இன்று ஒரு குறள் !
வெள்ளி, ஏப்ரல் 23, 2010
"வயசானவன்னு கூட பார்க்காம........ "என்ற வசனத்தை தனக்கு மட்டுமே எழுதிக்கொள்ளக்கூடாது கலைஞர் அவர்களே!
மிகுந்த பணிச் சுமையின் காரணமாக இணைய உலகிற்கு படிப்பதற்கு மட்டுமே சில சமயம் வர முடிகிறது. கருத்தை எழுத கூட நேரம் இருப்பது இல்லை.
இடையில் எவ்வளவோ சம்பவங்கள் நம்மை சுற்றி நடந்து முடிந்து விட்டன.
கலைஞருக்கு சினிமா கலைஞர்களின் பாராட்டு விழா, அதில் அஜீத்தின் துணிகர பேச்சு, அதற்கு ரஜினியின் வெளிப்படையான ஆதரவு, அதன் பின்வினைகள், பிறகு மன்னிப்பு காண்டம் என்ற கூத்துகள் ஒரு புறம்
நித்தியானந்தரின் ரஞ்சிதாவுடனான நித்தியானந்தம், அதில் சன் டீவியின் அத்து மீறல், சன் டீவி, நக்கிரனின் பிட்டு படம் போன்ற ஆபாசங்கள் ஒரு புறம்
இவைகளைப்பற்றி என் மனதில் அவ்வப்போது எழுந்த எண்ணங்களை, இணையத்தில் பகிர்ந்து கொள்ள இயலாமல் போனதால் யாருக்கும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை.
ஆனால் சமீபத்தில் ஒரு மூதாட்டியார், மருத்துவ சிகிச்சைக்காக முறையான ஆவணங்களோடு வந்தும்,
'வந்தாரை வாழ வைக்கும் சிங்கார தமிழக'த்தின் தலைநகரத்தில் விமானத்தை விட்டு இறங்க கூட அனுமதிக்கப்படாமல்,
சில மணி நேரங்கள்அலைக்கழிக்கப்பட்டு, திரும்ப நாடு கடத்தப்பட்டாரே,
இதற்கு கூட ஒரு நாலு வரியில் என் கண்டனத்தை பதிவு செய்யாவிடில் நான் மனிதனாக இருப்பதற்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என்பதாலேயே இந்த பதிவு.
நடந்தது, மன்னிக்க முடியாத தவறு என்பதை காங்கிரஸ்காரனையும் அதிமுககாரனையும் தவிர அனைவராலுமே ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால் காரணம் நான் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல, செய்தவனுக்கு தைரியம் இல்லை. அடுத்தவனை சுட்டிக் காட்டியே வழமைப் போல் அரசியல் செய்கின்றனர்.
ஆனால், எப்படி பார்த்தாலும், சம்பவம் நடந்த சமயம் ஆட்சிக்கட்டிலில் வீற்றிருப்பவர்தான் தார்மீகமாயினும் பொறுப்பேற்றாக வேண்டும் என்று சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.
ஆனல் இவரோ தனக்கு நடந்தது ஒன்றுமே தெரியாது என்று கூறுகிறார்.
ஆனால் இவரின் அதிகாரத்தின் கீழ் பணியாற்றும் காவல் துறையோ, அன்றைய தினம் விமான நிலையதையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது, நல்ல முரண்பாடு.
ஒரு வேளை இவர் சொல்வது உண்மையாகவே இருந்து, இவரின் கட்டுப்பாட்டிலே மாநில நிர்வாகம் இல்லையென்றால், 'ஐயோ பாவம்' அப்போதே ஞானி சொன்னதைக் கேட்டிருக்கலாம். ஓய்வு எடுக்க போயிருக்கலாம்.
ஞானி, அப்படி சொன்னபோது அவரின் சட்டைக்குள் பூணூலைத் தேடிய கழக குஞ்சுகள் இப்போது எங்கே காணாமல் போய்விட்டார்கள் ?
ஏன் என்னிடம் சொல்லி விட்டு வரவில்லை? என்று கேட்கிறார்.
ஏன் உம்மிடம் சொல்ல வேண்டும்?
