வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வியாழக்கிழமை, மே 8, 2008 | |
எய்ம்ஸ் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரும் மோதலாக வெடித்தது.
இந்த நிலையில், எய்ம்ஸ் மாணவர்கள், வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதற்கு வேணுகோபால்தான் காரணம், அவர்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருகிறார் என்று அன்புமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும், வேணுகோபாலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையிலும் இறங்கினார் அன்புமணி. அதன் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர்.
அதன்படி 65 வயதை டாக்டர் வேணுகோபால் தாண்டி விட்டதால், அவர் இயக்குநர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறி இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.
வேணுகோபால் தாக்கல் செய்த மனுவில், தனது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பதாகவும், இந்த நிலையில் சட்டத் திருத்தம் மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹரிஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது, இது சட்டவிரோதமானது. மனுதாரரை மட்டுமே குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மிகவும் பாரபட்சமாக, தன்னை குறி வைத்து இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.
இந்த வழக்கிலும், எய்ம்ஸ் ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள இதே வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வரும் வரை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக யாரையும் மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநராக டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது। மேலும் ஜூலை மாதம் வரை அவர் தொடர்ந்து பதவி வகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
--தனியொரு மனிதனுக்காக (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ), ஒரு நாட்டின் சட்டத்தையையே திருத்தும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் இனியாவது திருந்தினால் சரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக