இன்று ஒரு குறள் !

திங்கள், செப்டம்பர் 29, 2008

பொடியனும் தடியனும்




அந்த பள்ளிக்கூடமே அல்லலோகப்பட்டு கொண்டிருந்தது . அதன் பரபரப்பு, அந்த ஊரையே பற்றிக்கொண்டது. எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

தங்கள் காதில் விழுந்த விஷயத்தோடு தன் மனதிற்கு இதம் தரும் விஷயங்களையும் கற்பனையில் சேர்த்து ஊர்மக்கள் தங்களுக்குள் சுவாரசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

பிரச்சினை இதுதான் :

அந்த பள்ளியின் பத்தாவது வகுப்பில் படிக்கும் வாட்ட சாட்டமான பதினைந்து வயது வாலிபன் அதே பள்ளியில் மூன்றாவது படிக்கும் எட்டு வயது சிறுவனை அடித்து படுகாயப்படுத்தி விட்டான். சிறுவன் மருத்துமனையில் ஐசியு வில் அட்மிட்.

இளைஞன், சிறுவனை அடித்ததை அனைவருமே கண்டித்தாலும், ஒரு சாரார் அந்த சிறுவன் எதற்காக இளைஞனை சீண்டவேண்டும்? பிறகு இப்படி அடி உதை வாங்க வேண்டு்ம் என்று கருத்து கூறி இன்னொரு சாராரின் வெறுப்பை சம்பாதித்தனர்.

பல வழிகளிலும் விசாரித்து அலுத்து போனது பள்ளி நிர்வாகம்.

அந்த இளைஞன் சொன்னதையே சொன்னான்.

அதாவது அந்த சிறுவன் தன்னை எப்போதும் சீண்டி வந்ததாகவும், இன்று ஒரு படி மேலே போய் தன் மேல் கல்லால் எறிந்து தாக்கியதாகவும், அதன் பொருட்டே தனக்கு கண் மண் தெரியாதளவு கோபம் வந்து அவனை தாறுமாறாக தாக்கியதாகவும் கூறி தன் தலையில் ஏற்பட்ட காயத்தையும் காட்டினான்.

ஒரு சிலர் அவன் சொன்னதை நம்பினாலும், வேறு சிலர் இல்லையில்லை இவன், அந்த சிறுவனை கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தான் தாக்கியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினர்.

பள்ளி நிர்வாகமும், இளைஞன் சிறுவனை கொலை செய்யும் திட்டத்தோடு வந்து தாக்கினானா? இல்லை சிறுவன் இவனை காயப்படுத்தியதால் வந்த ஆத்திரத்தில் அறிவிழந்து தாக்கினானா? என்று உண்மை அறிவதற்காக ஒரு மூத்த ஆசிரியர் கொண்டு விசாரிக்க உத்தரவிட்டது.

அந்த பள்ளி இயங்கி வந்த இடம், அந்த ஊரில் பலசரக்கு கடை வைத்திருக்கும் பலராமனுக்கு சொந்தமானது.

ஊரில் புதிதாக சில கடைகள் முளைத்திருப்பதால் சில காலமாகவே அவருக்கு வியாபாரத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருந்தது.

அந்த கவலையில் இருந்த அவரின் காதிலும் இந்த செய்தி விழுந்தது. அவருக்கு இந்த இரண்டு பேரின் குடும்பமும் பரிச்சயமானதுதான்.

இரண்டு குடும்பமும் இவரின் வாடிக்கையாளர்கள் தான். இளைஞனின் பெற்றோர் எப்படியும் மாதம் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இவரிடம் வியாபாரம் செய்வர். சிறுவனின் பெற்றோர் 3000 ரூபாய்க்கு செய்வதே பெரிய விஷயம்.

ஆனால் சிறுவனின் பெற்றோருக்கு இந்த ஊரில் உறவினர்கள் அதிகம். எப்படியும் 20 குடும்பங்களாவது தேறும்.

அதில் இரண்டு மூன்று குடும்பங்கள் இவரிடம் தான் முன்பு பலசரக்கு பொருட்கள் வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது புது கடைக்காரரிடம் சென்று விட்டனர்.

அவர்களையும் சேர்த்து ஒரு 10, 15 குடும்பங்களாவது இவரின் கடைக்கு வந்தாலே போதும். மீண்டும் இலாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.

ஆனால் அந்த சிறுவனின் சொந்தங்களை நம் கடைப்பக்கம் திருப்புவது எப்படி?

இப்படி பலவாறாக சிந்தித்துக்கொண்டிருந்த பலராமனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதிக்க, கடையை கட்டிவிட்டு பள்ளியை நோக்கி நடந்தார்.

கட்டடத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் பலராமனை வரவேற்று பேசிக்கொண்டிருந்த பள்ளி தலைமையாசிரியர், அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போனார்.

ஆனால் எப்படி மறுப்பது? அவன் தான் பள்ளிக்கூட கட்டடத்தின் உரிமையாளராயிற்றே.

இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த தலையாசிரியரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் பலராமன்.

“ஆமாம் சார், என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த இடத்துக்கு சொந்தக்காரன் நான். அதனாலே இது பற்றி விசாரித்து உண்மை அறியும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. நீங்க பாட்டுக்கு உங்க விசாரணையை நடத்துங்க நாங்க பாட்டுக்கு எங்களதை நடத்துறோம்” என்று சொல்லிவிட்டு, தன்னோடு அழைத்து வந்தவரை காட்டி “இதோ இவரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் தான் என் சார்பாக இவர்தான் விசாரணை நடத்துவார்” என்றார்.

அடுத்த நாளே பலராமன் நியமித்த ஆசிரியர், தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு ஊர் மக்களுக்கு அறிவித்தார்.

“ இதன் படி நிரூபிக்கப்பட்டது என்னவென்றால் அந்த சிறுவன் ரொம்ப சாது். அந்த இளைஞனின் காயத்திற்கும் சிறுவனுக்கும் சம்பந்தமில்லை. அந்த காயம் எங்கேயாவது மரக்கிளையில் இடித்துக்கொண்ட விபத்தின் காரணமாக இருக்கலாம். இல்லை சிறுவனை கொலை அடி அடிக்க வேண்டும் என்பதற்காக இளைஞனே எங்காவது இடித்து காயம் ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் ” என்று .

இரண்டு நாட்கள் கழித்து பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியர் தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

“ அந்த இளைஞனைப் பார்த்து எப்போதுமே காண்டு அந்த சிறுவனுக்கு. அவனை கல்லால் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என்று பல நாட்கள் திட்டம் போட்டு, எப்போது தாக்கலாம்? எப்படி தாக்கலாம்? என்று ஒத்திகை பார்த்து விட்டு வந்து தான் சம்பவத்தை நிகழ்த்தினான். அதன் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தினால்தான் இளைஞன் சிறுவனை தாக்கினான்”.




டிஸ்கி1 : முடிவை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் மக்களே !

டிஸ்கி2: இது ஒரு கற்பனை கதை. எதையும், யாரையும் குறிப்பன அல்ல. அதனால் யாரும் எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம்.

(இதெல்லாம் ஒரு கதையானு கேட்கும் கனவான்களே, ரஜினி படம் பார்த்து விட்டு வரும் ஒரு சின்னபயல், ரஜினியை போலவே ஸ்டைல் செய்கிறேன் என்று கையை காலை ஆட்டி ஏதாவது செய்வதில்லையா அது போல என்று நினைத்து பெரிய மனது பண்ணி விட்டு விடுங்கள்).

2 கருத்துகள்:

  1. நான் நாட்டு நடப்புல ரொம்ப வீக்கு,நீங்க என்னமோ சொல்ல வறீங்கன்னு மட்டும் புரியுது.

    பதிலளிநீக்கு
  2. // குடுகுடுப்பை a dit...
    நான் நாட்டு நடப்புல ரொம்ப வீக்கு,நீங்க என்னமோ சொல்ல வறீங்கன்னு மட்டும் புரியுது.
    //

    வாங்க குடுகுடுப்பை சார்,

    ஏதோ அந்த அளவுக்காவது புரியற மாதிரி எழுதியிருக்கேனா. நல்லது!

    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு