இன்று ஒரு குறள் !

சனி, ஜூலை 24, 2010

பதிவர் சவுக்கு சங்கரின் கைதுக்கு கடுமையான கண்டனங்கள்






சவுக்கு என்ற பெயரில் பதிவு ஒன்றை ஆரம்பித்து ஊழல் பெருச்சாளிகளின் திருவிளையாடல்களை அப்படியே பிட்டு பிட்டு வைத்து அவர்களின் முகத்திரையை கிழித்து தோரணமாய் தொங்க விட்டு கொண்டிருந்தார் சங்கர்   என்கின்ற முன்னால் காவல்துறை அதிகாரி

அவரின் பதிவுகள் கிசு கிசு பாணியில் இல்லாமல் பகிங்கரமாகவே ஊழலதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டே சொல்லப்பட்டிருக்கும், சில பதிவுகளில் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமான டாக்குமெண்ட் நகல்களையும் இணைத்திருப்பார்.

இப்படி சவுக்கை சுழட்டி சுழட்டி அடித்து வெளுத்துக் கொண்டிருந்தவருக்கு கண்டிப்பாக ஆட்டோ வரும் என்று வாசகர்கள் பலர் எதிர்பார்த்ததை போலவே அவரும் எதிர்பார்த்திருந்தார். அதையும் பதிவு செய்திருந்தார். தனக்கு எதிராக என்ன செய்யலாமென்று, எந்த இடத்தில், யார்யாரெல்லாம் ஆலோசனை செய்கிறார்கள் என்பதையெல்லாம் கூட பதிவில் எழுதியிருந்தார்.


அவர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதாக நேற்று தான் எனக்கு, பதிவுலகம் மூலம் தெரிய வந்தது

"சரி, எந்தெந்த குற்றப்பிரிவில்  அவரை கைது செய்துள்ளனர் ? எப்படியும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவரிடம் தான், எழுதிய அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதே" என்று எண்ணியபடியே பதிவுகளை மேய்ந்தால், அதிர்ச்சி! அவரை கைது செய்ததற்கு காரணமாய் அவர் எழுத்து சொல்லப்படவில்லை. மாறாக, அம்மா காலத்து கஞ்சா கேஸ்போல், வேறு ஏதோ நாடகம் செட் பண்ணி,  ஜாமினில் வர முடியாத ஒரு இபிகோ வில்  கைது செய்துள்ளனராம். அட தேவுடா..........

உங்களிடம் நியாயம் இருந்தால், அவர் எழுத்தை நேர்மையாக அல்லவா சந்தித்து இருக்க வேண்டும் . அவர் தான் பேரை குறிப்பிட்டு , ஊரை குறிப்பிட்டு  பக்காவாக உங்கள் வண்டவாளங்களை சொல்கிறாரே. அப்படிப்பட்டவர் ஓடி ஒளியவா போகிறார்.

இந்த ஒரு செயல் மூலமே சவுக்கில் எழுதியவை அனைத்தும் ஒரு எழுத்து பிசகாமல் உண்மை என்றாகிவிட்டதே.


என்னமோ போங்க, "முட்டா குருவும் மூட சீடர்களும்" னு ஒரு சொல்வடை எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க, அதான் எனக்கு இப்ப ஞாபகத்துக்கு வருது. 'இம்சை அரசனும் இந்த எழவெடுத்த அதிகாரிகளும்' தான், தமிழ் நாட்டு அரசாங்கத்தை நடத்திட்டு வராங்க.

பாவம் மக்கள்!


ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கின்றது என்ற ஆணவத்தில்,  எழுத்துப்பணிக்கு மிரட்டல் விடுவது போல் தங்களைப்பற்றி எழுதிய எழுத்தாளனை பொய் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்திருக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இதற்கு துணை போன காமராஜ் என்ற நக்கீரன் துணை ஆசிரியருக்கும் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஆனா யார் யாரெல்லாம் நெற்றிக்கண் திறக்கலாம்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்) எனது கடுமையான கண்டனங்கள்

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று கண்டும் காணாமல், ஒரு சக எழுத்தாளனுக்கு நடக்கும் அக்கிரமத்தை தட்டி கேட்காமல், நடிக நடிகையரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஊடகத்துறைக்கும் எனது கண்டனங்கள்

இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்திருந்தாலும் ஊழல் அதிகாரிகளை தோலுரிக்க தயங்காத சவுக்கு சங்கரின் நேர்மைக்கும் துணிவிற்கும் ஒரு ராயல் சல்யூட்

செவ்வாய், ஜூலை 13, 2010

விந்தை மனிதர்கள் - டூம்

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு ரமதான் மாதம் காலை வேளையில், அவசர அவசரமாக என் அலுவலக அறைக்குள் வந்து கதவை சாத்தினான் டூம் - டுனிஷியா நாட்டினன், இயற்பெயர் எனக்கு தெரியாது. ஏனெனில் அனைவரும் அவனை டூம் என்றே அழைப்போம்.

தனது துப்புரவு கருவிகளை ஒரு ஒரமாக வைத்து விட்டு என் அருகில் வந்து காலை வணக்கம் கூறிவிட்டு அலமாரிக்கு அருகில் மறைவாக நின்றுக்கொண்டு தான் அணிந்திருந்த வேலை அங்கியின் பாக்கெட்டிலிருந்து குருவாசென் (croissant) என்ற காலை உணவு ரொட்டியை அவசரமாக எடுத்து கடிக்க தொடங்கினான்.

அவ்வப்போது வாசலை நோக்கி பதட்டத்துடன் பார்த்துக்கொண்டான்.

நான் என்னிடமிருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை அவனுக்கு நீட்டி விட்டு, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் நன்றாக பழக்கமாகி யிருந்தது. ஆனால் அவனுக்கோ, முதல் நாளில் இருந்த பதட்டம் இன்று வரையில் அப்படியே இருக்கிறது.

இரண்டு மூன்று குருவாசென்களை (croissant) சாப்பிட்டு விட்டு, பாதி பாட்டில் நீரையும் குடித்து விட்டு, பதட்டம் தணிந்தவனாக என் அருகில் வந்தவன்,

"நான் தினமும் இங்கு வருவதால் உன் வேலைகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுகிறதா?" என்றான்.

நான், "இல்லை!" என்று சொல்லி முடிப்பதற்குள்,

"இங்கு நடந்ததை யாரிடமும் கூறிவிடாதே!" என்று வழக்கம்போல் கெஞ்சலுடன் சொல்லிவிட்டு, கதவைத் திறந்து தனது துப்புரவு பணியிணை கவனிக்க தொடங்கினான்.

தினமும் இதே கதைதான் சில நாட்கள் மதியவேளைகளிலும் 'சாண்ட்விச்'
உடன் ஆஜராகிவிடுவான்.

எங்கள் அலுவலக உணவகத்தின் சீப் குக் (chief cook) மொரொக்கோ நாட்டை சேர்ந்தவன். மாலை வேளைகளில் உணவக நிர்வாகம் முழுவதும் அவன் கையில் தான். அதனால் ரமதான் மாதத்தின் மாலை நேரத்தில் நோன்பு திறக்க அனைத்து ஏற்பாடும் அங்கு செய்து வைக்கப்படும்.

பேரீச்சம்பழம், தண்ணீர் என்றும், நோன்பு துறந்தவுடன் சூடான சூப், பிறகு சாப்பாடு என்றும் அனைத்திற்கும் அவனே பொறுப்பேற்றுக்கொள்வான்.

தவிர அந்த நேரம் மற்றவர்களின் உணவு நேரம் இல்லை என்ற படியால் சொற்பொழிவு கூட சில சமயம் நடக்கும் ஆக மொத்தம் அந்த இடமே சின்ன மசூதி போல காட்சி அளிக்கும்.


அன்றைய தினம், "ஐய்யா நான் களைச்சிட்டேன் எனக்கு புத்துணர்வு கொடு" என்று மூளை கதறிய பிறகுதான் மணியை பார்த்தேன் ஆறை தாண்டியிருந்தது. வழக்கமாய் நாலு நாலறைக்கு குடிக்கும் காப்பியும், அடிக்கும் தம்மும் வேலை மும்முரத்தில் மறந்து போயிருந்தன. சரி யென்று, உணவகத்த்தை ஒட்டி உள்ள காபி மெஷினை நோக்கி நடந்தேன்.

காபியை எடுத்துக்கொண்டு திரும்பியவனை உணகத்திலிருந்த வந்த சப்தமான குரல்கள் தடுத்து நிறுத்தியது.

என்னதான் நோன்பு துறக்கும் நேரமேயானாலும், இந்த சப்தங்கள் அசாதாரணமாக மனதிற்கு பட்டது.

ஓங்கி ஒலித்த குரல்களில் டூமின் குரலும் ஒன்றாக இருந்ததால், உணவகத்தை நோக்கி என் பார்வை அனிச்சையாக திரும்பியது.

ஒரு பையன் தலை குனிந்தபடியே நின்றிருக்க அவனை மூன்று நான்கு பேர்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்.அப்படி ஆக்ரோஷப்பட்டவர்களில் டூம் முதன்மையானவனாக தெரிந்தான்.

அவர்கள் அரபு மொழியில் கத்திக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது பிரெஞ்சு மொழியையும் உபயோகப்படுத்தியதால் என்னால் நடந்ததை ஓரளவு ஊகிக்க முடிந்தது என்றாலும், அங்கிருந்த ஒரு அரபுக்காரனிடம் கேட்டு விஷயத்தை நிச்சயப்படுத்திக்கொண்டேன்.


மேட்டர் இதுதான் :

படித்துக்கொண்டே, விடுமுறையில் வேலை பார்க்கும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த அந்த அரபு பையன், நோன்பை கடவுளுக்கு பயந்து முழுமையாக எடுக்காமல், நோன்பு துறப்பதற்கு 2 மணி நேரம் முன்னரே, பசி தாங்காமல் ஒரு பழத்தை திண்ண, அந்த நேரம் பார்த்து அந்தப்பக்கம் வந்த, 'மார்க்க பெரியவர்' என்று எங்கள் அலுவலகத்து முஸ்லீம்களால் அழைக்கப்படும் டூம் என்றவர், அவனை கையும் களவுமாக பிடித்து, சபைக்கு இழுத்து சென்று, தானும் கண்டித்து, மற்றவர்களையும் கண்டிக்க வைத்து தன்னுடைய இறைவனுக்கு நன்றி விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.




டிஸ்கி : அன்றிலிருந்து எனது அலுவலக அறைக்கதவு உட்பக்கமாக சாவி போட்டு பூட்டப்பட்டது. தட்டி அனுமதி கேட்ட டூம் விற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சனி, ஜூன் 05, 2010

சபாஷ் சந்தன முல்லை !





எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே பதிவுலகை எட்டிப்பார்ப்பதற்கு எனது வேலைப்பளு என்னை அனுமதிக்கிறது.
அப்படிஒரு இடைவேளைக்கு பின் வந்து பலரது இடுகைகளை படிக்கையில், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இறுதியாக வினவு பதிவின் மூலம் நடந்ததை அறிய முடிந்தது.
கூடவே ஆணாதிக்க திமிர் அடங்கிய, ஆபாசமும் அருவருப்பும் மண்டிய, நாத்தம் புடிச்ச பூக்காரி புனைவை படிக்கவும் நேர்ந்த்தது. .



ஆணாதிக்க வெறி பிடித்த பதிவர் நர்சிம்மிற்கும், அருவறுப்பு புண்ணோட்ட மிட்ட கார்க்கிக்கும், கும்மியடித்து கொண்டாட்டம் போட்ட மற்றோருக்கும் எனது கடுமையான கண்டனங்கள்



பதிவர் சந்தனமுல்லைக்கு, உள்ள உறுதிக்கும், தெளிவான நோக்கிற்கும், தீர்வு நோக்கி போராடும் மனத்திண்மைக்கும் ஒரு ராயல் சல்யூட்!



HAT''S OFF TO YOU !



தனக்கு சம்பந்தமில்லாத விஷயமிது என்று தள்ளி நின்று பார்க்காமல் துணிந்து தோள் கொடுத்த வினவு தோழர்களுக்கு ஒரு வீர வணக்கம்!


இப்போது லேட்டஸ்டாக மருத்துவர் புருனோ, பாதிக்கப்பட்ட பதிவரை இன்னமும் ஆபாச வார்த்தைகளால் குதறியிருப்பது தெரிய வருகின்றது
அவருக்கும் எனது கடுமையான கண்டனங்கள்



வெள்ளி, ஏப்ரல் 23, 2010

"வயசானவன்னு கூட பார்க்காம........ "என்ற வசனத்தை தனக்கு மட்டுமே எழுதிக்கொள்ளக்கூடாது கலைஞர் அவர்களே!



மிகுந்த பணிச் சுமையின் காரணமாக இணைய உலகிற்கு படிப்பதற்கு மட்டுமே சில சமயம் வர முடிகிறது. கருத்தை எழுத கூட நேரம் இருப்பது இல்லை.

இடையில் எவ்வளவோ சம்பவங்கள் நம்மை சுற்றி நடந்து முடிந்து விட்டன.

கலைஞருக்கு சினிமா கலைஞர்களின் பாராட்டு விழா, அதில் அஜீத்தின் துணிகர பேச்சு, அதற்கு ரஜினியின் வெளிப்படையான ஆதரவு, அதன் பின்வினைகள், பிறகு மன்னிப்பு காண்டம் என்ற கூத்துகள் ஒரு புறம்

நித்தியானந்தரின் ரஞ்சிதாவுடனான நித்தியானந்தம், அதில் சன் டீவியின் அத்து மீறல், சன் டீவி, நக்கிரனின் பிட்டு படம் போன்ற ஆபாசங்கள் ஒரு புறம்

இவைகளைப்பற்றி என் மனதில் அவ்வப்போது எழுந்த எண்ணங்களை,  இணையத்தில் பகிர்ந்து கொள்ள இயலாமல் போனதால் யாருக்கும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை.

ஆனால் சமீபத்தில் ஒரு மூதாட்டியார், மருத்துவ சிகிச்சைக்காக முறையான ஆவணங்களோடு வந்தும்,
'வந்தாரை வாழ வைக்கும் சிங்கார தமிழக'த்தின் தலைநகரத்தில் விமானத்தை விட்டு  இறங்க கூட அனுமதிக்கப்படாமல்,
சில மணி நேரங்கள்அலைக்கழிக்கப்பட்டு, திரும்ப நாடு கடத்தப்பட்டாரே,

இதற்கு கூட ஒரு நாலு வரியில் என் கண்டனத்தை பதிவு செய்யாவிடில் நான் மனிதனாக இருப்பதற்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என்பதாலேயே இந்த பதிவு.

 நடந்தது, மன்னிக்க முடியாத தவறு என்பதை காங்கிரஸ்காரனையும் அதிமுககாரனையும் தவிர அனைவராலுமே ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால் காரணம் நான் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல, செய்தவனுக்கு தைரியம் இல்லை. அடுத்தவனை  சுட்டிக் காட்டியே வழமைப் போல் அரசியல் செய்கின்றனர்.

ஆனால், எப்படி பார்த்தாலும், சம்பவம் நடந்த சமயம் ஆட்சிக்கட்டிலில் வீற்றிருப்பவர்தான் தார்மீகமாயினும் பொறுப்பேற்றாக வேண்டும் என்று சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.


ஆனல் இவரோ தனக்கு நடந்தது ஒன்றுமே தெரியாது என்று கூறுகிறார்.

ஆனால் இவரின் அதிகாரத்தின் கீழ் பணியாற்றும் காவல் துறையோ, அன்றைய தினம் விமான நிலையதையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது, நல்ல முரண்பாடு.

ஒரு வேளை இவர் சொல்வது உண்மையாகவே இருந்து, இவரின் கட்டுப்பாட்டிலே மாநில நிர்வாகம் இல்லையென்றால், 'ஐயோ பாவம்' அப்போதே ஞானி சொன்னதைக் கேட்டிருக்கலாம்.  ஓய்வு எடுக்க போயிருக்கலாம்.

ஞானி, அப்படி சொன்னபோது அவரின் சட்டைக்குள் பூணூலைத் தேடிய கழக குஞ்சுகள் இப்போது எங்கே காணாமல் போய்விட்டார்கள் ?



ஏன் என்னிடம்  சொல்லி விட்டு வரவில்லை? என்று கேட்கிறார்.

ஏன் உம்மிடம் சொல்ல வேண்டும்?
அவர் என்ன உமது காசில்லா வைத்தியம் செய்துக்கொள்ள வந்தார்,
உம்மிடம்  அனுமதி கேட்டு வருவதற்கு !

இந்தியாவில் நுழைய தங்குவதற்கு விஸா தேவை. அதை முறையாக இந்தியதூதரகத்தில் பெற்றாயிற்று, அப்புறம் என்ன?



எனக்கு எதுவும்  தெரியாது. எல்லாம் 2002ல் ஜெயலலிதா எழுதிய குறிப்புதான் காரணம் என்று வெக்கமில்லாமல் சொல்கிறார்.

அந்த குறிப்பு என்ன, நாம் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் எழுதிய ஓலைக்குறிப்பா, அதை கண்ணில் ஒற்றி நிறைவேற்றுவதற்கு !

அரசு ஊழியர்களுக்கு எதிரான அவரது அரசு உத்தரவை உம்மால் எப்படி மாற்ற முடிந்தது?

சன் டீவியை பாதிக்கும் அரசு கேபிள் டீவி உத்தரவை உம்மால் எப்படி நிறுத்திவைக்க முடிந்தது?

அஞ்சா நெஞ்சனின் தினகரன் வழக்கு, தா.கிருஷ்னன் கொலை வழக்கு மேம்பால ஊழல் வழக்குகளை எப்படி அய்யா உம் இஷ்டம் போல வளைக்க முடிந்தது.

பிறகு ஏனய்யா இந்த குறிப்பை மட்டும் உம்மால் மாற்ற இயலவில்லை !


ஜெயலலிதா ஒன்றும் தமிழர்களுக்காவே வாழும் தமிழ்த்தாய் என்று நீர் உள்பட யாருமே எதிர்பார்த்ததில்லை.

அவரும் தேர்தல் நேரம் தவிர அப்படி ஒன்றும் சொல்லி உம்மைப் போல் பிலிம் காட்டுவதில்லை.

தவிர, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது.

அதை ஒரு சாக்காக சொல்கிறாயே  உமக்கே உம்மைப் பார்த்தால் சிரிப்பாக இல்லை!



சரி மத்திய அரசுக்கு அவர் எழுதிய குறிப்பு -  மத்திய அரசால் ஏற்றுகொள்ளப்பட்ட குறிப்பு - பிறகு மாற்றவே முடியாத குறிப்பு


அந்த குறிப்பு அவரால் எழுதப்பட்டபோது மத்திய அரசில் யார் இருந்தது?

வாஜ்பாயி தலைமையில் இருந்த அந்த மத்திய அரசில், மாறன், டி ஆர் பாலு என்று உமது அமைச்சர்கள் தானே கோலோச்சிக்கொண்டிருந்தனர்.
பின் எப்படி அந்த குறிப்பை ஏற்றுக்கொள்ள அனுமதித்தீர்.

அது எந்த காலகட்டம் என்று மறந்து விட்டதா அய்யா ?

பார்த்தோர் நெஞ்சங்களை பதற வைத்த, கேட்டோர் மனங்களை கதற வைத்த,   சன் டீவியின் சீரிய இயக்கத்தில் உருவான, தங்களின், 'ஐயோ காப்பாத்துங்க... காப்பாத்துங்க....' என்ற புகழ் பெற்ற, வசனம் படைக்கப்பட்ட காலம் தான் அது.

மாறன் மற்றும் டி ஆர் பாலு , மத்திய மந்திரிகள் என்ற கோதாவில் போலீஸ் அதிகாரிகளோடு எல்லாம் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டாங்களே,

அப்புறம் வாஜ்பாயி கிட்டே அழுவாஞ்சி புகார் கொடுத்து ஜெ அரசை டிஸ்மிஸ் செய்ய சொன்னாங்களே.

வாஜ்பாயும் மாநில அரசை விளக்கம் எல்லாம் கேட்டாரே


இப்போது ஞாபகம் வருகிறதா அய்யா

கடைசியாய் ஒரு வார்த்தை

"வயசானவன்னு கூட பார்க்காம........ "  என்ற வசனத்தை தனக்கு மட்டுமே எழுதிக்கொள்ளக்கூடாது கலைஞர் அவர்களே!

செவ்வாய், பிப்ரவரி 09, 2010

தமிழ் இனி மெல்ல சாகும் - பாரதி; கொல்லாமல் விடமாட்டோம் - தமிழக தமிழர்கள்

நேற்று கடைத்தெருவில் எதேச்சையாக காதில் விழுந்த இரு நண்பர்களின் உரையாடல். வெளி நாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்த ஒருவர் , தனது பால்ய நண்பனை சந்தித்திருக்கிறார் என்பது அவர்களின் உரையாடலின் மூலம் எனக்கு புரிந்தது.

அவர்கள் உரையாடலில் காதில் விழுந்த ஒரு பகுதி கீழே :
ஹேய் ஹவ் ஆர் யூ?
ஃபைன் நல்லாயிருக்கேன்பா

பாரின்லேர்ந்து எப்ப ரிட்டர்ன் ஆன?
 2 நாள் ஆச்சி

ஹேவ் யு சம் காஃபி?)
வேணாம்பா தேங்ஸ்

ஓகே பா டைம் ஆச்சி
 நாளைக்கு டெபனெட்டா நைட் டின்னருக்கு மீட் பண்ணுவோம்
கண்டிப்பா மீட் பண்ணுவோம்

பீச் ரெஸ்டாரண்ட்ல எய்ட் ஒ கிளாக்குக்கு ஷார்ப்பா வந்துடு
சரிப்பா

நான் வர லேட் ஆனாலும் வெயிட் பண்ணூ
கண்டிப்பா

பை!
பை!

சிகப்பில் இருப்பவை தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் பேசியது, கருப்பில் இருப்பவை 'ஃபாரின் ரிட்டர்ன்' பேசியது

இதில் உள் நாட்டுக்காரரை விட வெளி நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்  நிறைய தமிழ் சொற்களை உபயோகித்தார்.

முதலாமரும் தமிழ்தான் பேசினார் உள் நாட்டு நண்பரை சந்தித்திருந்தாலும் அப்படிதான் பேசியிருப்பார் ஏனெனி்ல்  அவரைப்பொறுத்தவரை அது தான் தமிழ்.

பேச்சு தமிழ்தான் எவ்வளவு வேகமாக மாறுகிறது. அன்றைய தமிழுக்கும், இன்றைய தமிழுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.

எங்களோட சின்ன வயசிலே அம்மாகிட்ட, 'இன்னைக்கி என்ன 'காலை சாப்பாடு'னு கேட்போம். அதையே எழுதும்போது, 'காலை உணவு' னு எழுதுவோம்.

இப்பல்லாம் பார்த்தீங்கன்னா, 'காலை சாப்பாடு' என்ற வார்த்தையே யாரும் பயன் படுத்தற மாதிரி தெரியல.

மம்மி, இன்னைக்கி என்ன டிபன்?

மம்மி, டுவல் ஓ கிளாக்குகெல்லாம் லன்ச் அனுப்பிடு.

மம்மி, ஈவ்னிங் டின்னருக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.

உணவு விடுதியில் கூட 'காலை உணவு தயார்', 'மதிய சாப்பாடு தயார்' என்று அறிவிப்பு பலகையில் எழுதுவது போய்  'டிபன் ரெடி', 'லன்ச் ரெடி' னு எழுத ஆரம்பிச்சிட்டாங்க.

இப்படித்தான் தமிழ் மொழி, கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டே வருது அதாவது  தங்கலிஷ் மொழியா.

இந்த தங்கிலீஷ் மொழி வேகமா வளர்வதிலே, நம்ம   தொலைக்காட்சிங்க   பங்கு மிக மிக அதிகம். அதிலும் தொலைக்காட்சியில் சினிமாகாரங்க பேட்டினா சொல்லவே வேண்டாம்.

ஆன் த ஸ்பாட், பை த வே, பை தி பை, டயலாக் டெலிவரி, கெமிஸ்ட்ரி, பாடி லாங்குவேஜ், டரியல், பாண்டஸீ என்று 9௦% ஆங்கில கலப்போட நம்ம வீட்டு கூடத்திலே வந்து தங்கிலீஷ் பேசுறாங்க.

அதைப் பார்க்கிற நம்ம ஆளுங்களுக்கு இப்படி தங்கலீஷ் பேசினாதான் நாகரீகம்னு நினைச்சிக்கிட்டு அப்படியே பேச ஆரம்பிச்சி பழகிடுறாங்க

இப்படித்தான் பார்த்திங்கன்னா, போன வாரம், எங்க ஊரில மளிகைகடை வச்சியிருக்கிற தங்கவேலு அண்ணனை டவுன்பக்கம் பார்த்தேன்.

தங்கவேலண்ணே எங்க இந்த பக்கம்னு கேட்டா, அது சொல்லுது, "பொண்ணுக்கு கெமிஸ்ட்ரி பார்க்க வந்தேன்"னு. "எந்த கிளாஸ் படிக்குதுண்ணே அதோ, எதிர்த்தாப்பலே ஒரு புத்தக கடையிருக்கு வாங்க போய் பார்க்கலாம்"னா,

"அட போப்பா, பொண்ணுக்கு அலையன்ஸ் செய்யலாம்னு பையன் ஜாதகமும் பொண்ணு ஜாதகமும் எடுத்துகிட்டு  கெமிஸ்ட்ரி பார்க்க ஜோசியரை தேடி வந்தா நீ பாட்டுக்கு புத்தகம் அது இதுன்னு  முட்டள்தனமா பேசுறியே"னுட்டு என்னய ஒரு அல்ப புழுவைப் பார்க்கிற மாதிரி பார்த்திட்டு போயிடுச்சி.

இப்படி தான்  எல்லோருமே நமக்கு நல்லா தெரிஞ்ச தமிழ் வார்த்தையை கூட அன்னிய மொழி வார்த்தையாலே அழிச்சிட்டு அது தான் நாகரீகம்னு நினைச்சுக்கிறோம்.

இப்ப சமீபத்தில கூட மீடியா மூலமா எல்லார் வாயிலும் புகுந்து புறப்படுற ஒரு வார்த்தை 'காமன் மேன்'. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டிங்கனா,  பொது மனிதன், பொதுசனம், சாமான்யன், சராசரி மனிதன்  அப்படினு சொல்லலாம்.

'அட அதான் இத்தனை வார்த்தைங்க தமிழ்லே இருக்கே அப்புறம்  ஏன்  காமன்  மேன்னு சொல்லணும்'னு நீங்க கேட்டா, உங்களுக்கு  நாகரீகம்  தெரியலேனு சொல்லி ஒதுக்கி வச்சிட்டு போய்டுவானுங்க. அப்புறம் நீங்க ஒரு காமன் மேனாவே ஊருக்குள்ள நடமாடமுடியாது, ஆமாம்.

இது மாதிரி தான் நாம அன்னிய மொழி வார்த்தைகளை உருவி உருவி தமிழ் மொழியிலே சொருகிகிட்டு இருக்கோம். இன்னும் எத்தனையெத்தனை தமிழ் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளுக்கு பலியிடபோறோமோ தெரியல.

இப்படியே தொடர்ந்து போய்க்கிட்டிருந்தா நாளடைவில் நமது  தாய்மொழியான தமிழானது, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற அன்னிய மொழி சொற்களையே சார்ந்து, தனது தனித்துவ சொற்களேயில்லமால்  அழிந்து விட வேண்டியதுதான்

இதைத்தான் பாரதி 'தமிழ் இனி மெல்ல சாகும்' னு அன்றே சொன்னானோ?!

ஞாயிறு, ஜனவரி 10, 2010

நாளைய செய்திகள் - சுறா படம் இணையத்தில் வெளியாகியது

சுறா படம் இணையத்தில் வெளியாகியது - கோடம்பாக்கம் அதிர்ந்தது



இளைய தளபதி விஜயின் 50 வது படமாக சங்கிலி முருகன் தயாரிப்பில் உருவாகி, பின் சன் பிக்சர்ஸின் படமான சுறாவின் படப்பிடிப்பு இறுதி கட்ட நிலையில் உள்ளது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இன்று இணைய தளங்களில் முழு படமும் வெளியாகி கோலிவுட்டை அதிர வைத்தது.

இணையத்தில் சுறா படம் வெளியானது பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் முதல்வரிடம் முறையிட்டார்.

முதல்வரின் உத்தரவின்பேரில், டிவிடி விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
படம், பாடல்கள் இசை எடிட்டிங் என்று ஏறக்குறைய எல்லாமே முடிவடைந்து விட்டாலும் விஜய் சொல்ல வேண்டிய 'டேஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என்ற ஒற்றை சொல் நீண்ட வசனம் படத்தில் சேர்க்க வேண்டியிருப்பதால் இன்னும் 1 மாதம் கழித்துதான் ரிலீஸ் செய்வதாக இருந்தோம். அதற்கிடையில் இணையத்தில் வெளியாகி விட்டதே என்று அந்த படத்தின் இயக்குனர் நிருபர்களிடம் மிகவும் வருத்தமாக கூறினார்.

சுறா படம் இணையத்தில் திருட்டு விசிடி- திரைத்துறையினர் கண்டனக்கூட்டம்

சுறா படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களின் அழைப்பின் பேரில் திரைப்படத்துறையினர் பங்கு கொண்ட கண்டனக்கூட்டத்தில்

திரு எஸ்.ஏ.எஸ், படத்தின் காப்பி இணையத்தில் வெளியானதுமே தம்பி விஜய்க்கு அறிவித்து விட்டு உடனே முதல்வருக்கும் தெரிவித்து விட்டேன், "உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் இதைவிட எனக்கு என்ன முக்கிய வேலை" என்று கூறி உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு இட்ட முதல்வருக்கு நன்றி என்று பேசினார்


டைரக்டர் சேரன் :



“நடிகர்கள் மாவட்டம் தோறும் தங்கள் ரசிகர்களில் நூறு பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை படிப்பு, தொழில், பிழைப்பு என்று எதையும் செய்யவிடாமல், மாதம் மாதம் கொஞ்சம் பணம் கொடுத்து, திருட்டு விசிடியை ஒழிப்பதற்கென்றே நியமிக்க வேண்டும்.

அவுங்க எல்லாரும் சேர்ந்து திருட்டு விசிடி எடுக்கிறவங்களை அருவாளை எடுத்திட்டு போயி வெட்டணும்.

இணைய தொடர்பு உள்ள கணிணி வச்சியிருந்தாலே அடிச்சி நொறுக்கணும்.

இண்டர்நெட்னு சொல்றவன் பல்லையெல்லாம் ஒடைக்கணும்


'மக்கள நாம நடிச்சி கொல்லணும் அவனுங்க அடிச்சி கொல்லணும்'

இப்படி செஞ்சாலே திருட்டு விசிடி தொல்லை ஒழிஞ்சி நாம நிம்மதியா இருக்கலாம்" என்றார்.

கமலஹாஸன் பேசியதாவது :

"நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அன்றைய முதல்வர் காமராஜரிடம் போய் அழுதுகொண்டே சொன்னேன். அவனை உள்ளே பிடித்துப்போட்டார். அடுத்த நாளே அந்த திருடன் வெளியே வந்துவிட்டான். உண்மையிலேயே வி.சி.டி. திருடர்களை திருத்த முடியாது.

திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் அல்கொய்தாவின் நேரடி வங்கி கணக்கிற்கு போகிறது அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதையெல்லாம் நாம் அமெரிக்காவுக்கு, சிஐஏ வுக்கு எடுத்து சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேச துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்" என்று கமல் கூறினார்


ரஜினி பேசியதாவது :

சுறா படம் முதலில் நான் நடிப்பதாக இருந்தது. `REQUIN' என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை இயக்குனர் கொண்டுவந்து கொடுத்தார். சுறா என்ற டைட்டில் கொடுத்து பார்த்தபோது, பிரமாதமாக இருந்தது.

சுறா... எறா... புறா... என்று பத்து பதினைந்து பஞ்ச் டயலாக் அள்ளி உடலாம். இயக்குனரும் சொன்னார், நீங்க பஞ்ச் டயலாக் சீன்களில் மட்டும் நடிச்சி கொடுங்க. மத்த சீன்களிலெல்லாம் கிராபிக்ஸ் மூலம் உங்க தலையை கிராபிக்ஸில் ஒட்ட வச்சிடலாம், படம் நீங்க நடிச்ச மாதிரியே வந்திடும்னு.

நானும் ஒத்துக்கிட்டேன். ஆனா படத்தில என் தலையை சரியா ஒட்டவைக்க முடியலை, பொருந்தலை. ஏதோ ஒன்று தடுக்கிறது என்று வேண்டாம் என விட்டுவிட்டேன்.

நீண்டநாட்கள் கழித்து விஜய்யை வைத்து, சுறா படத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சொன்னார். எனக்குத்தான் அந்த படம் ஆகவில்லை. விஜய்க்கு சரியாக இருக்கும் என்று கருதினேன். ஏன்னா பீல்டுலே எனக்கு அப்புறம் அதிகமா வலிக்காம பஞ்ச் வசனம் பேசுறது விஜய்ங்கிறதால ஒத்து வரும்ணு நினைச்சேன்.

சன் பிக்ஸர்ஸிடம் போய் மாட்டிக்கொண்டதால் விஜயும், விஜயை வைத்து எடுத்ததற்காக இயக்குனரும் கவலைப்பட வேண்டாம்.
நிச்சயமாக படம் ஓடும் இல்லாவிட்டால் சன் டிவியால் ஓட வைக்கப்படும். படம் ரிலீஸான 2ம் நாளே விஜய் தன் தந்தையை அழைச்சிட்டு போய் கலாநிதி மாறனுக்கு சால்வை போர்த்தி நன்றி சொல்லலாம் என்று ரஜினி பேசினார்

திருட்டு விசிடி சட்டம் கடுமையாக்கினார் முதல்வர்

திரைப்படங்களில் ஒளி நாடா மற்றும் சிடிக்களை திருட்டுத்தனமாக தயாரிப்பாளர் வைத்திருப்பவர் விற்பவர், , அந்த ஏரியாவில் குடியிருப்பவர், பொட்டிக்கடை வைத்திருப்பவர், பிச்சை எடுப்பவர் அனைவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி குறைந்தபட்சம் ஆறு வருட சிறை தண்டனை கிடைக்க அரசின் சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் வெளி நாட்டு படங்களைத் திருடி தமிழ்படம் எடுக்கும் திரைப்படத்துறையினருக்கு வழக்கம்போல் கேளிக்கை வரி ரத்து செய்வதோடு விருதுகளுக்கு பரிந்துரைக்கும்போது சிறப்பு சலுகையாய் முன்னுரிமை கொடுக்க கவனத்தில் கொள்ளப்படும்

இந்த சட்டப்பிரிவுகளை மேலும் தீவிரமாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பும்.

திருட்டு விசிடியை ஒழித்த முதல்வருக்கு திரையுலகம் பாராட்டு விழா!

இன்று திரைப்படத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரையுலகம் செழிப்படையவும் திரையுலகை திருட்டு வி.சி.டி. மூலம் சுரண்டி வாழ்ந்து கொண்டிருந்த கும்பலை கூண்டோடு ஒழிக்கும் விதமாக திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களையும், வைத்திருப்பவர்களையும் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கவும் சட்டம் இயற்றி திரையுலகை வாழ வைத்திருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இன்று தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் மற்றும் ஏனைய பிரிவினரும் கலந்து கொண்டு முதல்வரை வாயார வானுயர புகழ்ந்து தள்ளி, ஆளுக்கொரு பட்டம் கொடுத்துச்சென்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் 'திருட்டு விசிடி வென்ற திருக்குவளையார்' என்ற விருது அனைத்து திரைப்படத்துறையினர்களின் சார்பில் முதல்வருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



டிஸ்கி: இது ச்ச்சும்மா ஒரு தமாஷுக்கு. யாரையும் புண்படுத்த அல்ல.
ஆனாலும் உணர்ச்சிவசப்படும் விஜய் கமல் ரஜினி சேரன் சன் ரசிகர்களுக்கும், கலைஞரின் தொண்டர்களுக்கும் சொல்லி கொள்ள விரும்புவது COOL......

சனி, ஜனவரி 02, 2010

2010 - ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாசகர்கள் (ஏம்பா, நிஜமாவே அப்படி யாராச்சும் இருக்கீங்க), பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய, இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.














டிஸ்கி : ஸ்..ஸ். அப்பாடா ஒரு வழியா பதிவு கணக்கில ஒண்ணை கூட்டியாச்சு