இன்று ஒரு குறள் !

செவ்வாய், ஜூலை 13, 2010

விந்தை மனிதர்கள் - டூம்

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு ரமதான் மாதம் காலை வேளையில், அவசர அவசரமாக என் அலுவலக அறைக்குள் வந்து கதவை சாத்தினான் டூம் - டுனிஷியா நாட்டினன், இயற்பெயர் எனக்கு தெரியாது. ஏனெனில் அனைவரும் அவனை டூம் என்றே அழைப்போம்.

தனது துப்புரவு கருவிகளை ஒரு ஒரமாக வைத்து விட்டு என் அருகில் வந்து காலை வணக்கம் கூறிவிட்டு அலமாரிக்கு அருகில் மறைவாக நின்றுக்கொண்டு தான் அணிந்திருந்த வேலை அங்கியின் பாக்கெட்டிலிருந்து குருவாசென் (croissant) என்ற காலை உணவு ரொட்டியை அவசரமாக எடுத்து கடிக்க தொடங்கினான்.

அவ்வப்போது வாசலை நோக்கி பதட்டத்துடன் பார்த்துக்கொண்டான்.

நான் என்னிடமிருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை அவனுக்கு நீட்டி விட்டு, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் நன்றாக பழக்கமாகி யிருந்தது. ஆனால் அவனுக்கோ, முதல் நாளில் இருந்த பதட்டம் இன்று வரையில் அப்படியே இருக்கிறது.

இரண்டு மூன்று குருவாசென்களை (croissant) சாப்பிட்டு விட்டு, பாதி பாட்டில் நீரையும் குடித்து விட்டு, பதட்டம் தணிந்தவனாக என் அருகில் வந்தவன்,

"நான் தினமும் இங்கு வருவதால் உன் வேலைகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுகிறதா?" என்றான்.

நான், "இல்லை!" என்று சொல்லி முடிப்பதற்குள்,

"இங்கு நடந்ததை யாரிடமும் கூறிவிடாதே!" என்று வழக்கம்போல் கெஞ்சலுடன் சொல்லிவிட்டு, கதவைத் திறந்து தனது துப்புரவு பணியிணை கவனிக்க தொடங்கினான்.

தினமும் இதே கதைதான் சில நாட்கள் மதியவேளைகளிலும் 'சாண்ட்விச்'
உடன் ஆஜராகிவிடுவான்.

எங்கள் அலுவலக உணவகத்தின் சீப் குக் (chief cook) மொரொக்கோ நாட்டை சேர்ந்தவன். மாலை வேளைகளில் உணவக நிர்வாகம் முழுவதும் அவன் கையில் தான். அதனால் ரமதான் மாதத்தின் மாலை நேரத்தில் நோன்பு திறக்க அனைத்து ஏற்பாடும் அங்கு செய்து வைக்கப்படும்.

பேரீச்சம்பழம், தண்ணீர் என்றும், நோன்பு துறந்தவுடன் சூடான சூப், பிறகு சாப்பாடு என்றும் அனைத்திற்கும் அவனே பொறுப்பேற்றுக்கொள்வான்.

தவிர அந்த நேரம் மற்றவர்களின் உணவு நேரம் இல்லை என்ற படியால் சொற்பொழிவு கூட சில சமயம் நடக்கும் ஆக மொத்தம் அந்த இடமே சின்ன மசூதி போல காட்சி அளிக்கும்.


அன்றைய தினம், "ஐய்யா நான் களைச்சிட்டேன் எனக்கு புத்துணர்வு கொடு" என்று மூளை கதறிய பிறகுதான் மணியை பார்த்தேன் ஆறை தாண்டியிருந்தது. வழக்கமாய் நாலு நாலறைக்கு குடிக்கும் காப்பியும், அடிக்கும் தம்மும் வேலை மும்முரத்தில் மறந்து போயிருந்தன. சரி யென்று, உணவகத்த்தை ஒட்டி உள்ள காபி மெஷினை நோக்கி நடந்தேன்.

காபியை எடுத்துக்கொண்டு திரும்பியவனை உணகத்திலிருந்த வந்த சப்தமான குரல்கள் தடுத்து நிறுத்தியது.

என்னதான் நோன்பு துறக்கும் நேரமேயானாலும், இந்த சப்தங்கள் அசாதாரணமாக மனதிற்கு பட்டது.

ஓங்கி ஒலித்த குரல்களில் டூமின் குரலும் ஒன்றாக இருந்ததால், உணவகத்தை நோக்கி என் பார்வை அனிச்சையாக திரும்பியது.

ஒரு பையன் தலை குனிந்தபடியே நின்றிருக்க அவனை மூன்று நான்கு பேர்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்.அப்படி ஆக்ரோஷப்பட்டவர்களில் டூம் முதன்மையானவனாக தெரிந்தான்.

அவர்கள் அரபு மொழியில் கத்திக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது பிரெஞ்சு மொழியையும் உபயோகப்படுத்தியதால் என்னால் நடந்ததை ஓரளவு ஊகிக்க முடிந்தது என்றாலும், அங்கிருந்த ஒரு அரபுக்காரனிடம் கேட்டு விஷயத்தை நிச்சயப்படுத்திக்கொண்டேன்.


மேட்டர் இதுதான் :

படித்துக்கொண்டே, விடுமுறையில் வேலை பார்க்கும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த அந்த அரபு பையன், நோன்பை கடவுளுக்கு பயந்து முழுமையாக எடுக்காமல், நோன்பு துறப்பதற்கு 2 மணி நேரம் முன்னரே, பசி தாங்காமல் ஒரு பழத்தை திண்ண, அந்த நேரம் பார்த்து அந்தப்பக்கம் வந்த, 'மார்க்க பெரியவர்' என்று எங்கள் அலுவலகத்து முஸ்லீம்களால் அழைக்கப்படும் டூம் என்றவர், அவனை கையும் களவுமாக பிடித்து, சபைக்கு இழுத்து சென்று, தானும் கண்டித்து, மற்றவர்களையும் கண்டிக்க வைத்து தன்னுடைய இறைவனுக்கு நன்றி விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.




டிஸ்கி : அன்றிலிருந்து எனது அலுவலக அறைக்கதவு உட்பக்கமாக சாவி போட்டு பூட்டப்பட்டது. தட்டி அனுமதி கேட்ட டூம் விற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

4 கருத்துகள்:

  1. பாவ‌ம்!!
    யாரை என்று கேட்கிறீர்க‌ளா? அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வடுவூர் குமார்!

    அவரவர் விருப்பம் அவரவருக்கு என்று அனைவரும் நினைத்து விட்டாலே
    இந்த உலத்தில் பாதி பிரச்சினை காணாமப் போய்டுமே சார்.

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு நிறைய உண்மை விசயங்கள் எல்லாம் இப்போ தெரிந்திருக்குமே! இது தான் யதார்த்தம்.
    எனக்கு தெரிந்த துருக்கி நாட்டவர் ஒருவன் இருந்தான். அவன் வெளிப்படையாகவே சொல்வான் ரமதான் பிடிப்பதில்லை என்று. இது நேர்மை. அவர்களை பொறுத்தவரை இது துணிச்சலும்.
    தமிழ்நாட்டு இஸ்லாமியர்களை கேட்க வேண்டுமே! என்னமாய் பில்ட்டப் கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  4. அப்படியே அவன் நேர்மையாக இருந்திட்டாலும்???!!!

    சுற்றி இருக்கும் சமூகத்தின் அங்கீகரித்தலுக்காகவே பலரும் வாழ வேண்டியுள்ளது நண்பரே!
    அதிலும் இதில் வரும் டூம் தன்னை அப்பழக்கற்ற மதவாதியா காட்டிக்கொள்ள அடிச்சான் பாருங்க ஒரு பல்டி, அதை தான் என்னால் பொறுக்க முடியவில்லை.

    கருத்துக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு