இன்று ஒரு குறள் !

வியாழன், செப்டம்பர் 18, 2008

என்ன‌ கொடுமை முருகா இது!

க‌ட‌ந்த‌ சனிக்கிழமை மாலை கணிணி முன் அமர்ந்து வலைப்பதிவுகளை மேய்ந்துக் கொண்டிருந்தபோது, “week end ன் போதும் கணிணிதானா, குடும்பத்தைப் பத்தி கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரு“ என்ற என் இல்லத்தரசியின் அர்ச்சனை, அவர்கள் தாளிக்கும் கடுகு உளுந்து பொறியும் ஓசையை மீறி என் காதுகளில் கேட்டது.


நான் கணிணி முன் அமரும்போதெல்லாம், அவர்கள் விழித்து இருக்கும் பட்சத்தில் இந்த வசனம் வாடிக்கையாக கேட்பதுதான்.

”ஏன் கொஞ்சம் நேரம் மனுஷன் ரிலாக்சா இருக்க விட மாட்டியா” என்று தப்பித் தவறி நான் கேட்டுவிட்டால் அவ்வளவுதான்.

”என் ராசி நான் உங்க கிட்ட மாட்டிகிட்டு அவஸ்தைப்படுறேன். இல்லாட்டி எங்கேயோ எப்படியோ இருந்திருப்பேன்” (ஏதோ பில்கேட்ஸ் அவர் பையனுக்கு சம்பந்தம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கே புகுந்து லவட்டிகிட்டு வந்த மாதிரி) என்ற பில்டப்போடு, ஒரு முடிவற்ற அழுகாய்ச்சி காவியம் ஆரம்பமாகிவிடும் .

அதுக்கு பயந்து கணினியை மூடிவிட்டு, ”என்ன பிரச்சி்னை, என்ன வேணும் உனக்கு?” என்றேன்.

“வீட்டிலே கடுகு இல்ல, பருப்பு இல்ல, அது இல்ல இது இல்ல“ என்று நீட்டிக்கொண்டே போய் கடைசியாய் ”உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுப்பு இல்ல” என்று முடித்தாள் என் இல்லாள்.

”ஒகே! ஒகே! இதுதானா பிரச்சினை? வாங்கிட்டு வந்திட்டா போச்சி. லிஸ்ட் தயார் பண்ணு நான் உடை மாத்திகிட்டு வரேன்” என்று கூறிவிட்டு தப்பிச்சா போதுமென அவசரமாக நகர்ந்தேன்.

அடுத்த ஐந்தாவ‌து நிமிடத்தில் தெருவில் இறங்கினேன். நம்ம ஊர் மளிகை சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் வடபாரீஸுக்கு தான் (paris nord க்கு மொழிபெயர்ப்பு சரிதானே) செல்ல வேண்டும். அங்குதான் இந்திய இலங்கை கடைகள் நிறைந்த பகுதி உள்ளது.

காரை எடுக்கலாம் என்ற நினைப்பை உடனடியாக உதறினேன். காரணம் சாதாரணமாகவே அங்கு காரை நிறுத்த இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு. அதிலும் இன்று சனிக்கிழமை கேக்கவே வேணாம்.

சரியென்று பேருந்து, ட்ரைன் எல்லாம் எடுத்து வடபாரீஸ் வந்திறங்கி, தமிழ்க்கடைகள் நிறைந்த பகுதிக்கு நடந்து சென்றேன். வழக்கம்போல திருவிழா கூட்டம் போல நம் தமிழ் மக்கள் கூட்டம்.

இந்த பகுதி நம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியோ என வியக்க வைக்கும்படி எங்கு பார்த்தாலும் தமிழ்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் அவைகளில் மொய்க்கும் நம் தமிழ் மக்கள். குறிப்பாக சனிக்கிழமை மாலையென்றால் இந்த பகுதி முழுவதும் நம் மக்கள்களால் நிரம்பிவிடும்.

பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? வாரம் முழுதும் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டு, வார இறுதியில் கிடைக்கும் இந்த 2 நாள் ஓய்வில், செலவில்லாமல் ரிலாக்ஸா இருக்க இங்கு வருகிறார்கள். ரிலாக்ஸுக்கு ரிலாக்ஸும் ஆச்சி, அப்படியே வீட்டிற்கு தேவையான சாமான்களும் வாங்கின மாதிரியும் ஆச்சி.

விட்டுப்பிரிய மனமில்லாதவர்கள் குடும்பத்தினருடனும், ஆளை விட்டா போதும் நிலையுடையோர் தனியாகவும் வாராவாரம் இங்கு வந்து விடுகின்றனர்.

இப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கையில் தி்டீரென்று தோளில் ஒரு கை.

”என்னப்பா எதிரில் வர்ற ஆளுகூட தெரியாம எந்த கோட்டையை பிடிக்க திட்டம் போட்டுக்கிட்டு போற?”

அடடே! நம்ப சிவராமன். என் பால்ய நண்பன், தன் இரண்டு் பிள்ளைகளோடு சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா, சும்மா வேடிக்கைப்பார்த்திட்டே வந்ததிலே உன்னை கவனிக்கத் தவறிட்டேன். கோவிச்சிக்காதே. சரி, சொல்லு எப்படியிருக்கே?”

சிவராமன், சிறு வயதிலிருந்து என் கூட படித்தவன். படிப்பில் கெட்டிக்காரன். நானெல்லாம் கல்லூரி வாசலை தொட்டதுமே, போதுமென்ற மனதோடு மற்றவருக்கு வழி கொடுத்து ஒதுங்கிகொண்டேன். ஆனால் இவன் பேராசை பிடித்தவன். அப்படியெல்லாம் செய்யாமல், மேலும் மேலும் படிப்பைத் தொடர்ந்து கொண்டே போனான்.

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வரையில் ஊரில் படித்துக்கொண்டிருந்தவன், அதுவும் வகுப்பில் முதல் மூன்று பேரில் ஒருவன். எப்போதும் முதல் வகுப்பில்தான் பாஸ் செய்தான்.

பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து கொஞ்சம் வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் மனைவி தங்களின் ஒன்ற‌ரை வ‌ய‌து பையனோடு மீன்கடையிலிருந்து என்னைப்பார்த்து சிரித்தபடியே வெளியே வந்தார்.

”எப்படிம்மா இருக்கே? என்ன சொல்றான் உன் கடைக்குட்டி செல்லம்?” என்றேன்.

”ம்ம் இப்ப நல்லா இருக்கான் என்றார்”. என்று சொன்னார்.

சிவராமனின் மூன்றாவது பிள்ளை சுகப்பிரசவத்தில் பிறக்கவில்லை. மருத்துவர் குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்காமல் நாட்கள் தள்ளிப்போக, இதற்கு மேல் விட்டால் தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கருதிய மருத்துவர் குழு அறுவை சிகிழ்ச்சை செய்து வெளியே எடுத்தார்கள்.

சிவராமனும் தன் பங்கிற்கு சீர்காழீ் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி வரை குழந்தை நல்லபடியாக பிறந்தால் அங்கங்கே வந்து நேர்த்திக்கடன் செய்வதாய் வேண்டிக்கொண்டான்.

அப்படி சிரமப்பட்டு பெற்றதாலேயோ அல்லது கடைக்குட்டி என்பதாலேயோ அவன் மேல் இருவருக்கும் அளவு கடந்த பாசம்.

பாசத்தோட அளவு சொல்லனும்னா, யாரோ ஒரு மரத்தடி ஜோசியர் பிள்ளைக்கு தண்ணீரில் கண்டம் என்று சொல்லி விட்டாரென்று இந்த பிள்ளைக்கு layer baby (தமிழாக்கம் தெரியவில்லை) கட்டாமல் வளர்த்தவன். ஏண்டா என்று கேட்டதற்கு, ”அவன் கழிக்கும் சிறுநீரும் தண்ணிதானே அதனால் அவனுக்கு ஆபத்து வந்ததென்றால்?” என்று பதிலளித்தவன்.

”என்னப்பா பலத்த யோசனை?”.

“ ஒண்ணுமில்லே சிவா, உன் பிள்ளையைப்பத்திதான் யோசனை. அது சரி, உன் மனைவி என்ன சொல்றாங்க? இப்ப‌ ந‌ல்லாருக்கான்னா என்ன‌ அர்த்த‌ம்? குழந்தைக்கு என்ன ஆச்சு?” என் விசாரித்தேன்.

”போன வாரம் ரொம்ப சீரியஸா போய்ட்டான்பா”

”என்னாச்சி? எதனால??”

“தெரியல. திடீரென்று பேச்சி மூச்சியில்லாம போய்ட்டான்”

”ஐயையோ! அப்புறம்?”

”எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. புள்ளையை உலுக்கி குலுக்கி பார்த்தேன் சின்ன அசைவுகூட இல்லை”

”சொல்லு அப்புறம் என்ன செஞ்சே?”

“உடம்பெல்லாம் ஜில்லின்னு வேற ஆய்டுச்சி“

“சொல்லுடா அப்புறம் என்ன செஞ்ச? உடனே SAMU க்கு போன் அடிச்சியா இல்லியா? இல்லே நீயே hopital தூக்கிட்டு போனியா? டாக்டர் என்னா சொன்னாங்க? ஒண்ணும் பயப்படுற மாதிரி இல்லையே? சொல்லு.”

”இல்லே அதெல்லாம் செய்யல. வீட்டிலுள்ள முருகன் படத்திற்கு முன்னாடி நின்னு வணங்கிட்டு பிள்ளைக்கு விபூதி பூசி விட்டேன். சரியா ரெண்டே, நிமிஷம் புள்ளை கண்ணைத்தொறந்து பார்த்து சிரிக்கிறான்.”

”என்னது ????????????,
சரி போகட்டும் அப்புறமாவது மருத்துவரிடம் அழைத்து போனியா?”

”எதுக்கு அநாவசியமா? இதோ பாரு, அன்னையிலிருந்து இன்னைக்கி பத்து நாளாவது. எந்த டாக்டர்கிட்டேயும் போகல. எப்படி இருக்கான் பாரு கலகலனு.........”

நான் வாய‌டைத்து போய் நிற்ப‌தைப்ப‌ற்றி க‌வ‌லைப் ப‌டாம‌ல் பேசிக்கொண்டே போனான் சிவ‌ராம‌ன்.

சிவராமனின் கல்வித்தகுதி : MA, M.PHIL (PHYSICS)

12 கருத்துகள்:

  1. வாங்க யாத்ரீகன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //யாத்ரீகன் a dit...
    adapavamey :-( //

    என்னாச்சு?

    எதுக்கு??

    ஏன்????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9/18/2008 03:23:00 PM

    enna kodumaisir ithu?

    பதிலளிநீக்கு
  4. illa.. andha moment-ku viboothi vachi sariyanadha nenachirunthaalum parava illai-nu viturkalaam.. but adhukapuram dr kita poi yenna-nu kooda paarkakdhadhai yenna-nu sola.. avarukaaga varuthapadurathai thavira..

    பதிலளிநீக்கு
  5. // bala a dit...
    enna kodumai sir ithu?//

    வாங்க பாலா,

    உங்கள் வருகைக்கு்ம், கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //enna kodumai sir ithu?//

    இது எங்க கொடுமை, உங்க கொடுமை இல்லை.

    கொடுமையோ கொடுமை.
    :-(

    பதிலளிநீக்கு
  7. வாங்க முகமிலி சார்!

    தங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. // யாத்ரீகன் a dit...
    illa.. andha moment-ku viboothi vachi sariyanadha nenachirunthaalum parava illai-nu viturkalaam.. but adhukapuram dr kita poi yenna-nu kooda paarkakdhadhai yenna-nu sola.. avarukaaga varuthapadurathai thavira.. //

    என்ன செய்வது சார் நம் மனிதர்கள் அவ்வளவு மூட நம்பிக்கையிலே ஊறிப்போயிருகிறார்கள்.

    சிவராமனைப் பொறுத்தவரை அவன் வணங்கும் முருகனே தன் மகனை குணப்படுத்தி விட்டதாகவே நினைக்கிறான்.

    என்ன படித்து என்ன பயன்? :-(

    பதிலளிநீக்கு
  9. //தமிழ்நெஞ்சம் a dit...
    Idhellaam sahajamnga..//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்.

    சகஜமே என்றாலும் சரியில்லை என்பது என் கருத்து!

    பதிலளிநீக்கு