அவர் என்ன உமது காசில்லா வைத்தியம் செய்துக்கொள்ள வந்தார்,
உம்மிடம் அனுமதி கேட்டு வருவதற்கு !
இந்தியாவில் நுழைய தங்குவதற்கு விஸா தேவை. அதை முறையாக இந்தியதூதரகத்தில் பெற்றாயிற்று, அப்புறம் என்ன?
எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் 2002ல் ஜெயலலிதா எழுதிய குறிப்புதான் காரணம் என்று வெக்கமில்லாமல் சொல்கிறார்.
அந்த குறிப்பு என்ன, நாம் கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் எழுதிய ஓலைக்குறிப்பா, அதை கண்ணில் ஒற்றி நிறைவேற்றுவதற்கு !
அரசு ஊழியர்களுக்கு எதிரான அவரது அரசு உத்தரவை உம்மால் எப்படி மாற்ற முடிந்தது?
சன் டீவியை பாதிக்கும் அரசு கேபிள் டீவி உத்தரவை உம்மால் எப்படி நிறுத்திவைக்க முடிந்தது?
அஞ்சா நெஞ்சனின் தினகரன் வழக்கு, தா.கிருஷ்னன் கொலை வழக்கு மேம்பால ஊழல் வழக்குகளை எப்படி அய்யா உம் இஷ்டம் போல வளைக்க முடிந்தது.
பிறகு ஏனய்யா இந்த குறிப்பை மட்டும் உம்மால் மாற்ற இயலவில்லை !
ஜெயலலிதா ஒன்றும் தமிழர்களுக்காவே வாழும் தமிழ்த்தாய் என்று நீர் உள்பட யாருமே எதிர்பார்த்ததில்லை.
அவரும் தேர்தல் நேரம் தவிர அப்படி ஒன்றும் சொல்லி உம்மைப் போல் பிலிம் காட்டுவதில்லை.
தவிர, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது.
அதை ஒரு சாக்காக சொல்கிறாயே உமக்கே உம்மைப் பார்த்தால் சிரிப்பாக இல்லை!
சரி மத்திய அரசுக்கு அவர் எழுதிய குறிப்பு - மத்திய அரசால் ஏற்றுகொள்ளப்பட்ட குறிப்பு - பிறகு மாற்றவே முடியாத குறிப்பு
அந்த குறிப்பு அவரால் எழுதப்பட்டபோது மத்திய அரசில் யார் இருந்தது?
வாஜ்பாயி தலைமையில் இருந்த அந்த மத்திய அரசில், மாறன், டி ஆர் பாலு என்று உமது அமைச்சர்கள் தானே கோலோச்சிக்கொண்டிருந்தனர்.
பின் எப்படி அந்த குறிப்பை ஏற்றுக்கொள்ள அனுமதித்தீர்.
அது எந்த காலகட்டம் என்று மறந்து விட்டதா அய்யா ?
பார்த்தோர் நெஞ்சங்களை பதற வைத்த, கேட்டோர் மனங்களை கதற வைத்த, சன் டீவியின் சீரிய இயக்கத்தில் உருவான, தங்களின், 'ஐயோ காப்பாத்துங்க... காப்பாத்துங்க....' என்ற புகழ் பெற்ற, வசனம் படைக்கப்பட்ட காலம் தான் அது.
மாறன் மற்றும் டி ஆர் பாலு , மத்திய மந்திரிகள் என்ற கோதாவில் போலீஸ் அதிகாரிகளோடு எல்லாம் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டாங்களே,
அப்புறம் வாஜ்பாயி கிட்டே அழுவாஞ்சி புகார் கொடுத்து ஜெ அரசை டிஸ்மிஸ் செய்ய சொன்னாங்களே.
வாஜ்பாயும் மாநில அரசை விளக்கம் எல்லாம் கேட்டாரே
இப்போது ஞாபகம் வருகிறதா அய்யா
கடைசியாய் ஒரு வார்த்தை
"வயசானவன்னு கூட பார்க்காம........ " என்ற வசனத்தை தனக்கு மட்டுமே எழுதிக்கொள்ளக்கூடாது கலைஞர் அவர்களே!
குறிச்சொற்கள் :
அரசியல்,
கலைஞர்,
தமிழகம். இலங்கை,
பார்வதியம்மாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)