இன்று ஒரு குறள் !

புதன், பிப்ரவரி 04, 2009

ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் என்றைக்கு ஆட்சியை இழந்தார் இன்றைக்கு இழப்பதற்கு!!!




இதுவரை கலைஞர் ஈழத் தமிழர் பிரச்சினை பெரிதாகும் ஒவ்வொரு முறையும் உப்புக்கு சப்பாணி கணக்காக மனித சங்கிலி, அனைத்துக் கட்சி கூட்டம், இறுதி தீர்மானம்... இப்படி ஏதாவது பேருக்கு அறிவிப்பார்.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ’அய்யகோ’ கவிதை.

இப்படி ’ஏனோ தானோ’ போராட்ட அறிவிப்பின் கூடவே ஒரு அறிக்கையும் வரும். அதில் ’கல் தோன்றி மண் தோன்றா காலந்தொட்டே, தான் ஈழத் தமிழர்களுக்காக செய்த சாதனைகள்’ என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்.

அதில் தவறாமல் தான் ஆட்சியை இரண்டு முறை ஈழத்தமிழர்களுக்காக இழந்ததாகவும் கூறி இருப்பார்.

இந்த சத்தற்ற போராட்ட அறிவிப்பு நமக்கு எரிச்சல் மூட்டினாலும் கூட,
அவரின் அறிக்கையில் இருக்கும், ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சிக் கலைப்பு ஒரு கழிவிரக்கம் தரும்.

அதைப்படிக்கின்ற நாமும், ’பாவம் முன்பெல்லாம் பதவியை தூக்கிப்போட்டுட்டு போயிருக்கிறார் இப்போதுதான் முடியவில்லை போலிருக்கிறது ’என்று எண்ணி சமாதானம் அடைவோம்.

ஆனால் இப்போது ஒரு புது பூதம் கிளம்பியிருக்கிறது. இதுவரை ஒரு முறை கூட ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் பதவியை இழக்கவில்லையாம். இதை கீற்று.காம் இணையத்தில் திரு சே. பாக்கியராசன் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

இப்படி அந்தந்த காலங்களில் நடந்தவற்றை அந்தந்த காலங்களில் இருந்து கவனித்தவர்கள் பகிங்கிரப்படுத்தினால்தான், நம் அரசியல்வாதிகளின் புளுகுகளை அறிந்துக் கொள்ளலாமோ என்னமோ.



இதோ அவரின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:



1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975
ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-
இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983
ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.



நன்றி :

சே.பாக்கியராசன், மிச்சிகன்

மற்றும்

கீற்று.காம்


பி.கு :

இதற்காக நான் கலைஞர் ஒழிக! என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் கலைஞரை மட்டுமல்ல வேறெந்த தற்போதைய அரசியல்வாதியையும்'வாழ்க !’ போட்டு பின் சென்றதில்லை. அதனால் எனக்கு அந்த உரிமை இல்லை ;-)

திங்கள், அக்டோபர் 13, 2008

இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !

இரண்டு நாள் week end விடுமுறையில் இந்த முறையாவது முடித்திருத்தம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

இது ஒரு உலகமகா விஷயமின்னு இதற்கொரு தீர்மானம் என்று பல்லை நற நறப்பவர்களுக்கு, ‘ஐயா நாங்கள் இங்கு உள்ளூரில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் முடித்திருத்தம் செய்துக்கொள்ள மாட்டோம். சில பல கிலோ மீட்டர் தூரத்தில் கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் தான் செய்து கொள்வோம் (இனப்பற்று?).

அதற்கு போய் வர காத்திருக்க என அரை நாள் விடுமுறை அம்பேல் ஆகிவிடும். இதனால் கடந்த மூன்று வாரங்களாக போக வேண்டும் என் நினைத்து நினைத்து முடியாமல் போய்விட்டது அதற்காகதான் இந்த தீர்மானம். இப்ப ஓகே வா ! ஹி.. ஹி..’

தீர்மானித்த மாதிரியே காலையில் கிளம்பி விட்டேன். அப்புறமென்று தள்ளிப்போட்டால் வேற வேலை வந்து இந்த வாரமும் போக முடியாமல் போய்விடும்.
ஏற்கனவே பணியிடத்தில் முடியை விலக்கிட்டு மூஞ்சை தேடுறானுங்க.

கடையில் கொஞ்சம்தான் கூட்டம். அங்கு பணிபுரியும் ஐந்து பேரில் ஒருவர் மட்டும் ஃப்ரீ. நான் வழக்கமாக மண்டையை கொடுப்பவரிடம் மூன்று பேர் வெயிட்டிங். நான் நான்காவது.

கடை உரிமையாளர், வேலை செய்யும் நான்கு பேர், மற்றும் வந்து போகும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அனைவரும் இலங்கையை சார்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் (ஈழத்தமிழர்கள்?).

சில மணித்துளிகளுக்கு பிறகு, என்னுடைய முறை வந்ததும், வாடிக்கையாக வெட்டுபவரின் முன் அமர்ந்து என் தலையை ஒப்படைத்தேன். வழக்கம்போல் என் தலையில் கை வண்ணம் காட்டியபடியே என்னுடன் உரையாட ஆரம்பித்தார்.

உரையாடல், வேலை, வெயில், சீஸன், சினிமா என்று எங்கெங்கோ தொடர்ந்து பின் நின்றது .

சிறிது நேர நிசப்தத்திற்கு பிறகு, “இந்தியாவில் ஏதுனும் விசேடமோ?” என்று வினவினார்.

எனக்கொன்றும் புரியவில்லை.

“என்ன கேட்டிங்க?” இது நான்.

பக்கத்தில் முடி வெட்டிக்கொள்ள வந்த இன்னொரு இளைஞன், “இல்லே அண்ணை, இந்தியாவில் எலெக்க்ஷன் ஏதும் வருதோ எண்டு கேட்டவர்” என்று விளக்கினார்.

அதற்கு நானும், “ ஆமாம்! இன்னும் சில மாதங்களில் பார்லிமெண்டுக்கு எலெக்‌ஷன் வருகிறது” என்றேன்.

உடனே அனைவரும் அர்த்தப்புஷ்டியோடு ஒருவ‌ருக்கொருவ‌ர் பார்த்து சிரித்துக் கொண்ட‌ன‌ர். எனக்கொன்றும் புரியவில்லை ‘எதற்கு அனைவரும் இப்படி நக்கலாக சிரிக்க வேண்டும்? ’

என் முழிப்பை பார்த்து விட்டு கடை உரிமையாளர் சொன்னார், “ஒண்றுமில்லை, தமிழ் நாட்டில் திடீரென்று எல்லா அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழரைப் பத்தி பேசுதே, அதற்கு என்ன காரணமென்று இதுவ‌ரைக்கும் புரியாம‌ல் இருந்தது, அதுதான் ” என்றார்.

நானும் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு வெளியேறினேன்.

ஆக நம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு கண்டு ஏமாறும் தமிழ் நாட்டு மக்கள் போல் இல்லை.

இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !

புதன், அக்டோபர் 01, 2008

லொள்ளு பாண்டி



புதிய கட்சி தலைவர் சிரஞ்சீவி :
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது.


லொள்ளு பாண்டி :
நியாயந்தானே ! அவருக்கு பொழுது போகலேனா சரோஜா படத்துக்கு விமர்சனம் எழுத சொல்லுங்கோ.
அதை வீட்டுபுட்டு அரசியல் பேசிக்கிட்டு...?

அதையெல்லாம் பேசத்தானே சினிமாகாரங்க, நீங்க இருக்கீங்க!!!



தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது :
இதுவரை தி.மு.க. சார்பில் முஸ்லீம்களுக்கு கருணாநிதி இப்தார் விருந்து கொடுத்ததுண்டா ?


லொள்ளு பாண்டி :
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?
அவர் இப்தார் விருந்து வேணா கொடுக்காம இருந்திருக்கலாம்.
ஆனா முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் எல்லோருக்குமே அப்பப்ப அல்வா கொடுத்திருக்காரே !




இப்தார் விருந்தில் விஜயகாந்த் :
என் மகனுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டலாம் என்று ஆசைப்பட்டேன். பிரச்சினை வரும் என்பதற்காக அதைத் தவிர்த்தேன்.

லொள்ளு பாண்டி :
பிரச்சினை யாரு கிட்டேயிருந்து ?  பொண்டாட்டி, மச்சினன் கிட்டேயிருந்தா ???

அதை விடுங்க, உங்க இன்னொரு மகனுக்கு கிறிஸ்துவப் பெயர் சூட்ட ஆசைப்பட்டீங்களே அதை மறந்திடாதீங்க . இன்னும் ரெண்டு மாசத்திலே கிறிஸ்துமஸ் விருந்திலே சொல்ல வேண்டியிருக்கும்.

இந்திய கம்யூ. தா. பாண்டியன் :
கடுமையான ‘பொடா’ வேண்டாம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் சட்டங்களைத் துணிச்சலுடன் செயல்படுத்தினாலே போதும்.

லொள்ளு பாண்டி : 
கடுமையான ,சட்டம் தேவையில்லை சட்டங்களைத் துணிச்சலா செயல் படுத்த கடுமையான அரசு வேணும்னு சொல்றீங்க, சரியா?

அப்ப இவ்வளவு நாளு ஒரு ’சோப்லாங்கி’ அரசுக்கா ஆதரவு கொடுத்தீங்க!!!!!!


முதல்வர் கருணாநிதி :
ஒரு ரூபாய்க்கு அரிசி, ரு 50க்கு மளிகைப் பொருட்கள் தருவதை விமர்சிக்கும் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை நிறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லத் தயாரா?

லொள்ளு பாண்டி :
அதானே! சரியான கேள்வி கேட்டீங்க !
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தப்ப ‘வருங்கால பிச்சைக்காரர்களை உருவாக்கம் செய்யும் திட்டம்’ னு விமர்சனம் செஞ்சீங்க. ஆனால் நீங்க, ’திட்டத்தை நிறுத்திடுறேனு’ சொல்லியா தேர்தலிலே நின்னீங்க, கூட ஒரு முட்டை போடுரேன்னு சொல்லித்தானே  மக்களை சந்திச்சீங்க.

அது கூட தெரியலயே இவங்களுக்கு!!


நடிகர் வடிவேலு :
‘வடிவேலு‘ங்கிற நெருப்பு மேலே காலை வச்சிட்டாரு விஜயகாந்த் அது எம்புட்டுக் கொதிக்குதுன்னு அனுபவிச்சுத்தான் ஆகணும்.
லொள்ளூ பாண்டி :
வடிவேலு சார்,  
நீங்களே உங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணிக்கிலயே.

திங்கள், செப்டம்பர் 29, 2008

பொடியனும் தடியனும்




அந்த பள்ளிக்கூடமே அல்லலோகப்பட்டு கொண்டிருந்தது . அதன் பரபரப்பு, அந்த ஊரையே பற்றிக்கொண்டது. எல்லோரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

தங்கள் காதில் விழுந்த விஷயத்தோடு தன் மனதிற்கு இதம் தரும் விஷயங்களையும் கற்பனையில் சேர்த்து ஊர்மக்கள் தங்களுக்குள் சுவாரசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

பிரச்சினை இதுதான் :

அந்த பள்ளியின் பத்தாவது வகுப்பில் படிக்கும் வாட்ட சாட்டமான பதினைந்து வயது வாலிபன் அதே பள்ளியில் மூன்றாவது படிக்கும் எட்டு வயது சிறுவனை அடித்து படுகாயப்படுத்தி விட்டான். சிறுவன் மருத்துமனையில் ஐசியு வில் அட்மிட்.

இளைஞன், சிறுவனை அடித்ததை அனைவருமே கண்டித்தாலும், ஒரு சாரார் அந்த சிறுவன் எதற்காக இளைஞனை சீண்டவேண்டும்? பிறகு இப்படி அடி உதை வாங்க வேண்டு்ம் என்று கருத்து கூறி இன்னொரு சாராரின் வெறுப்பை சம்பாதித்தனர்.

பல வழிகளிலும் விசாரித்து அலுத்து போனது பள்ளி நிர்வாகம்.

அந்த இளைஞன் சொன்னதையே சொன்னான்.

அதாவது அந்த சிறுவன் தன்னை எப்போதும் சீண்டி வந்ததாகவும், இன்று ஒரு படி மேலே போய் தன் மேல் கல்லால் எறிந்து தாக்கியதாகவும், அதன் பொருட்டே தனக்கு கண் மண் தெரியாதளவு கோபம் வந்து அவனை தாறுமாறாக தாக்கியதாகவும் கூறி தன் தலையில் ஏற்பட்ட காயத்தையும் காட்டினான்.

ஒரு சிலர் அவன் சொன்னதை நம்பினாலும், வேறு சிலர் இல்லையில்லை இவன், அந்த சிறுவனை கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தான் தாக்கியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினர்.

பள்ளி நிர்வாகமும், இளைஞன் சிறுவனை கொலை செய்யும் திட்டத்தோடு வந்து தாக்கினானா? இல்லை சிறுவன் இவனை காயப்படுத்தியதால் வந்த ஆத்திரத்தில் அறிவிழந்து தாக்கினானா? என்று உண்மை அறிவதற்காக ஒரு மூத்த ஆசிரியர் கொண்டு விசாரிக்க உத்தரவிட்டது.

அந்த பள்ளி இயங்கி வந்த இடம், அந்த ஊரில் பலசரக்கு கடை வைத்திருக்கும் பலராமனுக்கு சொந்தமானது.

ஊரில் புதிதாக சில கடைகள் முளைத்திருப்பதால் சில காலமாகவே அவருக்கு வியாபாரத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருந்தது.

அந்த கவலையில் இருந்த அவரின் காதிலும் இந்த செய்தி விழுந்தது. அவருக்கு இந்த இரண்டு பேரின் குடும்பமும் பரிச்சயமானதுதான்.

இரண்டு குடும்பமும் இவரின் வாடிக்கையாளர்கள் தான். இளைஞனின் பெற்றோர் எப்படியும் மாதம் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இவரிடம் வியாபாரம் செய்வர். சிறுவனின் பெற்றோர் 3000 ரூபாய்க்கு செய்வதே பெரிய விஷயம்.

ஆனால் சிறுவனின் பெற்றோருக்கு இந்த ஊரில் உறவினர்கள் அதிகம். எப்படியும் 20 குடும்பங்களாவது தேறும்.

அதில் இரண்டு மூன்று குடும்பங்கள் இவரிடம் தான் முன்பு பலசரக்கு பொருட்கள் வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது புது கடைக்காரரிடம் சென்று விட்டனர்.

அவர்களையும் சேர்த்து ஒரு 10, 15 குடும்பங்களாவது இவரின் கடைக்கு வந்தாலே போதும். மீண்டும் இலாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.

ஆனால் அந்த சிறுவனின் சொந்தங்களை நம் கடைப்பக்கம் திருப்புவது எப்படி?

இப்படி பலவாறாக சிந்தித்துக்கொண்டிருந்த பலராமனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதிக்க, கடையை கட்டிவிட்டு பள்ளியை நோக்கி நடந்தார்.

கட்டடத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் பலராமனை வரவேற்று பேசிக்கொண்டிருந்த பள்ளி தலைமையாசிரியர், அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போனார்.

ஆனால் எப்படி மறுப்பது? அவன் தான் பள்ளிக்கூட கட்டடத்தின் உரிமையாளராயிற்றே.

இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த தலையாசிரியரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் பலராமன்.

