில் இரு அதிகாரிகளுக் கிடையே தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து என்னை பதவி விலக சொல்வது விஷமத்தனமானது.
என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த போதிலும், இப்படி கூறுவது சரியல்ல.
நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும், விசாரணைக்கு நீதிபதியை நியமித்த பின்னரும் ஒரு வார இதழ் என்னை விமர்சித்து எழுதியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
:-) :-) :-) :-) :-)

திங்கள், ஏப்ரல் 14, 2008

தமிழ் புத்தாண்டு தி(கொ)ண்டாட்டம்

சில நாட்களாகவே எனக்குள் ஒரே குழப்பம்இந்த வருடம் தை முதல் நாள், வழக்கம் போல தமிழ் புத்தாண்டாக கொண்டாடலாமா? இல்லை வேண்டாமா? என்று.


திடுதிப்பென்று தமிழக அரசு இப்படி ஒரு உத்தரவு போடுமென்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை .

மாநிலத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றுவதும், மாநிலம் முன்னேற திட்டங்கள் தீட்டுவதும் தான் ஒரு மாநில அரசின் பணி என்று அதுவரை நினைத்திருந்த எனக்கு இந்த உத்தரவைப் பார்த்த பின்புதான் பல்லாண்டு காலமாக ஒரு சமூகத்தால் கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கத்தை ரத்து செய்யும் அல்லது மாற்றியமைக்கும் வேலை கூட அரசுக்கு உள்ளது என்பது புரிந்தது.


"ஏய் கெழவி தள்ளி போ! நீ சாவ என் வண்டிதான் கெடச்சிதா, சாவு கிராக்கி"

சத்தம் கேட்டு சிந்தனை கலைந்தேன்ரோட்டைக் கடந்த எதிர் வீட்டு ராமாயி பாட்டியை திட்டியபடியே ஒரு ஆட்டோகாரர் என்னை கடந்து சென்றார்

பாவம்! ராமாயி பாட்டிக்கு 60 வயதுக்கு மேலிருக்கும். .ஒண்டிக்கட்டை. கஷ்டப்பட்டு படிக்க வைத்து, வெளி நாடு அனுப்பி வைக்கப்பட்ட ஒரே மகனும் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான்ஆரம்பத்தில், பணம் அனுப்பிக் கொண்டிருந்தவன், ஒரு தொழிலதிபரின் மருமகனான பின்பு அதையும் நிறுத்திக்கொண்டான் ஏதோ, அரைகுறையா தெரிகின்ற பார்வையை வைத்து அப்பள வியாபாரம் செஞ்சி பொழைக்குது பாட்டி. பாவம்!


"பாட்டி, எப்படி இருக்கே? மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா?" என்று போகிற போக்கில் பாட்டியிடம் வாஞ்சையோடு வி்சாரித்தார் எங்கள் ஏரியா போஸ்ட்மேன்.

கொஞ்ச நேரத்தில் பாட்டியிடம் வந்த எங்கள் தெருவில் மெஸ் வைத்திருக்கும் செட்டிநாட்டுக்காரரின் கடைசிபெண், "ஆச்சி, அடுத்த வாரம் கடைக்கு 500 கட்டு கூடுதலா அப்பளம் வேணும் அப்பா சொல்லிட்டு வரச்சொன்னார்" என்று சொல்லிவிட்டு சென்றாள்

ஸார் பேப்பர்! கூவியபடியே என் கையில் தினசரியைத் திணித்த பாண்டிபழனி (அவன் பேரே அப்படிதான்), "ஆயா, எப்படிக்கீறே? உன் சம்மந்தி போட்டோ பேப்பரிலே வந்திரிக்கு பாத்தியா? "என்று கேட்டுக்கொண்டே பாட்டியை நோக்கி நகர்ந்தான்.

எனக்கு வியப்பாய் இருந்தது
எதிர்வீட்டு பாட்டி ஒன்று, அதை அவனவன் அழைக்கும் பெயர் வெவ்வேறு!

கெழவி, பாட்டி, ஆயா, ஆச்சி என் எப்படி அழைக்கப்பட்டாலும் அந்த பாட்டி ஒன்றுதான்। சிரித்துக்கொண்டே தினசரியின் முதல் பக்கத்தினை நோட்டமிட்டென்.

பதவிக்கு ஆசைப்படாத் ராகுல்- சோனியா வியப்பு!

அம்மா வா வந்து இருண்ட தமிழகத்திற்கு விளக்கேத்து! என்று தொண்டர்கள் விளக்கேற்றி வேண்டவேண்டும் -ஜெயலலிதா

மாநில கழக ஆட்சியிலும், மத்திய அய்மு ஆட்சியிலும் தமிழனின் முன்னேற்றம் அளப்பரியது- ஜனாதிபதியுடன் சுற்றுபயணம் மேற்கொள்ளும் கனிமொழியை வாழ்த்தி கலைஞர் கடிதம்

நான்தான் பிரதமர், நானேதான் பிரதமர்! - அத்வானி புத்தகம் வெளியீடு

எப்போதும்போல் ஒரே மாதிரியான செய்திகள்.
அவசரமாய் தேதியைப்பார்த்தேன்சரியாகத்தான் இருந்தது.

சிரித்தபடியே அடுத்த பக்கம் புரட்டினேன்.

புத்தாண்டு வாழ்த்து கூறி ஜெயலலிதா, இல.கணேசன். அது சரி!

அடுத்து

அட நம்ப வைகோ,

புத்தாண்டுக்கு அவரும் வாழ்த்தா?

அட ஆமாம்!

ஆனால் புத்தாண்டு வாழ்த்து அல்ல,

சித்திரை திருநாள் வாழ்த்து!

காரணம் புரியாமல் எதிர்வீட்டு பாட்டி மனக்கண்ணில் வந்தார். கூடவே கெழவி, பாட்டி ஆயா, ஆச்சி பொன்ற வர்த்தைகளும் காதில் ஒலித்தன

ஒரு முடிவுக்கு வந்தவனாய் உற்சாகமாய் சைக்கிள் எடுத்து ஏறி மிதிக்க ஆரம்பித்தேன் கடைத்தெருவை நோக்கி, புத்தாண்டு இல்லையில்லை சித்திரை திருநாள் கொண்டாட பொருட்கள் வாங்க வேண்டி

வியாழன், ஏப்ரல் 03, 2008

திராவிடன் என்று சொல்லாதே ! தமிழன் என்று சொல் !!

திராவிட முன்னேற்ற கழகம்; அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்; தேசிய முன்னேற்ற திராவிட கழகம்; ......................

அப்பப்பா! எத்தனை திராவிடக்கட்சிகள்தான் நம் தமிழ் நாட்டில். அதுவும் தமிழ் நாட்டின் மாநில கட்சிகள். சில கட்சிகள் பேருக்கு இன்னும் சில மாநிலங்களில் ருப்பதனால் அவைகளை விட்டு விடுவோம். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் இருக்கும் கட்சிகளும் எதற்கு திராவிட பெயர் வைக்க வேண்டும்? பெரியார் மீதுள்ள பற்றினால், அவர் கண்ட கழகத்தின் பெயரைச்சார்ந்து வைக்கிறர்களா? அல்லது ஃபேஷனுக்கு வைக்கிறார்களா? எப்படியாயினும் இனியாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஃபேஷனுக்கு பெயர் வைப்பவர்களை பற்றி ஒன்றும் சொல்லத்தேவையில்லை.
ஏனெனில் அவர்கள் கொள்கைப்பற்றி கவலைப்படப்போவதிலை. மற்ற கட்சிகள்
தமிழன் முன்னேற்ற கழகமாக மாறினால் இவர்களும் மாறிவிடுவார்கள் தான்.

ஆனால் பெரியார் மீதுள்ள பற்றினால் அப்படி பெயர் வைப்பவர்கள் சில விஷயங்களை கொஞ்சம் சிந்தித்தால் நல்லது.

பெரியார் அவர்கள் தனி திராவிட நாடு கோரிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்ததால் தான் கண்ட இயக்கதிற்கும் அந்த பெயர் வைத்தார். தவிர ஆன்மீகக்கதைப்பேசி, நம் இனத்தை அடிமையாக்கி ஆண்டுக்கொண்டிருந்த ஆரிய இனத்திலிருந்து நம் இனத்தை பிரித்து காட்டவும் அப்படி பெயர் வைத்து இருக்கலாம்.

ஆனால் இன்றைய நிஜங்களை எண்ணிப்பாருங்கள். நம் திராவிட சகோதரர்கள் நம்மை கொல்லாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்டால் அரிவாளை எடுத்து நம் கழுத்தை வெட்டி நம் குருதியையே தருகிறான் ஒருவன்..

சரி ஒருத்தன் தான் சுய நலவாதி மற்றவன் அப்படி இல்லையே என்று நம்மளை நாமே ஏமாற்றிகொள்ள முடியாது.

முல்லைப்பெரியாறாயிருக்கட்டும், பாலாறாயிருக்கட்டும், காவேரியாய் இருக்கட்டும் எல்ல இடத்திலேயும் நமக்கு ஏமாற்றம்தான். ஒருத்தன் வெட்றான், ஒருத்தன் உதைக்கிறான், ஒருத்தன் குத்துறான். ஆனால் நாம மட்டும் அனைவரும் நம் திராவிட சகோதரர்கள் என்று சகித்துக்கொண்டும், விட்டு கொடுத்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

இவனுங்க மதிக்கிற மூத்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்கு மட்டும் தமிழன் தேவை. அப்புறம் தமிழன் எதிரிதான்.

இதுக்காகவே ஒரு தாதா இருக்கிறான் வாட்டாள் நாகராஜ் என்று. எப்படா ஏதாவது பிரச்சினை வரும் எதிர் வரும் தமிழனை எல்லாம் தாக்கலாம்னு காத்துகிட்டு ஒரு ரவுடிக்கும்பலோட சுத்திக்கிட்டு இருப்பான், நாதாறி பய புள்ள.

நாம வந்தாரை வாழ வச்சிட்டு நமக்கு வாழ்வு தருகிற தண்ணி இல்லாம இவனுங்களைப்பார்த்து ஏங்கி நிக்கனுமா?

பக்கத்து வீட்டுக்காரனிலிருந்து சினிமா நடிகன், அரசியல்வாதிவரை இவன் தெலுங்கனா, இவன் மலையாளியா, இவன் கன்னடத்தானா என்று சில ஆண்டுகள் முன்பு வரை வேறுபடுத்தி பார்க்கத்தெரிந்திராத நமக்கும் அந்த வேறுபாடு பார்க்கும் பழக்கத்தை கற்றுத்தந்ததே இவனுங்க சுயநலமும், இனத்துவேஷமும், தமிழர்க்கெதிரான வன்முறையும் தானே.

நல்லவேளை, பெரியார் ஆசைப்பட்டபடி தனி திராவிட நாடு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் கொஞ்ச நாளிலே இந்த கன்னடத்தானுங்க தனி நாடா பிரிஞ்சிப்போய், பாகிஸ்தான் இந்தியாவுக்கு கொடுக்கிற குடைச்சலை இவனுங்க நமக்கு கொடுத்திருப்பானுங்க.

இந்த விஷயத்திற்கெல்லாம் எப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்.

அதை இப்போதே தொடங்கினால் என்ன? இனி நாம் திராவிடன் என்று சொல்லிக்கொள்ளாமல் தமிழனென்று அடையாளம் கூறிக்கொள்வோம். பிறகு பக்கத்து மாநிலக்காரன் நம்மிடம் வாலாட்டினால் சகோதரக்குற்றவுண்ர்வு கொள்ளாமல் அவன் வாலை ஒட்ட நறுக்கலாம்.

பாரதி இப்போது இங்கு இருந்திருந்தால் இப்படியும் பாடியிருப்பானோ என்னமோ,

என்று தணியும் எங்கள் தமிழனின் தாகம்!
என்று மடியும் எங்கள் திராவிட மோகம்!!


ஜெயமோகன் செய்தது சரியில்லைதான்.2

ஜெயமோகன் தனது பதிவொன்றில் முதுபெரும் நடிகர்களான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியை கிண்டலடித்திருந்தார். அது ஆனந்த விகடனில் பிரசுரமாக, அதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக ஜெயமொகனும், ஆனந்த விகடனும் பகிங்கர மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை ஜெயமோகனுக்கும், ஆனந்த விகடனுக்கும் திரையுலகை சார்ந்த யாரும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இதில் ஆனந்த விகடன் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது பட வேலைகளில் மூழ்கியது. ஆனால் ஜெயமோகன் இன்று வரை மன்னிப்பு கேட்காதது மட்டுமின்றி, தான் ஈடுபட்டு வந்த இரு பட வேலைகளில் ஒன்றிலிருந்து விலகியும் விட்டார். இது அனைவரும் அறிந்த செய்திதான்.

இதற்கு பதிவர்கள் ஜெயமோகன் செய்தது சரியா? இல்லை தவறா? என்ற ரீதியில், அக்கு வேறு ஆணி வேறு என நன்கு அலசி ஆராய்ந்து விட்டாலும், இராமயணத்து அணில் போல, என்னுடைய கருத்தையும் பதிய எண்ணியே இப்பதிவு.

என்னைப்பொருத்தவரை ஜெயமோகன் செய்தது சரியில்லைதான்.
ஆனால் அதற்காக நடிகர் சங்கம் போட்ட தீர்மானம் சரி என்பதல்ல என் கருத்து.

சரி, அப்படியானால் எது சரியில்லை?

நடிகர்களை விமர்சிக்கக் கூடாதா? அவர்கள் என்ன புனித பிம்பங்களா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். பொது வாழ்க்கைக்கு வந்த எவரையும் நாம் விமர்சிக்க உரிமையுண்டு. அது நடிகரானாலும், அரசியல்வாதியானாலும் சரி. ஆனால் ஒருவரின் ஊனத்தை கேலிசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல மனிதாபிமான செயலும் அல்ல. எம்.ஜி.ஆர். நடிப்பை கேலி செய்யலாம், கரெக்டாக கதாநாயகியை வில்லன் தொடும் நேரத்தில் எங்கிருந்தோ வந்து மேலேயிருந்து குதித்து காப்பாற்றுவதை கேலி செய்யலாம். 10, 20 பேரை ஒரே ஆளாக நின்று அடித்து முடித்து விட்டு கொஞ்சங்கூட களைப்பாகாமல் நாயகியோடு டூயட் பாடுவதை செய்யலாம் (இது எல்லா நாயகர்களுக்கும் பொருந்தும்).

ஆனால் ஒரு விபத்தில் சிக்கி குரல் வளம் இழந்த ஒரு மனிதனை, அவன் பேச்சை, கிண்டல் கேலி செய்யலாமா? அது முறையான செயல்தானா? மனிதாபிமான செயல்தானா?

ஒரு பதிவர் கூட எழுதியிருந்தார், ' திரைப்படத்தில் எல்லோரையும் கிண்டல் கேலி செய்கிறார்கள். ஆனால் இவர்களை மட்டும் யாரும் செய்யக்கூடாதா?' என்று.
அவருக்கு ஒரு சின்ன பதில். ஒரு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு காரெக்டர் கிண்டல் செய்யப்பட்டால், உடனே அந்த காரெக்டர் செய்யும் தொழிலைச் சேர்ந்தவர்கள், பிரச்சினையை கையில் எடுத்து போராடத் தொடங்குவது இப்ப ரொம்ப சர்வ சாதாரணமா போச்சி.

உதாரண்ம் சிவகாசி படத்தில் வக்கீல் காரெக்டர்.

அந்த காரெக்டர், வக்கீலுக்கு படித்து முடித்துவிட்டு கேஸ் பிடிக்க திறமையில்லாமல் ப்ளாட்பாரத்தில் தங்கிக்கொண்டு டீ, சிகரெட் செலவுக்கு நாயகனை அண்டியிருக்கும்படியும், அதனால் நாயகன் அந்த காரெக்டரை கிண்டல் கேலி செய்து சீண்டும்படியும் படைக்கப்பட்டிருக்கும்.

அந்த படத்தில் வக்கீல்களை பொதுவாக கிண்டல் பண்ணாவிட்டாலும், அந்த காரெக்டர், வக்கீல் என்பதால், வக்கீல்களை அவமதிப்பதாக கூறினால், அதற்காக போராடினால், அது எந்த விதத்தில் நியாயம் என்றே புரியவில்லை.

அப்படி பார்த்தால் ஒரு படத்தில் எந்தவொரு காரெக்டரும் எந்தத்தொழிலும் செய்ய முடியாதே! அப்படியே தொழில் செய்வதாக காட்டினாலும் அனைவரையும் நல்லவர்களாகவே, புத்திசாலிகளாகவே, திறமைசாலிகளாகவே காட்ட வேண்டியிருக்குமே. அப்படி படம் எடுக்க முடியுமா? எடுத்தாலும் நாமெல்லாம் பார்ப்போமா.

படம் எடுப்பவர்கள், தங்கள் படம் நன்றாக ஓடி நிறைய காசு பார்க்க வேண்டும் என்றே படம் எடுக்கின்றனர். அதனால் அதை மசாலா ரேஞ்சில் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை என்று எடுக்கின்றனர்.

அப்படி எடுக்கும் படத்தில் நகைச்சுவைப்பகுதிக்கு வரும் காரெக்டரில் ஒன்றை கொஞ்சம் அப்பாவியாகவும், கொஞ்சம் திறமை குறைந்தவனாகவும், கொஞ்சம் முட்டாளுமாகவும் காட்டி சிரிக்க வைக்கின்றனர்.
அந்த காரெக்டர் சில படத்தில் வக்கீலாகவும், சில படங்களில் டாக்டராகவும், இன்னும் சில படங்களில் ஆட்டோ ஓட்டுனராகவும், பல படங்களில் போலீஸாகவும் வரும்.
அதைப்பார்த்து ரசித்தோமா, சிரித்தோமா என்றுபோகாமல், அந்த காரெக்டர் எனது தொழிலை செய்வதால், என்னை கேலி செய்கிறான் என்று பிரச்சினை கிளப்புவர்களைப்பார்த்து சிரிப்பதா, அழுவதா ? என்றே புரிவதில்லை.

சரி அப்படியில்லாமல், 'சென்னை, திருவல்லிக்கேணி, சந்து தெரு 10ம் நம்பர் வீட்டு பயலாடா நீ' ன்னு ஒரு அசாதாரணமான காரெக்டரை பார்த்து இன்னொரு காரெக்டர் கிண்டலாக அழைப்பதாக இருந்தால், நிஜத்தில் அந்த முகவரியில் வசிக்கும் மனிதர் அந்த படத்தை எடுத்தவர்களின் மேல் மான நஷ்ட வழக்கே போடலாம். அதனால் ஒரு படத்தில் காட்டும் ஒரு காரெக்டரை வைத்து அனைவரையும் கிண்டல் பண்ணுகிறார்களே என்று சொல்லத்தேவையில்லை என்பதே என் கருத்து.

இன்னொரு பதிவர் எழுதினார், 'எம்.ஜி.ஆர் லதாவுடன் ரூம் போட்டார், விஜயகாந்த் விஸ்கி பாட்டிலோடு ரோட்டில் நடந்தார்' என்று. இதற்கும் ஜெயமோகன் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை.

தவிர, ஒவ்வொரு நடிகனும் என்ன செய்கிறான் என்று எல்லோர் வீட்டு சன்னலிலும் போய் எட்டியா பார்க்க முடியும்? மேலும் அவன் எப்படி போனால் நமக்கு என்ன? ஏதோ படத்தில் அவன் நடித்தது ரசிக்கும்படியா இருந்ததென்றால் ரசித்து விட்டு போக வேண்டியதுதானே. அதை விட்டு அவன் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கெதற்கு?

இல்லையில்லை பொது வாழ்வில் இருக்கும் அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்துக்கு உட்பட்டதே என்றால், அரசியல்வாதியிலிருந்து அனைவருக்கும் இது பொருந்துமே.
அவ்வளவு ஏன் வலையுலக பதிவர்களான உங்களுக்கும் (நான் கன்னி பதிவர் என்பதால் உங்கள் லிஸ்டில் சேரவில்லை) இது பொருந்துமே.
அப்படியானால் இனி பதிவர் எழுதும் பதிவை படிப்பதைவிட அவர் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயவே நேரம் சரியாக இருக்குமே.
அதனால் இது நிராகரிக்கப்படவேண்டிய கருத்து என்பதே என் கருத்து.


ஆக மொத்தம், ஜெயமொகன் எம்.ஜி.ஆரின் பேச்சை கிண்டல் செய்து எழுதியது சரியில்லைதான் என்பதே எனது கருத்து.