இன்று ஒரு குறள் !

செவ்வாய், ஜனவரி 07, 2014

பெரியார் சிந்தனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு அய்யா அவர்களுக்கு அஞ்சலி

திருவாளர் திருவாரூர் தங்கராசு அய்யாவின் பெயரைக் கேட்டாலே எனக்கு இரத்தக்கண்ணீர் காவியம் தான் நினைவில் வரும். அதில் வரும் ஒவ்வொரு வசனமும் சிரிக்க மட்டுமன்றி சிந்தனையை தூண்டவும் செய்யும்.
பெரியாரின் மரணத்திற்கு பின் அவருக்கும் தி. க. தலைவர் திரு கி. வீரமணிக்கும் கருத்தொற்றுமை இல்லாததால், அவர் திராவிடர் கழகத்தை விட்டு பிரிந்து விட்டதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
மேலும், எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது பெரியாரின் தமிழ் எழுத்து சீர் திருத்தத்தை சட்ட வடிவம் ஆக்கியதில் திருவாளர் தங்கராசு அய்யாவின் பணி அளப்பரியது.
அவர் தன் புகழ் நினைத்து இறுமாப்பு கொள்ளாமல் இறுதி வரை எளிமையாகவே வாழ்ந்தவர் என்றும் தனக்கு கிடைக்கும் நன் கொடைகளை கூட திராவிட இயக்கங்களுக்கே அர்ப்பணித்தார் என்றும் சொல்லப் படுகிறது.
அவரின் மரணச்செய்தி ஏனோ மனதை பாதிக்க தான் செய்தது.
அவரின் பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் என்றும் நம்மோடு  நிலைத்து இருக்கட்டும்.
 
இனி திருவாளர் தங்கராசுவை நன்கு அறிந்த தோழர் மதிமாறனின் எழுத்திலிருந்து :
தமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார்.
2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் கல்லடியும், செருப்பு வீச்சையும் எதிர்கொண்டு அஞ்சாமல் தொடர்ந்து பிரச்சாரமும் செய்தார்.
ராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் இதன் பெருமைகளும் அதனூடக பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்கர்களின் ஜாதித் திமிருமே, தமிழகத்தின் கலை வடிவங்களாக இருந்தன.
திரும்பும் திசையெங்கும் தெருக்கூத்து, நாடகம், தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், கதாகாலட்சேபம் என்று எளிய மக்களின் கலைவடிவங்கள் முதல் ஆதிக்ககாரர்களின் கலை வடிவம் வரை இதே கதைதான்.
தமிழகம் பல நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதி இந்துப் புராணக்குப்பைகளால் சக்கர வியூகம், பத்ம வியூகம் போன்று சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அந்த வியூகங்களை உடைத்து உள் நுழைந்தவர் பெரியார் ஒருவரே.
பெரியார் சிந்தனை மரபில் பல மேதைகள் உருவாகினர். அதில் மிக முக்கியமானவர் திருவாரூர் தங்கராசு அய்யா. (தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்)
இந்துப் புராணங்களும் ராமனும் ராமாயணமும் அவரிடம் பட்ட பாடு சொல்லி மாளாது. நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் இணைந்து அவர் நடத்திய ராமாயணம் நாடகம் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. ரத்தக்கண்ணீரில் அவருடைய பகுத்தறிவு வசனங்கள் இன்றும் என்றும் அது ஒரு பாடம்.
பள்ளிப் படிப்பை ஆரம்ப நிலையில் மட்டுமே படித்த திருவாரூர் தங்கராசு அவர்கள் தமிழ் புராணக்குப்பைகள் மேல் நடத்திய தாக்குதலை தடுக்க, எந்த பெரிய இந்துக் கண்ணோட்டம் கொண்ட மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களாலும் முடியவில்லை.
அவர் எழுதிய சிவனடியார் வரலாறு, சிவா விஷ்ணு லீலைகள் சேக்கிழரையும் பெரியபுராணத்தையும் சைவ சமயத்தையும் சந்தி சிரிக்க வைத்தவை.
நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் ‘உன் முதுகையே உன் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக முதுகே இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோல்தான், கடவுளை பார்க்க முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?’ என்று கேட்டார்.
அதற்கு அய்யா தங்கராசு சென்னை எண்ணூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தெருமுனைக் கூட்டத்தில், இப்படி பதிலளித்தார்:
“முதுகை மட்டுமல்ல, ஒருவன் அவனுடைய ஆசனவாயைக் கூட அவன் கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. அதுக்காக அதான் கடவுள் என்று சொல்ல முடியுமா? கண்ணாடி உதவியிருந்தால் அவனவன் முதுகையும் ஆசன வாயையும் கூட அவன் கண்களால் பார்க்க முடியும். எத வைச்சி பாரத்தால் உன் கடவுள் தெரிவான்.” என்றார்.
எழுத்து, பேச்சு என்று மட்டமல்லாமல், அந்தக் காலத்தில் பெரியாருக்கு எதிராக பேசியவர்கள் கூட்டத்தில் புகுந்து, கலகம் செய்ததிலும் அய்யா தங்கராசுவின் செயல் போற்றுதலுக்குரியது.
பெரியாரின் தீவீரத் தொண்டரும், திருவாரூர் தங்கராசின் சிஷ்யருமான திருச்சி வீ.அ. பழனியுடன் சேர்ந்து கொண்டு எதிரிகளோடு அவர் நேரடியாக மோதிய சம்பவங்களும் உண்டு.
இந்து மகா சபை தலைவர் மதுரை சிவனாண்டித் தேவர் என்பவர், பெரியாரை திட்டி ‘கருப்புச் சட்டைக்காரனுக்கு என்ன தெரியும்? அரிச்சுவடி பாடத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம். வரச் சொல்..’ என்று சவால் விட்டு பேசிக் கொண்டிருந்தபோது, பழனியுடன் மேடையருகே சென்று, பழனி மேடையில் ஏறி சிவனாண்டித் தேவர் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடிங்கி கேள்வி கேட்டவுன், கொத்தளித்தது அங்கிருந்த கூட்டம்.
“நீ தானே அரிச்சுவடி சொல்லிக்கொடுக்கிறேன்னு சொன்ன.. சொல்றா.. இல்ல நான் உனக்கு சொல்லிக் கொடுக்கட்டுமா?” என்றதும்.. அதுபோலவே பெரியாரை இழிவாக பேசிய விபூதி வீரமுத்துவை அய்யா பழனியும் மற்றத் தோழர்களும், மேடைஏறி வீரமுத்துவிற்கு எருக்கம் பூ மாலை போட்டதும்… பிறகு அவனை ‘சிறப்பாக’ கவினத்ததிலும்… அய்யா திருவாரூர் தங்கராசுவின் பின்னணி முக்கியமானது.
**
பெரியார் சிந்தனையின் சிறப்பே தர்க்கம் (Logic). எவ்வளவு பெரிய விசயத்தையும் ஒரே ஒரு கேள்வியில் கந்தலாக்குவது.

