இன்று ஒரு குறள் !

திங்கள், ஏப்ரல் 20, 2009

கி.பி.2059லேயும் கலைஞர் ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுப்பார்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் வளவனூரில் நடைபெற்றது.

இதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,


ஆரம்ப காலத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி.



85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி.

---------------------------------------


18/04/09 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:



இலங்கை தமிழர்களுக்கு துரோகி நானா? டாக்டர் ராமதாசா? என்பதை உலகத் தமிழர்கள் நன்கறிவார்கள். 1956ம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவன் நான். ராஜபக்சே தொடுத்துள்ள போரை ஆதரித்து, போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றெல்லாம் கூறியவர் ஜெயலலிதா. அவருடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதிலிருந்தே உலகத் தமிழர்கள்-இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வார்கள்.
-----------------------------



மேலே ஒரு அமைச்சர் சொன்னது அடுத்து முதல்வரே சொன்னது. ஆக இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 1956 லிருந்து இலங்கை பிரச்சினைக்கு கலைஞர் குரல் கொடுத்திருக்காரு. இதில் யாருக்கும் ஐயமே வேண்டாம்.

இன்னுமொரு 50 வருடம் அவர் உயிரோடு இருந்தாலும், அப்பவும் அதாவது 2059 ம் வருடத்திலேயும் அவர் குரல் கொடுப்பார். அதிலேயும் சந்தேகம் வேண்டாம்.

அப்ப பிரச்சினை என்னடானு கேட்கிறீங்களா?

கேள்வி ரொம்ப சிம்பிள்?

எப்ப அவர் செயல்படுவார்?

வெறும் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டு எப்போது அவர் ஈழப்பிரச்சினைக்கு செயல் படுவார்.


ஒரு ஏரியா இன்ஸ்பெக்டரிடம் ஒருவன் கேட்டானாம், ”இங்கே ஒரே திருடர்கள் பிரச்சினை அதி்கமா இருக்கே அதைப் பத்தி உங்களுக்கு அக்கறை இல்லையா”னு.

அதற்கு அவர் சொன்னாராம், ”நான் சிறுவனயிருக்கும் போதே இந்த திருட்டுத்தனங்கள் பிடிக்காமல் என் நண்பர்கள் மத்தியிலே பேசியிருக்கிறேன். இப்போதும் மாலை நேரங்களில் நண்பர்கள் மத்தியில் இதைப்பத்தி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு அக்கறை இல்லையானு எப்படி நீ கேக்கலாம்னு” சொன்னராம்.

இதுக்கும் அதுக்கும் என்ன வேற்றுமை இருக்கிறது.

வாழ்க பேச்சுரிமை !
அதாவது பேச மட்டுமே உள்ள உரிமை !

சனி, ஏப்ரல் 18, 2009

இந்த தேர்தலில் யாரை ஆதரிக்கலாம் ! சிந்திப்பீர் !!


இப்போது வந்திருக்கும் இந்த பாராளுமன்ற தேர்தல், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு விசித்திரமான் தேர்தல் என் சொல்லலாம்.

பொதுவாக தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே, பெரும்பாலான மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு எடுத்து தேர்தலுக்காக காத்திருப்பர். ஆனால் இம்முறை வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் எந்த முடிவும் எடுக்க இயலாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏன், என்ன காரணம்?

மிக நீண்ட காலமாகவே, மக்களுக்கு ’நல்ல கட்சிகளில் இது மிக நல்லது’ என்று தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாமலே போனது. அதனால் ’(தரங்) கெட்ட கட்சிகளில் இது கொஞ்சம் தேவலைப் போல் இருக்கிறது’ என்று தான் தேர்ந்தெடுத்து வந்தனர். அதற்கு அளவுகோலாய் சட்டம்- ஒழுங்கு, ஊழல், வாரிசு அரசியல் என்பன போன்ற உள்நாட்டு பிரச்சினைகளே இருந்தது.

ஆனால் இம்முறை அதிலும் சிக்கல்.

இந்த பிரச்சினைகளோடு இன்னொரு பிரச்சினையாய், எல்லாவற்றையும் விட தலையாய பிரச்சினையாய், நம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர் பிரச்சினையாய், நம் இனப்பிரச்சினையாய் ஈழத்தமிழர் பிரச்சினை முதலில் வந்து நிற்கிறது.

சில நாட்கள் முன்பு வரை, ஈழத்தமிழர் பிரச்சினையில் மீசை துடித்து, நரம்புகள் புடைத்த தலைவர்கள் எல்லாம் தேர்தல் என்றவுடன் பணம் பதவி செல்வாக்கு போன்ற சுயநலன்களை மனதில் கொண்டு பம்மி, பதுங்கி, பின்வாங்கி, வாலை மடித்து தன் பின்னங்கால்களின் இடையே வைத்துக்கொண்டு, சீட்டு எலும்புகள் போடும் எஜமானர் வீட்டைச் சுற்ற ஆரம்பித்த விட்டனர். அதற்கு முதலாளிக்கு விசுவாசமாக ஒரு சால்ஜாப்பு அறிக்கை வேறு .

அதே போல் சில பதிவர்களும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக சிங்கம் போல் கர்ஜித்து, இனப்படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களையும் அதற்கு கை கட்டி வாய் பொத்தி ’ஆமாஞ்சாமி’ போட்டவர்களையும், வார்த்தைகளால் வறுத்து எடுத்தவர்கள், இப்போது தங்களின் கட்சிப்பாசம் தலை தூக்க , அவர்களின் கடந்த கால துரோக செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டிகொண்டும் மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் எழுதி அதற்காக கஷ்டப்பட்டு காரணங்களை தேடித்தேடி கண்டுபிடித்து கூறீ தன்னைத்தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.


இந்த தேர்தலில் நம் முன் தொக்கி நிற்கும் தலையாய கேள்வி, யார் வர வேண்டும்? என்பதல்ல யார் வரக்கூடாது? என்பதே.


கூப்பிடு தூரத்தில் நம் இனம், பெண்கள் குழந்தைகள், முதியோர்கள் என்று பேதம் இல்லாது கொத்து கொத்தாக வேட்டையாடப் பட்டபோது,

அதை தடுத்து நிறுத்த வேண்டி தமிழ் உணர்வாளர்கள், உணர்வை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பற்பல அறப்போராட்டங்களை நடத்தியபோது,

அறப்போராட்டம் ஆட்சியின் மமதையை கலைக்காது . தமிழ் இனமே பொங்கி எழுந்தால்தான் விடிவு ஏற்படுமென்று வேள்வித்தீ மூட்டி, அதில் நெய்யாய் முத்துக்குமரன், தன்னையே பலியிட்டுக் கொண்டபோது,

அதன் பொருட்டு தமிழ்நாடே கொந்தளித்த போது, இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அரசினரை பார்த்து மன்றாடியபோது


இரக்க குணமற்ற, ஆணவம் மிகுந்த காங்கிரஸ் அரசு இனப்படுகொலையை தடுத்து நிறுத்த எந்த முயற்சியையும் செய்ய வில்லை என்பது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு ஆயுதம் தந்து உதவுவதையும் நிறுத்தவில்லை.

தமிழ் நாட்டு திமுக அரசோ மத்திய காங்கிரஸ் அரசை உரிய முறையில் அழுத்தம் கொடுத்து வற்புறுத்தவில்லை அவ்வப்போது கோபம் கொண்ட மக்களை சாந்தப் படுத்த கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புக்கு சப்பாணி ஆட்டம் ஆடினார்.

அப்போது பொங்கினோமே,

இந்த இரண்டு அரசும் ஒழிய வேண்டும் என்று வயிறெரிந்து சாபமிட்டோமே,

சோனியா விரோதி, கருணாநிதி துரோகி என இனங்கண்டு முழங்கினோமே,

அதே போன்ற கையறு நிலை மீண்டும் வர வேண்டுமா?

வேண்டாம், இந்த காங்கிரஸ் கூட்டணி.
இவர்கள் ஆட்சிக்கு இனி எப்போதும் வரக்கூடாது.
தமிழன் கிள்ளுக்கீரை அல்ல என்று எல்லோருக்கும் உணர்த்துவோம்.

சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆபத்தாம் அதனால் மீண்டும் காங்கிரஸ் திமுக வரணும் என்கிறார்கள், சிலர்.

சேதுத் திட்டம் நின்றாலும் பரவாயில்லை அதற்கடுத்த முறை ஆளும் கட்சி மாறினால் மீண்டும் திரும்ப தொடங்கலாம்.

ஆனால் தமிழ் இனபிரச்சினைக்கு காத்திருக்க முடியாது ஏனெனில் அதற்குள் அங்கு நம் இனம் அழிந்து போய் புல்லு முளைத்திருக்கும்.

சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!

திங்கள், ஏப்ரல் 13, 2009

கலைஞரின் கேள்வி பதிலும், அப்பாவி தொண்டனின் பதில் கேள்வியும்






கேள்வி: போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும்- தவிர்க்கப்படாத நிலையில் முடிவொன்று ஏற்பட்டால், அப்போது பிரபாகரனை மரியாதையோடு நடத்த வேண்டுமென்று நீங்கள் சொன்னதை திசை மாற்றி- பிரபாகரனை நீங்கள் ஏதோ இழிவுபடுத்தி விட்டதைப் போல பழ.நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்களே?.


பதில்: கடந்த 16.4.2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் இவர்களுடைய இன்றைய அன்பு தலைவி ஜெயலலிதா, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது" என்று தீர்மானம் முன்மொழிந்து கொண்டு வந்தபோது- இந்த வீராதிவீரர்கள், சூராதி சூரர்கள் எல்லாம் எந்த நாட்டிலே இருந்தார்கள்?

நீங்க இருந்த நாட்டிலேதான், அதே போல நீங்க பொத்திகிட்டு இருந்த மாதிரிதான் அவங்களும் இருந்தாங்க.

இப்போது பிரபாகரனின் கெளரவம் போய்விட்டது என்று அலறித் துடிப்பவர்கள்- அப்போது வாய் நீளம் காட்டாததற்கு என்ன காரணம்?

காட்டியிருந்தா பிளாஸ்திரி ஒட்டப்படும்னு உங்களுக்கு இருந்த அதே பயம்தான் அவங்களுக்கும் போலிருக்கிறது.
இன்றைக்கு ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக- கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு- நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?.

அவங்களும் உங்களைப்போல அடிமைதானே! என்ன எஜமானியம்மா தான் வித்தியாசம்.


கேள்வி: இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: பாண்டியனுக்கு "அவரை'' பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை என்ற கோபம் போலும்!. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!

இல்லையே உதாரணம் உதைக்குதே!

அலெக்ஸாண்டர் ஒரு நாட்டின் மன்னர் நம்ம ராஜபக்ஷே போல.

போரஸ் மன்னனும் நம் ஈழத்தின் தேசிய தலைவர் பிரபாகரனைப்போலவே ஒரு மன்னன்.
அலக்ஸாண்டருக்கு உதவிய அம்பி யும் மன்னனாயிற்றே ?!?!?!


கணக்கு வேற மாதிரி போவுதே தலைவா!


கேள்வி:- இலங்கை தமிழர்களைக் காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: அவருடைய முக்கியமான குறிக்கோளே நாம் ஆட்சியிலே இருக்கக் கூடாது என்பது தான். கடைசி வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே அமைச்சராகப் பொறுப்பேற்று, பதவிச் சுகம் அனுபவித்து விட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் அல்லவா?
அதிலேயும் நீங்க தானே தல முன்னோடி!

கடந்த பாஜக அமைச்சரவையில் இருந்து (இதிலே படுத்த படுக்கையாய் இருந்த மாறன் வேற ‘இலாகா இல்லாத மந்திரி’)
எல்லா சுகத்தையும் அனுபவிச்சிட்டு ஆட்சிக் காலம் முடியும் போது எஸ்கேப் ஆயி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியிலே சேரல.

அது போலத்தான் இதுவும்!

பதவி விலகுவதிலே எவ்வளவு அக்கறையாக உள்ள டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மத்தியிலே மந்திரியாக இருந்த காலத்தில், "இலங்கை தமிழர் பிரச்சினையிலே மத்திய அரசு நடந்துகொள்வது சரியல்ல'' என்று இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்!

இப்போ சொன்னீங்களே, இது மட்டும் நூத்திலே ஒரு வார்த்தை! உண்மையான வார்த்தை!!

ஆனா அதையும் கூட சப்தம் போட்டு சொல்லாதிங்க.

இந்த அறிக்கையிலே வைகோவை நீங்க கேட்டதையே சில வார்த்தை மாத்திப் போட்டு,ராமதாஸ் உங்களை திருப்பி இப்படி கேக்க போறாரு

"இன்றைக்கு ஒரு சில மந்திரி பதவிகளுக்காக கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது'