நேற்று கடைத்தெருவில் எதேச்சையாக காதில் விழுந்த இரு நண்பர்களின் உரையாடல். வெளி நாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்த ஒருவர் , தனது பால்ய நண்பனை சந்தித்திருக்கிறார் என்பது அவர்களின் உரையாடலின் மூலம் எனக்கு புரிந்தது.
அவர்கள் உரையாடலில் காதில் விழுந்த ஒரு பகுதி கீழே :
ஹேய் ஹவ் ஆர் யூ?
ஃபைன் நல்லாயிருக்கேன்பா
பாரின்லேர்ந்து எப்ப ரிட்டர்ன் ஆன?
2 நாள் ஆச்சி
ஹேவ் யு சம் காஃபி?)
வேணாம்பா தேங்ஸ்
ஓகே பா டைம் ஆச்சி
நாளைக்கு டெபனெட்டா நைட் டின்னருக்கு மீட் பண்ணுவோம்
கண்டிப்பா மீட் பண்ணுவோம்
பீச் ரெஸ்டாரண்ட்ல எய்ட் ஒ கிளாக்குக்கு ஷார்ப்பா வந்துடு
சரிப்பா
நான் வர லேட் ஆனாலும் வெயிட் பண்ணூ
கண்டிப்பா
பை!
பை!
சிகப்பில் இருப்பவை தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர் பேசியது, கருப்பில் இருப்பவை 'ஃபாரின் ரிட்டர்ன்' பேசியது
இதில் உள் நாட்டுக்காரரை விட வெளி நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர் நிறைய தமிழ் சொற்களை உபயோகித்தார்.
முதலாமரும் தமிழ்தான் பேசினார் உள் நாட்டு நண்பரை சந்தித்திருந்தாலும் அப்படிதான் பேசியிருப்பார் ஏனெனி்ல் அவரைப்பொறுத்தவரை அது தான் தமிழ்.
பேச்சு தமிழ்தான் எவ்வளவு வேகமாக மாறுகிறது. அன்றைய தமிழுக்கும், இன்றைய தமிழுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.
எங்களோட சின்ன வயசிலே அம்மாகிட்ட, 'இன்னைக்கி என்ன 'காலை சாப்பாடு'னு கேட்போம். அதையே எழுதும்போது, 'காலை உணவு' னு எழுதுவோம்.
இப்பல்லாம் பார்த்தீங்கன்னா, 'காலை சாப்பாடு' என்ற வார்த்தையே யாரும் பயன் படுத்தற மாதிரி தெரியல.
மம்மி, இன்னைக்கி என்ன டிபன்?
மம்மி, டுவல் ஓ கிளாக்குகெல்லாம் லன்ச் அனுப்பிடு.
மம்மி, ஈவ்னிங் டின்னருக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.
உணவு விடுதியில் கூட 'காலை உணவு தயார்', 'மதிய சாப்பாடு தயார்' என்று அறிவிப்பு பலகையில் எழுதுவது போய் 'டிபன் ரெடி', 'லன்ச் ரெடி' னு எழுத ஆரம்பிச்சிட்டாங்க.
இப்படித்தான் தமிழ் மொழி, கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டே வருது அதாவது தங்கலிஷ் மொழியா.
இந்த தங்கிலீஷ் மொழி வேகமா வளர்வதிலே, நம்ம தொலைக்காட்சிங்க பங்கு மிக மிக அதிகம். அதிலும் தொலைக்காட்சியில் சினிமாகாரங்க பேட்டினா சொல்லவே வேண்டாம்.
ஆன் த ஸ்பாட், பை த வே, பை தி பை, டயலாக் டெலிவரி, கெமிஸ்ட்ரி, பாடி லாங்குவேஜ், டரியல், பாண்டஸீ என்று 9௦% ஆங்கில கலப்போட நம்ம வீட்டு கூடத்திலே வந்து தங்கிலீஷ் பேசுறாங்க.
அதைப் பார்க்கிற நம்ம ஆளுங்களுக்கு இப்படி தங்கலீஷ் பேசினாதான் நாகரீகம்னு நினைச்சிக்கிட்டு அப்படியே பேச ஆரம்பிச்சி பழகிடுறாங்க
இப்படித்தான் பார்த்திங்கன்னா, போன வாரம், எங்க ஊரில மளிகைகடை வச்சியிருக்கிற தங்கவேலு அண்ணனை டவுன்பக்கம் பார்த்தேன்.
தங்கவேலண்ணே எங்க இந்த பக்கம்னு கேட்டா, அது சொல்லுது, "பொண்ணுக்கு கெமிஸ்ட்ரி பார்க்க வந்தேன்"னு. "எந்த கிளாஸ் படிக்குதுண்ணே அதோ, எதிர்த்தாப்பலே ஒரு புத்தக கடையிருக்கு வாங்க போய் பார்க்கலாம்"னா,
"அட போப்பா, பொண்ணுக்கு அலையன்ஸ் செய்யலாம்னு பையன் ஜாதகமும் பொண்ணு ஜாதகமும் எடுத்துகிட்டு கெமிஸ்ட்ரி பார்க்க ஜோசியரை தேடி வந்தா நீ பாட்டுக்கு புத்தகம் அது இதுன்னு முட்டள்தனமா பேசுறியே"னுட்டு என்னய ஒரு அல்ப புழுவைப் பார்க்கிற மாதிரி பார்த்திட்டு போயிடுச்சி.
இப்படி தான் எல்லோருமே நமக்கு நல்லா தெரிஞ்ச தமிழ் வார்த்தையை கூட அன்னிய மொழி வார்த்தையாலே அழிச்சிட்டு அது தான் நாகரீகம்னு நினைச்சுக்கிறோம்.
இப்ப சமீபத்தில கூட மீடியா மூலமா எல்லார் வாயிலும் புகுந்து புறப்படுற ஒரு வார்த்தை 'காமன் மேன்'. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டிங்கனா, பொது மனிதன், பொதுசனம், சாமான்யன், சராசரி மனிதன் அப்படினு சொல்லலாம்.
'அட அதான் இத்தனை வார்த்தைங்க தமிழ்லே இருக்கே அப்புறம் ஏன் காமன் மேன்னு சொல்லணும்'னு நீங்க கேட்டா, உங்களுக்கு நாகரீகம் தெரியலேனு சொல்லி ஒதுக்கி வச்சிட்டு போய்டுவானுங்க. அப்புறம் நீங்க ஒரு காமன் மேனாவே ஊருக்குள்ள நடமாடமுடியாது, ஆமாம்.
இது மாதிரி தான் நாம அன்னிய மொழி வார்த்தைகளை உருவி உருவி தமிழ் மொழியிலே சொருகிகிட்டு இருக்கோம். இன்னும் எத்தனையெத்தனை தமிழ் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளுக்கு பலியிடபோறோமோ தெரியல.
இப்படியே தொடர்ந்து போய்க்கிட்டிருந்தா நாளடைவில் நமது தாய்மொழியான தமிழானது, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற அன்னிய மொழி சொற்களையே சார்ந்து, தனது தனித்துவ சொற்களேயில்லமால் அழிந்து விட வேண்டியதுதான்
இதைத்தான் பாரதி 'தமிழ் இனி மெல்ல சாகும்' னு அன்றே சொன்னானோ?!