இது ஒரு உலகமகா விஷயமின்னு இதற்கொரு தீர்மானம் என்று பல்லை நற நறப்பவர்களுக்கு, ‘ஐயா நாங்கள் இங்கு உள்ளூரில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் முடித்திருத்தம் செய்துக்கொள்ள மாட்டோம். சில பல கிலோ மீட்டர் தூரத்தில் கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் தான் செய்து கொள்வோம் (இனப்பற்று?).
அதற்கு போய் வர காத்திருக்க என அரை நாள் விடுமுறை அம்பேல் ஆகிவிடும். இதனால் கடந்த மூன்று வாரங்களாக போக வேண்டும் என் நினைத்து நினைத்து முடியாமல் போய்விட்டது அதற்காகதான் இந்த தீர்மானம். இப்ப ஓகே வா ! ஹி.. ஹி..’
தீர்மானித்த மாதிரியே காலையில் கிளம்பி விட்டேன். அப்புறமென்று தள்ளிப்போட்டால் வேற வேலை வந்து இந்த வாரமும் போக முடியாமல் போய்விடும்.
ஏற்கனவே பணியிடத்தில் முடியை விலக்கிட்டு மூஞ்சை தேடுறானுங்க.
கடையில் கொஞ்சம்தான் கூட்டம். அங்கு பணிபுரியும் ஐந்து பேரில் ஒருவர் மட்டும் ஃப்ரீ. நான் வழக்கமாக மண்டையை கொடுப்பவரிடம் மூன்று பேர் வெயிட்டிங். நான் நான்காவது.
கடை உரிமையாளர், வேலை செய்யும் நான்கு பேர், மற்றும் வந்து போகும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அனைவரும் இலங்கையை சார்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் (ஈழத்தமிழர்கள்?).
சில மணித்துளிகளுக்கு பிறகு, என்னுடைய முறை வந்ததும், வாடிக்கையாக வெட்டுபவரின் முன் அமர்ந்து என் தலையை ஒப்படைத்தேன். வழக்கம்போல் என் தலையில் கை வண்ணம் காட்டியபடியே என்னுடன் உரையாட ஆரம்பித்தார்.
உரையாடல், வேலை, வெயில், சீஸன், சினிமா என்று எங்கெங்கோ தொடர்ந்து பின் நின்றது .
சிறிது நேர நிசப்தத்திற்கு பிறகு, “இந்தியாவில் ஏதுனும் விசேடமோ?” என்று வினவினார்.
எனக்கொன்றும் புரியவில்லை.
“என்ன கேட்டிங்க?” இது நான்.
பக்கத்தில் முடி வெட்டிக்கொள்ள வந்த இன்னொரு இளைஞன், “இல்லே அண்ணை, இந்தியாவில் எலெக்க்ஷன் ஏதும் வருதோ எண்டு கேட்டவர்” என்று விளக்கினார்.
அதற்கு நானும், “ ஆமாம்! இன்னும் சில மாதங்களில் பார்லிமெண்டுக்கு எலெக்ஷன் வருகிறது” என்றேன்.
உடனே அனைவரும் அர்த்தப்புஷ்டியோடு ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். எனக்கொன்றும் புரியவில்லை ‘எதற்கு அனைவரும் இப்படி நக்கலாக சிரிக்க வேண்டும்? ’
என் முழிப்பை பார்த்து விட்டு கடை உரிமையாளர் சொன்னார், “ஒண்றுமில்லை, தமிழ் நாட்டில் திடீரென்று எல்லா அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழரைப் பத்தி பேசுதே, அதற்கு என்ன காரணமென்று இதுவரைக்கும் புரியாமல் இருந்தது, அதுதான் ” என்றார்.
நானும் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு வெளியேறினேன்.
ஆக நம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு கண்டு ஏமாறும் தமிழ் நாட்டு மக்கள் போல் இல்லை.
இவர்களுக்கு அவர்களை புரிந்தே இருக்கிறது !