“ஆமாம் சார், என்ன இருந்தாலும் சம்பவம் நடந்த இடத்துக்கு சொந்தக்காரன் நான். அதனாலே இது பற்றி விசாரித்து உண்மை அறியும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது. நீங்க பாட்டுக்கு உங்க விசாரணையை நடத்துங்க நாங்க பாட்டுக்கு எங்களதை நடத்துறோம்” என்று சொல்லிவிட்டு, தன்னோடு அழைத்து வந்தவரை காட்டி “இதோ இவரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் தான் என் சார்பாக இவர்தான் விசாரணை நடத்துவார்” என்றார்.

அடுத்த நாளே பலராமன் நியமித்த ஆசிரியர், தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு ஊர் மக்களுக்கு அறிவித்தார்.

“ இதன் படி நிரூபிக்கப்பட்டது என்னவென்றால் அந்த சிறுவன் ரொம்ப சாது். அந்த இளைஞனின் காயத்திற்கும் சிறுவனுக்கும் சம்பந்தமில்லை. அந்த காயம் எங்கேயாவது மரக்கிளையில் இடித்துக்கொண்ட விபத்தின் காரணமாக இருக்கலாம். இல்லை சிறுவனை கொலை அடி அடிக்க வேண்டும் என்பதற்காக இளைஞனே எங்காவது இடித்து காயம் ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் ” என்று .

இரண்டு நாட்கள் கழித்து பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியர் தனது விசாரணை முடிவை கீழ்க்கண்டவாறு அறிவித்தார்.

“ அந்த இளைஞனைப் பார்த்து எப்போதுமே காண்டு அந்த சிறுவனுக்கு. அவனை கல்லால் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என்று பல நாட்கள் திட்டம் போட்டு, எப்போது தாக்கலாம்? எப்படி தாக்கலாம்? என்று ஒத்திகை பார்த்து விட்டு வந்து தான் சம்பவத்தை நிகழ்த்தினான். அதன் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தினால்தான் இளைஞன் சிறுவனை தாக்கினான்”.




டிஸ்கி1 : முடிவை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் மக்களே !

டிஸ்கி2: இது ஒரு கற்பனை கதை. எதையும், யாரையும் குறிப்பன அல்ல. அதனால் யாரும் எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம்.

(இதெல்லாம் ஒரு கதையானு கேட்கும் கனவான்களே, ரஜினி படம் பார்த்து விட்டு வரும் ஒரு சின்னபயல், ரஜினியை போலவே ஸ்டைல் செய்கிறேன் என்று கையை காலை ஆட்டி ஏதாவது செய்வதில்லையா அது போல என்று நினைத்து பெரிய மனது பண்ணி விட்டு விடுங்கள்).

செவ்வாய், செப்டம்பர் 23, 2008

விஜயகாந்த்+வடிவேல் லடாய் - சில சந்தேகங்களும், கேள்விகளும்

கடந்த சில நாட்களாக நடந்து வரும் விஜயகாந்த்- வடிவேல் லடாய் அனைவரும் அறிந்ததே.

இது சம்மந்தமாக கருத்துக்கள் பல மீடியாக்களில் (இணைய பதிவுகள் உட்பட) வந்த வண்ணம் உள்ளனர். இதிலே நம் கருத்தையும் சொல்லாட்டி எப்படினு ஆரம்பிச்சி பிரச்சினையை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் நிறைய ஏன்? ஏன்? ஏன்? கள் தான்.

சரி கேள்விகளை நமக்குள்ளே வச்சிக்கிட்டு தலையை பிச்சிக்கிறதை விட சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுடலாமே . பதிலை அவங்க சொன்னாலும் சரி இல்லை அவங்க சார்பாக அவங்களோட அனுதாபிகள் சொன்னாலும் சரி

வடிவேல் வீட்டைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான கண்டனத்துக்குறியவர்கள் மட்டுமின்றி சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது .

ஆனால் நடந்த சம்பவத்திற்கு பின் இரு தரப்பாலும் கொடுக்கப்பட்ட பேட்டிகள், அறிக்கைகள் இவற்றில் பல விஷயங்கள் புரியவில்லை. அதனால் தான் இந்த புதசெவி பதிவு ! ( நண்பர் TBCD மன்னிப்பாராக).



முத‌லில் வ‌டிவேலிட‌ம் சில‌ கேள்விகள்


1. தங்கள் வீட்டை சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்கி சேதப்படுத்தியது என்பதை பார்த்த நீங்கள் அது எப்படி நிச்சயமாக விஜயகாந்த் தூண்டுதல் பேரிலேயே வந்தவர்கள் அவர்கள் என்பதை தீர்மானித்தீர்கள்?

2. அவர்கள், ”முதல்வராக வரப்போகும் என் தலைவனிடம் மோதாதே”என்று கூறியபடியே தாக்கினார்கள் என்பதால், அது விஜயகாந்த் அனுப்பிய படைதான் எனத் தெள்ளத் தெளிவாக தெரிவதாக கூறிய நீங்கள்,அந்த கும்பல் ”கலைஞர் வாழ்க” என்று சொல்லியிருந்தால் கலைஞரின் கூலிப்படையென்றோ, ”புரட்சித்தலைவி வாழ்க” என்றிருந்தால் ஜெயலலிதாவின் கூலிப்படை என்றோ கூறியிருப்பீர்களா?

அது என்ன லாஜிக் ?
வந்தவர்கள் தாங்கள் யார் என்று தாங்களே வாக்குமூலம் கொடுப்பார்களா?

3.விஜயகாந்தை தவிர இந்த உலகத்தில் வேறு எதிரிகள் யாருமே உங்களுக்கு கிடையாது என்கிறீர்கள். நல்லது.
ஆனால் பிறகு ஏன் நடிகை ஸ்ரேயா உங்களோடு ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் அஜித் தன் படத்திலிருந்து அவரை நீக்கினார்?

இங்கு அஜீத்தின் பிரச்சினை ஸ்ரேயாவின் குத்தாட்டமா இல்லை உங்களோடு அவர் நடித்ததா?

தவிர ,உங்களால் பாதிக்கப்பட்ட எவ்வளவோ துணை காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அதில் சில பேர்கூட துணிந்து உங்களைப்பற்றி குறை கூறி பேட்டி கூட கொடுத்தார்கள்.
அதற்காக அவர்கள்தான் கூலிப்படை அனுப்பினார்கள் என்று உங்களைப்போல வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ பாணியில் சொல்ல வரவில்லை.

உங்களுக்கு விஜயகாந்தை தவிர இன்னும் பல எதிரிகள் இருக்க வாய்ப்பிருக்கிறதா இல்லையா? என்பதே இங்கே கேள்வி.

4. உங்கள் கருத்துப்படியே விஜயகாந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்று வைத்துக்கொண்டாலும், அவரை ஒழிப்பதற்காக தேர்தலில் எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளீர்களே தண்டனை விஜயகாந்துக்கா? இல்லை அந்த தொகுதி மக்களுக்கா?

மற்றவர்கள் உண்மையிலே மக்களுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, அரசியலுக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று சொல்லவாவது செய்கிறார்கள்.

நீங்கள் மட்டும்தான் தனியொரு மனிதனை எதிர்ப்பதற்காக தேர்தலில் நிக்கப்போவதாக சொன்னது மட்டுமல்லாமல் இன்று விடுத்த அறிக்கையில் கட்சியே ஆரம்பிக்க போவதாக சொல்லியிருக்கிறீர்கள் இது நியாயமா?

அதற்கு பதில் ஏன் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் எதிரிலியே நீங்கள் ஒரு மண்டபம் கட்டி அவ்ரின் வருமானத்தை குறைக்க கூடாது?

இல்லை அவர் படம் ரிலீஸ் அன்று நீங்கள் கதாநாயகனாய் நடித்த படத்தை ரிலீஸ் செய்து வசூலில்அவருக்கு பாடம் புகட்ட கூடாது ?