பெரியாரின் அந்த மரபு திருவாரூர் தங்கராசு அய்யாவிடம் நிரம்பி இருந்தது.
சாதாரண பொதுக்கூட்டத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்டார் அய்யா தங்கராசு:
“ராமன் காட்டுக்குப் போறேன்னுதானே கிளம்பினான். அயோத்திக்கு எந்தப் பக்கம் காடு இருக்கு? வடக்கு பக்கம்தானே.. இமய மலையே அயோத்திக்கு வடக்குல தானே இருக்கு. அப்புறம் எதுக்குடா ராமன் காட்டுக் போறேன்னு தெற்கு பக்கம் வந்தான்? திருட்டுப் பய.. அதுலதான் நமக்கு எதிரான அரசியல் இருக்கு”
திருவாரூர் தங்கராசு அவர்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளியின் மரணம், மாற்று சிந்தனையாளர்களுக்கு பேர் இழப்பு.
 

8 கருத்துகள்:

  1. பெயரில்லா1/07/2014 08:26:00 PM

    சிறப்பாக உள்ள நினைவுகள். இன்று இத்தகையோர் இல்லாததால் தில்லையே மொத்தமாக சுருட்ட படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஆனாலும் கவலைப் பட தேவை இல்லை. மீண்டும் தோன்றுவார்கள் இன்னும் அதிக அளவு தீரத்தோடு

      நீக்கு
  2. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இன்னும் எத்தனை பெரியார்கள் தேவையோ மூட நம்பிக்கையில் மூழ்கி தூங்கி வழியும் தமிழனை எழுப்பவதற்கு.

    பெரியார் சிந்தனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு அய்யா மறைவு அஞ்சலி பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருதுரைப்பிற்கும் நன்றி திரு மாசிலா

      நீக்கு
  3. மிகப் பெரிய இழப்பு...

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருதுரைப்பிற்கும் நன்றி திரு தனபாலன் அவர்களே !

      நீக்கு
  4. நல்லதொரு, அருமையான மனிதரைப் பற்றிய பதிவு, பகிர்வு! இழப்பிற்கு ஈடு இல்லைதான்!

    பதிலளிநீக்கு