இல்லை அரசியலில் தான் அவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், தேர்தல் சமயம் அவர் நிற்கும் தொகுதியில் எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களிலே சிறந்தவர் என தாங்கள் தீர்மானிக்கும் ஒருவருக்கு இலவசமாக பணிகள் மற்றும் பிரசராம் செய்து விஜயகாந்தை மண்ணை கவ்வ வைக்க கூடாது?

5. உங்களை யாரும் தூண்டிவிடவில்லை என்று சொன்னீர்கள் சரி! அது எப்படி ”இந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது”. என்று எதை வைத்து இந்த அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினீர்கள்?

கொஞ்சம் உதைக்கிறதே!




அடுத்து விஜ‌ய‌காந்திட‌ம் சில கேள்விகள்

1. வடிவேல் வீட்டை ’என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா” என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கிய அந்த கும்பல் தங்கள் கட்சியினர் அல்ல என்பதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?

இது சம்பந்தமாக தங்கள் கட்சியினரிடம் விசாரணை நடத்தினீர்களா ?


2. அந்த கும்பல் தங்களால் ஏவி விடப்படவில்லை என்று உறுதி பட மறுத்திருக்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி தொண்டர்களே ஆர்வமிகுதியால் ஏன் அப்படி செய்திருக்க கூடாது?
உங்கள் வக்கீல் உங்களை கேட்காமலே முன் ஜாமின் மனு தாக்கல் செய்துவிட்டார் என்று உங்கள் தரப்பு சொன்னது போல்.

3. சரி எப்படியோ விசாரணை செய்தவரையில் உங்கள் கட்சிக்கும் அந்த வன்முறை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று உறுதிபட கண்டு கொண்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் எதை வைத்து கலைஞர் தான் படை அனுப்பினார் என்றும் வடிவேலுவை பின்னிருந்து இயக்குகிறார் என்றும் சொன்னீர்கள்?

இதுவும் அதே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ கதைதானே!

4. அதேபோல் வடிவேல் உங்களை எதிர்த்து தேர்தலில் நிக்கப்போவதாக அறிவிக்க அதற்கு பதில் சொல்லும் விதமாக கலைஞரே எதிர்த்து நின்றாலும் பயப்பட மாட்டேன் என்று எதற்கு இதற்குள் அவரை இழுக்கிறீர்கள்?

5. வன்முறையால் பாதிக்கப்பட்டவர், தாக்கிய வன்முறை கும்பலை ஏவிவிட்டவர் நீங்கள்தான் என்று காவல் நிலையத்தில் ஆணித்தரமாக புகார் தந்ததால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ”கலைஞர் என் மீது பொய் வழக்குகள் போடுகிறார் ” என்று இதையும் அரசியல் ஆக்கலாமா?
இது நியாயம் தானா?



இறுதியாக சில பொதுக்கேள்வி
கள்

1.தனக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான செயல் செய்து மக்களிடம் தனது இமேஜை குறைத்துக்கொள்வாரா?

அதுவும் லோக்சபா தேர்தல் வரப்போகும் இத்தருணத்தில்?

2.கம்யூனிஸ்ட்கள் திமுகவிடமிருந்து பிரிந்து விட்டன. தமிழ்நாட்டு அரசியல் நியூட்டன் விதிப்படி நியாயமாக அதிமுக வுடன் தான் அடுத்த தேர்தலில் கூட்டு சேரவேண்டும். மாறாக தேமுதிக தலைவரை மார்க்ஸிஸ்ட் தலைவர் வரதராசன் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பினால் எரிச்சல் அடைந்த (பாதிப்பு அடைய இருக்கும்) யாரோ ஒருவர் ஏன் இப்படி செய்திருக்க கூடாது?

இன்னும் பல ஏன்?கள் மிச்சமிருப்பினும், இப்போதுக்கு இது போதும். பதில் கண்டு பிற!